Showing posts with label ltte. Show all posts
Showing posts with label ltte. Show all posts

Monday, December 21, 2009

தமிழீழ லட்சியத்தை உலகறியச்செய்யுங்கள்:பழ.நெடுமாறன்!


சென்னை:

தமிழீழ லட்சியத்தை உலகறியச்செய்யுங்கள் என்று கன்டா வாழ்புலம் பெயர்ந்ததமிழர்களுக்கு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...''உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான மனதிடம் நம்மிடம் இருக்க வேண்டும்.


30 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு உடன்பாடுகளைச் செய்து, எதுவும் பலன் அளிக்காத நிலையிற்றான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்கள் மறைந்த தலைவர் தந்தை செல்வா தலைமையில் ஒன்றுகூடித் தமிழீழத் தனிநாடு ஒன்றதான் எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு வேறு வழி இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்.


1976 ம் ஆண்டில் இருந்து வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றுதான் ஈழத்தமிழருக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆதற்கு அடுத்த ஆண்டு 1977 இல்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்துதான் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்கள். ஈழத்தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு முழுமையாக ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்குக் காட்டினார்கள். அதற்குப் பிறகு நடைடிபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.


ஆனால் இன்றைக்குச் சில பேர் தனிநாடு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை, சிங்கள அரசு கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு வாழ்வோம் என உபதேசம் செய்வதற்குக் கிளம்பியிருக்கின்றார்கள். இத்தகையவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர்கள் எதற்காக இதைச்சொல்கின்றார்கள் என்பதைப் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அருமைத் தமிழர்களே என்றைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானந்தான் என்றைக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். அதற்கு மாறாக நாம் ஒருபோதும் செயற்படக் கூடாது. எனவே எமது தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற இலட்சியத்தின் மீது உறுதியாக நிற்கவேண்டும் அதைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.


நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில எந்தவித சலனங்களுக்கோ சபலங்களுக்கோ ஆளாகாமல், எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இரையாகாமல், நாம் நிமிர்ந்து நின்று, நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு நாளை கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது.


கனடாத் தமிழர்கள் அனைவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று அதற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்."என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நன்றி:தெனாலி

ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...


(2001 ம் ஆண்டு, சந்திரிக்கா குமாரதுங்க சிறி லங்கா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நெதர்லாந்து வந்திருந்த சந்திரிக்காவை கைது செய்யுமாறு வழக்குப் போடப்பட்டது. அன்றிருந்த சர்வதேச சூழ்நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறும். "உயிர்நிழல்" (மார்ச்-ஏப்ரல் 2001 ) சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

பிரிட்டனில், விடுதலைப் புலிகள் உட்பட உலகெங்கும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 21 அமைப்புகள், "பயங்கரவாத இயக்கங்களாக" அப்போது தான் அறிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தது. இது தொடர்பாக பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகம் மட்டுமல்ல, பல்வேறு தேசங்களை சேர்ந்த முஸ்லிம் சமூகமும் அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதுவரை காலமும் மேற்கைரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்களையே தடை செய்து வந்தன. உதாரணமாக, பிரிட்டனில் IRA , ஸ்பெயினில் ETA என்பனவற்றை சொல்லலாம். ஆனால் அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" மற்ற நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைப்பதன் நிமித்தம், "உலகப் பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலை தயாரித்தது போல, தனது சகோதர நட்பு நாடான பிரிட்டனையும் செய்யத் தூண்டியதன் விளைவே மேற்குறிப்பிட்ட தடைச்சட்டம்.

இத்தகைய பின்னணியிலேயே புதிய ஒழுங்கை ஏற்றுக் கொண்ட இலங்கையின் (முன்னாள்) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐரோப்பிய விஜயமும் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் வாழும் முன்னாள், இந்நாள் தமிழ் அகதிகளின் திட்டுகளையும், வசைகளையும், அதிருப்தியையும் ஒரு பொருட்டாக மதிக்காது, ஐரோப்பிய ஒன்றியம் சந்திரிக்காவுடன் வர்த்தகம் செய்வது பற்றி பேசியது. நாட்டில் சமாதானம் வந்துவிட்டால் தனது முதலீடுகள் அதிகரிக்கும் என உறுதி கூறியது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனியில் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு, சந்திரிக்கா ஹொலன்ட் வந்து சேர்ந்தார். அப்போது அவரைக் கைது செய்யுமாறு கோரும் டச்சு வழக்கறிஞர் ஒருவரின் மனு, நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது. சர்வதேச சித்திரவதை தடுப்புச் சட்டத்தில் இலங்கை அரசும் ஒப்பமிட்ட போதும், அங்கே சித்திரவதை நடக்கின்றது. இதற்கு முப்படைகளின் தலைவி என்ற வகையில் சந்திரிகா பொறுபேற்க வேண்டும். எனக்கோரி பாதிக்கப்பட்ட இரு அகதிகளின் பெயரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் "ஆதாரம் போதாது", "தெளிவில்லை" எனச் சாட்டு சொல்லி நீதியமைச்சு மனுவை நிராகரித்து விட்டது. இதைப்பற்றியோ அல்லது மனித உரிமைகள் பற்றியோ எதுவும் அலட்டிக் கொள்ளாது, நெதர்லாந்து இராணியும், பிரதமரும், இருநாடுகளுக்கு இடையே உள்ள நானூறு ஆண்டு கால உறவை மெச்சியபடியே சந்திரிக்காவுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

மேற்கைரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிலவும் அன்னியோன்யமான உறவு இன்று பகிரங்கமாகிவிட்ட போதும், இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள எம்மில் பலருக்கு கஷ்டமாக இருக்கலாம். மேற்கைரோப்பாவின் "ஜனநாயக, மனிதாபிமான" முகத்தைக் கண்டு மதி மயங்கி, அந்த மாயையில் இருந்து விடுபட முடியாதவர்கள், பற்பல சமாதானங்களை தமக்குள்ள கூறிக்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் எப்போதாவது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிப் பேசினால், அது எப்போதும் தமது நலன் சார்ந்தது தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்காது.

இலங்கையைப் போலவே யூகோஸ்லேவியாவில் (இன்று செர்பியா) அல்பேனியர்களை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலம் பிரிவினை வேண்டிப் போராடியது எல்லோருக்கும் தெரியும். அங்கிருந்த ஆயுதக்குழுவான "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA ) மேற்கைரோப்பாவினால் ஆதரிக்கப்பட்டது. ஜெர்மனி ஆயுதத் தளபாடங்களை வழங்கியது. ஐரோப்பா எங்கும் KLA ஆதரவுப் பிரச்சாரம் நடந்தது. யூகோஸ்லேவிய ராணுவத்தின் பொது மக்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், என்பன பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தால் உலக மக்கள் செர்பிய ராணுவத்தையும், ஜனாதிபதி மிலோசோவிச்சையும் வெறுத்தனர். யூகோஸ்லேவியா மீது ஆயுத விநியோகத்தடை, பொருளாதாரத் தடை என்பன ஏற்படுத்தப்பட்டன. மிலோசோவிச்சை மனிதப்படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்தது. பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதியை போர்க்கால குற்றங்களுக்காக விசாரிப்பதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு இன்றுள்ள அரசு மீது நிர்ப்பந்திக்கப்பட்டது.

மிலோசோவிச்சும் சந்திரிக்கா போன்றே தேர்தலில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தான். இருவரும் தத்தமது நாடுகளில் எழுந்த சிறுபான்மையினத்தின் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவ வன்முறையை ஏவிவிட்டவர்கள் தான். இரண்டு நாடுகளிலும் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. அனால் மிலோசொவிச்சுக்கு சிறைத்தண்டனை, சந்திரிக்காவுக்கு விருந்துபசாரம்! ஏன் இந்தப் பாரபட்சம்?

இதன் பதில் மேற்குலகின் இராணுவ பொருளாதார நலன்களில் தங்கியுள்ளது. கொசோவோ பிரச்சினை தொடங்க முன்பு, "யூகோஸ்லேவியாவில் நேட்டோ படைகளுக்கு தளமமைக்க விட வேண்டும்," என முன்னால் அதிபர் மிலோசோவிச்சை கேட்ட பொழுது அவர் அதற்கு மறுத்து விட்டார். மேலும் அந்த நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அரசின், அல்லது அரசுக்கு சார்பான உள்ளூர் முதலாளிகளின் வசம் இருந்தன. இந்த நிலை மாறவேண்டுமானால் மிலோசோவிச்சை அகற்ற வேண்டும். இதன் விளைவே கொசோவோ யுத்தமும், மிலோசோவிச் கைதும். ஆனால் இலங்கை நிலைமை அப்படியல்ல. சந்திரிகா மேற்குலகின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதால், அவர் கேட்கும் போதெல்லாம் தமிழ் பேசும் இனத்திற்கு எதிரான போருக்கு தேவைப்படும் ஆயுத தளபாடங்களோ நிதி உதவியோ அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்குலக அரசுகளுக்கும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் சர்வாதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக இருந்து வரும் உறவு தான். சிலி நாட்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பினோச்சே, கொன்றழித்த சொந்த நாட்டு மக்களின் தொகை 20000 என சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. சதிப்புரட்சியில் அமெரிக்க சி.ஐ.ஏ.யின் பங்கும், பின்னர் தொடர்ந்த சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்சிக்கு அமெரிக்க, மேற்கைரோப்பிய ஆதரவும் இரகசியமல்ல. பதவி விலகிய பினோச்சே 20 வருடங்களுக்கு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்த போது கைது செய்யுமாறு வேண்டுகோள்கள் வந்தன. மனித உரிமை நிறுவனங்களின் கூச்சல்களுக்கு செவி கொடுக்காத பிரித்தானிய அரசு, பினோச்சேயை பத்திரமாக நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

சிலி போலவே ஆர்ஜன்தீனாவிலும் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்பு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் தொகை 30000 க்கும் மேல். சித்திரவதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் விமானத்தில் கொண்டு போய் கடலில் கொட்டியது. இதைத் தவிர அரச எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தோரின் பிள்ளைகள் பலவந்தமாக பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு இடங்களில் வளர்க்கப்பட்டனர். இந்த அக்கிரமங்களுக்கு காரணமாக இருந்த அமைச்சர் ஒருவரின் மகள், இன்று நெதர்லாந்தின் வருங்கால மன்னன் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி!

ஒரு பக்கத்தில் சர்வாதிகாரிகளுடனும், அடக்குமுறையாளருடனும் கொஞ்சிக் குலாவும் மேற்குலக நாடுகள், மறுபக்கத்தில் தமக்கு விரோதமான நாடுகளின் தலைவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை விடவும் தயங்குவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கைதுக்கு காரணமாக மனித உரிமை மீறல்களை குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் தமது நட்பு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்கின்றனர். இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்கொட்லாந்து "லோக்கர்பீ" விமானக் குண்டுவெடிப்புக்கு காரணமான கடாபியை கைது செய்யுமாறு பிரிட்டன் அரசு கோரியது. ( அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக ரஷ்ய உளவுத் துறையால், அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டும், அது அசட்டை செய்யப்பட்டது.) அதே போல கியூப வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இரு விமானங்களை சுட்டு வீழ்த்திய குற்றச் சாட்டில் காஸ்ட்ரோவை கைது செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

பனிப்போர் முடிவில் கலைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மன் அரசின் கடைசி ஜனாதிபதி கிரென்ஸ் இப்போது வசிப்பது ஜெர்மன் சிறைச்சாலையில். அன்றைய கிழக்கு ஜெர்மனியில் இருந்து வெளியேற விரும்பிய நான்கு அகதிகளை எல்லையில் சுட்டுக் கொன்ற குற்றச் சாட்டில் (நேரடியாக சம்பந்தப்படாத போதிலும்) கிரென்ஸ் சிறை வைக்கப்பட்டார். வட இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடிய அப்பாவி தமிழ் அகதிகளை இலங்கை கடற்படை கடலில் வைத்து சுட்டுக் கொன்றது. ஜெர்மன் நீதித்துறையின் நியாயப்படி பார்த்தாலும், முப்படைகளின் தலைவியான சந்திரிகா கைது செய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால் அது நடக்கப் போவதில்லை. கிரென்ஸ் மேற்கு ஜெர்மனியுடன் சித்தாந்த அடிப்படையில் முரண்பட்ட சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் அதிபராக இருந்தவர். ஆகையால் அவர் ஜெர்மனியின் எதிரி. ஆனால் ஜெர்மன் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அப்படி எந்த சித்தாந்த முரண்பாடும் இல்லையே.

அரசியலில் எப்போதும் "நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு." அது மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அவர்களது சொந்த பொருளாதார நலன்களே எப்போதும் முன்னிறுத்தப் படுகின்றன. எந்தவொரு நாட்டின் அரசோ, ஆயுதக் குழுவோ, அவர்களின் பாதையில் தடைக்கல்லாக இருப்பின் அது அகற்றப்பட வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியாத பயங்கரவாதிகளுக்கு, முரண்படும் முரட்டு நாடுகளுக்கு எதிராக மூர்க்கமான போர் கட்டவிழ்த்து விடப்படும். எங்காவது இயல்பாக எழும் மக்கள் எழுச்சிகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும். இதுவே இன்றைய புதிய ஒழுங்கின் நியதி. இதற்கு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பதே, அடக்கப்படும் அனைத்து மக்களின் முன்னாள் உள்ள கேள்வி. இங்கே இப்போது கேள்விகள் மட்டுமே கேட்கப் பட்டுள்ளன. விடைகளை நீங்களாகவே தேடி அறிந்து கொள்வீர்கள்.
நன்றி:கலையகம்

Wednesday, December 9, 2009

புலிகளின் சொத்துக்கள் குறித்து புலன் விசாரணை:இலங்கை பிரதமர்!



கொழும்பு:

உலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரம நாயகே தெரிவித்தார்.

இது குறித்து
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மேலும் கூறியது..'' விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்களை கைப்பற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பல்வேறு நாடுகளில் இதுகுறித்து இலங்கை உளவுத்துறை புலனாய்வு செய்து வருகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடமிருந்து புலிகளின் சொத்து விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

புலிகளின் சொத்துக்கள் இலங்கைக்கு சொந்தமானது. அவை இலங்கையின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. "என்றார் பிரதமர் விக்கிரமநாயகே.
நன்றி:தெனாலி

Sunday, November 22, 2009

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16 நாடுகளில் 27-ந்தேதி மாவீரர் தின நிகழ்ச்சி



http://photos1.hi5.com/0065/387/580/loN61v387580-02.jpg


சென்னை, நவ. 22-

விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 27-ந்தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் மேகம் சூழ்ந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.

இந்த உரையின்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இதனால் இலங்கை மட்டு மல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த உரையை கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் பொழிந்த விஷ குண்டு மழையில் லட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.

இதில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி வீடியோ படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா இலங்கையிடம் பிரபாகரன் இறப்பு சான்றிதழை கேட்டு வருகிறது. ஆனால் இதுவரை இலங்கை அந்த சான்றிதழை தராமல் இழுத்தடித்து வருகிறது.

இலங்கை அரசு பிரபா கரன் இறந்து விட்டதாக கூறுவதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செய லகம் 2 வாரத்திற்கு முன்பு ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நவம்பர் 27-நதேதி வழக்கம்போல் மாவீரர் தின கொள்கை விளக்க உரை வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மாவீரர் தின உரையை நிகழ்த்தப்போகும் தலைவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையில் இடம் பெறப்போகும் விஷயங்கள் என்ன, என்பதை எதிர் நோக்கி காத்திருக்கிறது.

மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடக்கிறது பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடத்தப்படுகிறது.

இவ்விழாவின் போது விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ் ஈழம் பற்றிய தமிழர் நமக்கு, காலம் தந்த தலைவர், புயலுக்கு பின் மலரும் நம் தேசம், தமிழ்நாதத்தில் தமிழீழ கானங்கள் ஆகிய 4 இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது.

http://www.maalaimalar.com/2009/11/22144018/CNI03902201109.html
thanks:otumnadhi