Sunday, January 10, 2010

அகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்

(Zurich, 7-1-2010) சூரிச் நகரில் சட்டவிரோதமாக்கப்பட்ட அகதிகளுக்கு ஜெர்மன் மொழிக் கல்வி போதித்து வந்த பாடசாலை, சுவிஸ் பொலிசாரினால் சூறையாடப்பட்டது. முன்னறிவித்தல் இன்றி அதிரடியாக நுழைந்த போலிஸ் பட்டாளம், பாடநூல்களையும், ஆசிரியர்களின் உபகரணங்களையும் அபகரித்து சென்றது. பாடசாலைக் கட்டடத்தை மீண்டும் பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக, ஜன்னல்களை கூட உடைத்து பெயர்த்து சென்றுள்ளனர். பாடசாலைக் கட்டிடமும் சேதமாக்கப்பட்டது. "ரோபோ காப்" சினிமாவில் வருவது போல உடையணிந்த கலவரத்தடுப்பு போலீஸ்காரர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்களை "பேப்பர் ஸ்ப்ரே" பாவித்து விரட்டி அடித்தனர்.

ஆபத்தான மின் இணைப்பு காரணமாக, அயல் வீட்டுக்காரரின் முறைப்பாட்டின் பேரில், தாம் இந்த நடவடிக்கை எடுத்ததாக, போலிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தது. அகதிகளின் பள்ளிக்கூடத்திற்கு சூரிச் நகரசபை அனுமதி கொடுக்காத காரணத்தால், சட்டபூர்வ மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில ஆர்வலர்கள் தாமாகவே, மின்சார இணைப்புகளை அமைத்துக் கொண்டனர். இதுவே "ஆபத்தான மின்சார இணைப்பு" என்ற நொண்டிச்சாட்டை வைத்து போலிஸ் நடவடிக்கை எடுக்க காரணமானது.

சூறையாடல் குறித்து கருத்து தெரிவித்த தொண்டர் ஆசிரியர்கள், போலிஸ் கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. "போலிஸ் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தமக்கு அறிவிக்கவில்லை." என்றனர். "அப்படியே ஆபத்தான மின்சார இணைப்பு காரணம் என்றாலும், பாடநூல்களையும், பிற உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று வினவினர். பல தொண்டர்கள் தமது சக்திகளை ஒன்று திரட்டி, உருவாக்கிய பாடசாலையை ஒரு சில மணித்தியாலங்களில் தகர்த்து விட்டார்கள். பல்லாண்டுகளாக பாடுபட்டு, பல ஆயிரம் செலவழித்து சேகரித்த பாடசாலை உபகரணங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன என முறையிட்டனர். சுவிஸ் போலிசின் அத்துமீறல், அகதிகளை படிக்க விடாமல் தடுக்கும் அடக்குமுறையாகவே பார்க்கின்றனர்.

Autonomous School Zurich (ASZ) பல வருடங்களாக அகதிகளுக்கு இலவச ஜெர்மன் மொழிக் கல்வி போதித்து வந்தது. "அனைவருக்கும் கல்வி" என்ற சுவிஸ் இடதுசாரி அமைப்பு அந்தப் பாடசாலையை நிர்வகித்து வந்தது. தஞ்சமனு நிராகரிக்கப்பட்டு, விசா இன்றி வாழும் அகதிகள் சாதாரண பாடசாலைகளில் பயில உரிமை இல்லை.
நன்றி:கலையகம்

No comments:

Post a Comment