Sunday, September 13, 2009
இரவும் பகலும் துன்புறுத்தும் படையினர், எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: முகாம் நிலை தொடர்பாக இளம் பெண் தகவல்
இரவும் பகலும் சிறிலங்காப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால் துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
"எதற்காக நாம் இவ்வாறு நடத்தப்படுகின்றோம் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள்" எனவும் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு முகாம் நிலைமைகள் தொடர்பாக சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.
போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் சீறிவரும் ஆட்டிலறிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.
போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.
அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.
வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் இடம்பெயர்ந்த மக்களில் 5 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுகந்தினியின் சோகக் கதை போல பல கதைகள் இருக்க முடியும்.
தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மலசலகூடங்கள் நிரம்பி வழிகின்றன. குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு உள்ளது. சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. ஊடகவியலாளர்கள் இந்த முகாம்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.
மெனிக் பாம் தடுப்பு முகாமில் உள்ள ஒருவர் முகாம் நிலை தொடர்பாக செல்லிடப்பேசி மூலமாக தெரிவிக்கையில், முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். முகாமுக்குள் கடத்திச் செல்லப்பட்ட செல்லிடப்பேசி ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்த அவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
"நாம் அங்கு முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாருக்கும் சொல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். ஆனால் இது ஒரு சிறைச்சாலையாகவே இருக்கின்றது. இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. அத்துடன் போதுமானளவு குடிநீரும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.நன்றி:புதினம்
Friday, September 4, 2009
மும்பையில் கணபதி ஊர்வலம்.
இது விநாயக பெருமானின் உர்வலமா? இல்லையென்றால் இறுதி ஊர்வலமா? இதையெல்லாம் பார்க்கும் போழுது நாங்கள் நாத்திகனாக இருப்பதில் பெருமையடைகிறோம்,
Wednesday, September 2, 2009
சே குவேராவைப் படுத்திய நோய்
புரட்சி நாயகன் சே குவேராவை இரண்டு விஷயங்கள் தீவிரமாகத் துரத்தின. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று ஆஸ்துமா. உலகம் முழுவதும் சுமார் 30 கோடிப் பேரைப் பாடாய்ப் படுத்திவரும் நோய் இது. இந்தியாவில் சுமார் 4 கோடிப் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
உலக ஆஸ்துமா தினம் உலகம் முழுவதும் மே மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்தத் தினத்தைப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் ஆஸ்துமாவை உங்களால் கட்டுப்படுத்து முடியும் என்பதுதான் இந்த வருட தீம்.
ஆஸ்துமா என்றால் என்ன?
மூச்சுக் குழல்களின் உட்புறச் சுவர்கள் வீங்கிக் கொள்வதுதான் ஆஸ்துமாவுக்குக் காரணமாக அமைகிறது. எதனால் மூச்சுக் குழல்கள் வீங்குகின்றன என்பதற்கு இதுவரை சரியான விளக்கமில்லை. சிறுவயதில் அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களோடு புழங்குவது, புகைபிடி்பபது, சுற்றுப்புற சூழல் மோசமாக இருப்பது போன்றவற்றால், பிற்கால வாழ்க்கையில் அவர்களுக்கு ஆஸ்துமா வரலாம். பாரம்பரை பங்கும் இதில் உண்டு.
மூச்சுக் குழல்கள் வீங்குவதால், அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள் உள்ளே நுழையும்போது, அவை மேலும் வீங்கி காற்று உள்ளே நுழைவதையே தடுத்து விடுகின்றன. இதனால் நுரையீரலுக்குச் செல்லும் காற்று மிகவும் குறைகிறது. இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், மார்பில் தசைப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.
ஆஸ்துமா தாக்குதல் என்பது சிலருக்கு லேசாகவும் சிலருக்குத் தீவிரமாகவும் இருக்கும். சிலருக்கு உயிரைப் பறிக்கும் அளவுக்கும் இருக்கும். அதனால், ஆஸ்துமா இருப்பவர்கள் உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவரை சந்தித்தாக வேண்டும். ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய சூழலில் இருக்கும் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் ஆஸ்துமாவை உருவாக்குகின்றன. சிலருக்கு வைரஸ் தாக்குதலால் ஆஸ்துமா ஏற்படலாம். சிலருக்கு உடல் ரீதியாக தீவிரமாக செயல்பட்ட பிறகு ஆஸ்துமா ஏற்படலாம். உதாரணமாக, உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஆஸ்துமா தாக்குதல் இருக்கும்.
பரவலாக, கீழ்கண்ட பொருள்களால் ஆஸ்துமா ஏற்படுவதாக வைத்துக்கொள்ளலாம்.
· அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்கள்.
· கரப்பான்பூச்சி
· மிருகங்களின் முடிகள்
· மரங்களிலும் புல்களிலும் இருக்கும் துகள்கள்
· காற்று மாசுபாடு
· புகை பிடிப்பது
· பருவநிலை மாற்றம்
· குளிர்ந்த காற்று
· அடத்தியான வாசனை
· வாசனை திரவியங்கள்
· பயங்கரமாகச் சிரிப்பது, அழுவது
· வைரஸ் தாக்குதல்
இம்மாதிரி பொருள்கள் ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப் பட்டவருக்கு இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, மார்புப் பிடிப்பு போன்றவை ஏற்படும். எல்லா தாக்குதலிலும் மேலே சொன்ன எல்லாமும் ஏற்படாது.
ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். இதனால், ஆஸ்துமாவிற்கான மருத்துவம் என்பது நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் மருத்துவம்தான். முதல் கட்டமாக, உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆஸ்துமாவால் தாக்கப்பட்டவர், உடனடியாக அந்தத் தாக்குதலில் இருந்து விடுபடுவார். இவை பெரும்பாலும் மூச்சில் உறிஞ்சக்கூடிய மருந்துகளாகவே இருக்கும். இவை நேரடியாக நுரையீரலைச் சென்றடைந்து, காற்று செல்லும் வழிகளைத் திறக்கும். இதனால், எளிதாக மூச்சுவிட முடியும்.
தொடர்ந்து ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு நீண்ட கால மருத்துவம் தேவைப்படுகிறது. மருந்துகளின் மூலம் மூச்சுப் பாதையின் வீக்கம் குறைக்கப்படுகிறது. மிகக் குறைந்த மருந்துகளின் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆஸ்துமாவுக்கான மருத்துவத்தின் உச்சகட்ட நோக்கம்.
ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமால், சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, தொடர்ந்து உடல்நலத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு எதனால் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்க்க வேண்டும். இதனால், தாக்குதலின் எண்ணிக்கை மிகவும் குறையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அறிகுறிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். காரணம், ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்தால் பிறக்கும் குழந்தை ஊனமுற்ற குழந்தையாகப் பிரக்கலாம். ஒரே ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆஸ்துமா மருந்துகள் கர்ப்ப மான பெண்களிடம் பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதுதான்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் விளையாட்டு, தீவிர உடற்பயிற்சி இவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதனாலும் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படலாம். தவிர்க்க முடியாமல் ஈடுபட்டால், எப்போதும் மருந்துடன் கூடிய இன்ஹேலரைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
நன்றி:தெனாலி.
Tuesday, September 1, 2009
அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !
கசங்கிக் கிடக்கும் பழந்துணியைப் போல அந்தப் பாட்டியின் தோற்றம் மார்க்கெட் சுவரோரம் தென்படும். அடிக்கடி கலைந்து போகும் சுண்டல் வற்றலை விட அதைக் கூறுபிரிக்கும் அவளது கைகளில் அதிகச் சுருக்கல்கள். இமைகளைக் கூட வேகமாக நிமிர்த்த முடியாதபடிக்கு தளர்ந்து போயிருந்தது அவளது உடல். வறுத்தெடுக்கும் வெயிலில் சுருளும் சுண்டை வற்றலை வைத்துக் கொண்டு, தலையில் சீலைத் தலைப்பை போட்டபடி அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை விட அவளும் ஒரு கூறுகட்டிய சுண்டை வற்றலாக காட்சியளிப்பாள். இந்த வயதிலும் இவள் உழைத்து வாழும்படி என்ன கஷ்டமோ ? ஓய்வெடுக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு உழைப்பா ? எனப் பலவாறு பாட்டியின் மேல் பரிதாபம் மேலிடும்.
எனக்கு சுண்டை வற்றல் தேவையோ இல்லையோ, அந்தப் பாட்டிக்காகவே அடிக்கடி வாங்குவதுண்டு. அன்றும் அதே மனநிலையோடு பாட்டியின் தரைக்கடைப் பக்கம் போனேன். குத்துக்கால் போட்டுக் கொண்டு நான் பேச ஆரம்பித்தவுடன், நடுங்கும் முகத்தை ஒருவாறாக நேர்ப்படுத்திக் கொண்டு இமைகளை குழப்பி ஒரு வழியாக பார்வையை ஊன்றினாள் பாட்டி. “ரெண்டு கூறு” என்றேன். எடுத்துக்க ! என்பது போல பிதுங்கிய உதட்டசைவில் தாடையை அசைத்தாள் பாட்டி. “எத்தன ரூபாய் ?” என்றவுடன், “ஆங்.. பத்து” என்று உதடுகளை உதறினாள். வாங்கிய கூறுக்கு பத்து ரூபாயைக் கொடுத்தவுடன், நடுங்கிய விரல்களால் பணத்தைப் பிடித்து விரித்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.
விரல்களின் நடுக்கத்துடனேயே அனிச்சைச் செயல் போல் அதை மடக்கி சுருக்குப்பையில் போட்டு சுமாராக கயிற்றை இழுத்து வைத்தாள். முதுமையின் அனுபவத்தையும் உழைப்பின் தீவிரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் இரக்கம் மேலிட பாட்டிக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து “பாட்டி இந்தா வச்சுக்குங்க” என்று நீட்டினேன். சட்டென எதுவும் புரியாத குழப்பத்தில் சுருங்கிய முகத்தை இன்னும் சுருக்கியபடி, சிரமப்பட்டு உற்றுப் பார்த்தாள் பாட்டி. “என்னாது.. அதான் காசு குடுத்தியே.. எனக்குதான் வயசாகிப் போயிடுச்சுன்னா நல்லா நீயுங் கெடந்து தடுமார்ற” உதடுகள் கோணலாய் போனதைப் பார்த்து, பாட்டி சிரிக்கிறாள் என்பது லேசாகப் புரிந்தது. “அதில்ல பாட்டி.. இதச் சும்மா வச்சுக்குங்க” என்று நான் கையை நீட்டியவுடன் அத்தனை பலம் பாட்டிக்கு எங்கிருந்துதான் வந்ததோ, கையை விலக்கி விட்டு சத்தமாக “தே.. என்னா சும்மா கெடைக்குதா உனக்கு காசு.. காசோட அருமை தெரியலியா.. ஒத்த ரூபா சம்பாதிக்க என்னா பாடுபட வேண்டியிருக்கு. நீ பாட்டுக்கு ஈஸியா தூக்கித் தர்ற.. ஹூம் இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு வலி, வருத்தம் எங்க தெரியுது.. உழைக்கிற காசுதாம்பா உடம்புல ஒட்டும்.. நல்ல புள்ளப்பா நீ..” என்று பணத்தை வாங்க மறுத்த பாட்டி எனக்கு புத்தி சொல்லி ஏதோ பெரும்பழியிலிருந்து தப்பியது போல முணுமுணுத்துக் கொண்டே வேறு வியாபாரத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். ரொம்பதான் பிடிவாதக்காரப் பாட்டி போல இருக்கு என்று போகிற போக்கில் பக்கத்தில் நின்றவர் தனது புரிதலுக்கு ஏற்றவாறு சிரித்துக் கொண்டு போனார்.
ஆனால், பாட்டியின் உணர்ச்சியோ உழைப்பின் அருமையையும், உழைக்கும் மக்களின் சுயமரியாதையையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவ இருந்தது. எப்படியாவது அடுத்தவன் பாக்கெட்டில் கையை நுழைப்பதையே மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அரசியல் புத்திசாலித்தனம் என்று பேசுபவர்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் உழைக்கின்ற காசுதான் உடம்பில் ஒட்டும் என்ற பாட்டியின் வார்த்தையில் மிளிர்ந்த நேர்மையும், உழைப்பின் வலிமையும் எனக்கு புதிய கண்ணோட்டங்களை வழங்கியது. அம்பானி என்னடா அம்பானி தில்லுமுல்லுக்காரன்.. தெருவில் கிடந்து நேர்மையாக உழைக்கும் இந்தப் பாட்டியல்லவா நாட்டின் அச்சாணி என்ற பெருமிதத்தோடு பாட்டியைப் பார்த்தபடியே நகர்ந்தேன்.
உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியைதையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திய இன்னொரு சம்பவத்தை சமீபத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயதுடைய முத்துராமலிங்கம். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்கு ரூ. 30,000 கடன் உள்ளது என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்த இவர் இதில் தனது பங்கு இந்தியாவின் கடனை அடைக்க விரும்பினார். ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை சம்பாதிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் கடந்த மே 8 ஆம் தேதி “இந்தியாவின் கடனை அடைக்க” என்று குறிப்பிட்ட ரூ.5000-க்கு டி.டி. எடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார். தவிர முத்துராமலிங்கம் பாக்கித் தொகையையும் மெல்ல அடைப்பதாகவும் இனி “என்னைக் கேட்காமல் என் பெயரில் கடன் வாங்கக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த தொழிலாளியின் செய்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிண்டல், குத்தல் அல்லது ஒரு வகையான அதிரடி பாணி என்று கூட நினைக்கத் தோன்றலாம். ஆழமாகப் பரிசீலித்தால் உழைக்கும் வர்க்கத்திற்கேயுரிய சுயமரியாதை, நாட்டின் மானம் காக்கும் யதார்த்தமான தேசப்பற்று எல்லாவற்றுக்கும் மேலே என்னைக் கேட்காமல் என் பெயரில் இனி கடன் வாங்கக் கூடாது என்ற கண்டிப்பில் உழைக்கும் வர்க்கம் தனது அரசியலதிகாரத்தை பறைசாற்றும் தன்னிலையான போக்கு இதில் வெளிப்படுவதுதான் நாம் காண வேண்டிய, ரசிக்க வேண்டிய பகுதியாகும்.
பல ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு, அரசை ஏய்த்து தொழில் செய்து கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நியாயம் பேசும் முதலாளிகளின் கேடுகெட்ட செய்கையை இந்த சுமைதூக்கும் தொழிலாளியின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர்கள் முத்துராமலிங்கம் போன்ற உழைக்கும் மக்களே என்ற உண்மை தெரிய வரும்.
நாட்டின் மீதான தனது உரிமையை ஒரு சிறிய செயலின் மூலமாக நிலைநாட்டிக் காட்டும் முத்துராமலிங்கம் போல மக்கள் உணர்வு பெற்றுவிட்டால் “எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் ஏன் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்தாய்?” என்ற அரசியல் கேள்விகள் வரை கேட்கும்படியாக நிலைமை மாறிவிடும். இந்த திசையில் சிந்திக்குமபடியாக செய்கிறது முத்துராமலிங்கத்தின் பாணி.
‘படிக்கலேன்னா மூட்டை தூக்கத்தான் லாயக்கு’ என்று கேலி பேசும் படித்த வர்க்கம் ஒரு கணம் யோசிக்கவும். ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளி, அதிகம் படிக்காதவர், தேசத்தையே சுமக்கும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியாதையுடன் தமது ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னுதாரணமாக நம்முன்னே நிற்கிறார். இப்படிப்பட்ட வழிகாட்டிகளிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இப்படிக் கற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் உருப்படுவதற்கும் வழி இருக்கிறது என்று நம்புகிறேன் நான். நீங்களும் மறுக்க மாட்டீர்கள்தானே ?
http://www.vinavu.com/2009/09/01/life/