Showing posts with label srilanka. Show all posts
Showing posts with label srilanka. Show all posts

Friday, December 18, 2009

எழுதாதே எதிர்ப்பேன்


இலங்கையில் தொன்னூறுகளில் ஊடகங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை எதிர்த்து போரிடும் முகமாக "சுதந்திர ஊடகவியலாளர் சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் ஒழுங்கு செய்த முதலாவது கருத்தரங்கிற்கு அரசாங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. "ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க இல்லையெனில், இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்." என அந்த அழைப்பிதழில் எழுதப் பட்டிருந்தது. அரச தரப்பில் இருந்து இதற்கான எந்தப் பதிலும் வரவில்லை.

ஆளும் கட்சியினாலும், அதிகார வர்க்கத்தினாலும் பொது மக்களின் ஒரேயொரு பலம் வாய்ந்த சுதந்திர அமைப்பான பத்திரிகை சுதந்திரத்தை அடக்க நினைப்பதோ, அல்லது அதை தம்பக்க ஆளுமைக்கு கீழ் கொண்டு வருவதோ புதியன அல்ல. இந்த வகையில் நமது தமிழ் பத்திரிகைகள் சந்தித்த தடைகள் என்ன? என்பதை சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.

இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்த ஆரம்ப காலங்களில், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற வழியில் தமிழீழம் காணும் உத்வேகம் முனைப்பு பெற்றிருந்தது. அவ்வேளையில் "சுதந்திரன்" பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பு பெற்றிருந்தது. சிறி லங்கா அரசுக்கு எதிரான துணிகர செய்திகளும், தமிழ் தேசியவாத பிரச்சாரங்களும், தமிழக கட்சி அரசியல் பாணியிலான ஆவேச எழுத்துகளும் இதன் சிறப்பம்சம். சுதந்திரனின் எழுத்துகள் வாசகர் மனதில் "தமிழீழமே தீர்வு" என்ற இலக்கை பசுமரத்தாணி போல பதியவைத்தது. இதன் காரணமாகவே இப்பத்திரிகை பொலிசாரினால் பலவித இடையூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. பக்கம் பக்கமாக செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கை எவ்வளவு கடுமையாக அமுல்படுத்தப் படுகின்றதோ, அவ்வளவிற்கு அப்பத்திரிகை பிரபலமாவதை தடுக்க முடியவில்லை. சுதந்திரனுக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த "ஈழநாடு" ம் கடும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போது இவ்விரு ஏடுகள் மட்டுமே கொழும்புக்கு வெளியே, யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களை கொண்டிருந்தன.

1984 திம்பு பேச்சுவார்த்தைகளையிட்டு யுத்தநிறுத்தம் ஏற்பட்ட காலகட்டத்தில் யாழ்குடாநாடு போராளி இயக்கங்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இக் காலகடத்தில் இனி பத்திரிகைகள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக இயங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நூறு வீதம் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள முடியும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். தமிழ் மக்கள் ஏற்கனவே இலங்கை அரசின் ஊடகங்கள் பரப்பிய பொய்யுரைகளை கேட்டு வெறுப்பு கொண்டிருந்தனர். நாட்கள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த பொழுது, ஆயுதபாணி இயக்கங்களில் ஒன்றான "டெலோ" உள்முரண்பாடுகளால் பிளவுற்றது. அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தாஸ் குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை பற்றிய செய்தி மறுநாள் வெளிவந்த அனைத்து பிராந்திய பத்திரிகைகளிலும் தடை செய்யப்பட்டது. அதுவரை அரச இயந்திரத்தின் தணிக்கை என்ற அடக்குமுறையை சந்தித்து வந்த பத்திரிகையுலகம், புதிய எஜமானர்களை கண்டுகொண்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் துப்பாக்கி நிழலின் கீழ் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

1987 ல் இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. யுத்தம் ஆரம்பித்த சில நாட்களிலேயே, ஈழத்தில் அமைதி காக்க வந்த இந்திய இராணுவம் ஊடகங்கள் மீது பாய்ந்தது. அமைதிப் படையின் "அமைதி காக்கும் நடவடிக்கையாக" யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழமுரசு, ஈழநாடு பத்திரிகைகளின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. அவ்வாறே புலிகளின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனமும் வெடிகுண்டால் நிர்மூலமாக்கப்பட்டது. ஊடகங்களின் வாயை அடைத்து "காந்தீய இராணுவம்" சாதனை நிகழ்த்தியது. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை போல, ஒருவாறு தனது அச்சகத்தை மீளக் கட்டமைத்து, மீண்டும் ஈழநாடு வெளிவரத் தொடங்கியது. ஆனால் ஆயுதமேந்திய சக்திகளுடன் மோத முடியாது என்பதை உணர்ந்து, யாரையும் நோகாமல் செய்தி வெளியிட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில், ஈழநாட்டின் பக்கங்களை பெரும்பாலும் இந்திய செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். யாழ் பிராந்திய மையவாத பத்திரிகையான ஈழநாடு, வெளிப்படையாக எந்தவொரு அரசியல் சக்தியையும் ஆதரிக்காமல், நடுநிலை காப்பதாக காட்டிவந்தது. இதனால் யாழ் தமிழ் மக்களின் அபிமானத்தை பெற்றிருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புக் கால யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஒரேயொரு நாளேடான ஈழநாடு, தனது இருப்புக்காக இந்தியா பக்கம் சாய்ந்து வருவதாக தோன்றியது. ஈழநாட்டின் நிலைப்பாடு, "இந்தியா எமது தாய்நாடு." என்ற யாழ் மையவாத பாரம்பரியத்தினால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். இருந்தபோதிலும், அன்று இந்திய இராணுவத்தை தமது முதன்மை எதிரியாக பார்த்த விடுதலைப் புலிகள் இதனை சகித்துக் கொள்ளவில்லை. இந்தியப் படையினருடன் கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்த புலிகள், ஈழநாடு பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். இச்செயலுக்கு உரிமை கோரும் சுவரொட்டிகள் புலிகளால் யாழ் நகரில் ஒட்டப்பட்டிருந்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்காது நடுநிலை காப்பதாக கூறிய ஈழநாடு, இந்தியா பக்கம் சாய்ந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஈழநாடு புகலிடத்தில் (பிரான்ஸ்) வெளிவந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக வெளிவரும் பத்திரிகைகளை விடுத்து, "வீரகேசரி" நீண்டகாலமாக சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இருப்பினும் வீரகேசரி காற்றடிக்கும் பக்கத்திற்கு சாயும், அல்லது நழுவுநிலைக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. கொழும்பில் "சரிநிகர்" என்ற பத்திரிகை சிறிது காலம் ஊடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தது. அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் காலூன்றத் தொடங்கிய காலத்தில், அது தனது சுதந்திரத்தை பேணிக் கொண்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்கி உண்மை செய்திகளை தெரிவிக்கும் என மக்கள் நம்பினார்கள். வதந்திகளை செய்தியாக்குவதாலும், சுயதணிக்கை செய்து கொள்வதாலும், பத்திரிகை சுதந்திரம் புலம் பெயர் நாடுகளிலும் அடவு வைக்கப்பட்டது. புலம்பெர்ந்த சூழ்நிலையில், தமிழரை பிற சமூகத்தினருடன் ஒட்டி உறவாடாமல் தனிமைப் படுத்தியதிலும் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. இவ்வாறான தேசிய நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்ட "தமிழ் ஏடு" என்ற பத்திரிகையும், சிற்றிதழ்களும் வந்த வேகத்தில் மறைந்து போயின.
நன்றி:கலையகம்

Wednesday, December 9, 2009

பிரபாகரன் படம் கிழிப்பு: இளங்கோவனை கைது செய்யக்கோரி பிரசாரம்!



ஈரோடு:

பிரபாகரன் படம் தாங்கிய பேனரை கிழித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனனை கைது செய்யவலியுறுத்தி ஈரோட்டில் பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைமையில் சென்ற காங்கிரசார் ஊர்வலமாக சென்று கிழித்தெறிந்தனர்.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் மாவீரர் நாள் அஞ்சலி பேனர்களை கிழித்தெறிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபியில் இளங்கோவனை கண்டித்தும், அவரை கைது செய்யவலியுறுத்தியும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் இளங்கோவனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் துண்டறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல மாவட்டத்தி
ன் பல பகுதிகளில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.

இந்த தகவல் அறிந்த போலீசார் துண்டறிக்கை விநியோகத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோபி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி:தெனாலி

புலிகளின் சொத்துக்கள் குறித்து புலன் விசாரணை:இலங்கை பிரதமர்!



கொழும்பு:

உலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரம நாயகே தெரிவித்தார்.

இது குறித்து
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மேலும் கூறியது..'' விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்களை கைப்பற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பல்வேறு நாடுகளில் இதுகுறித்து இலங்கை உளவுத்துறை புலனாய்வு செய்து வருகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடமிருந்து புலிகளின் சொத்து விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

புலிகளின் சொத்துக்கள் இலங்கைக்கு சொந்தமானது. அவை இலங்கையின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்படும். புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. "என்றார் பிரதமர் விக்கிரமநாயகே.
நன்றி:தெனாலி

தமிழர்கள் சமவுரிமைக்கு சட்டத் திருத்தம்: இலங்கை உறுதி!



டெல்லி:

இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை சார்பில் இந்தியாவந்துள்ள மூவர் அடங்கிய தூதுக்குழு இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்செ சார்பில் அவரின் சகோதரர்களான இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, அரசியல் ஆலோசகர் பசில்; ராஜபக்செ, அதிபர் ராஜபக்செவின் தனிச்செயலாளர் உள்ளிட்டோர் 3பேர் அடங்கிய தூதுக்குழு இந்தியா வந்துள்ளது.

நேற்றிரவு இந்தியாவந்த இக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபரின் அரசியல் அலோசகர் பசில் ராஜபக்செ தமிழர்களுக்கு அரசியல் சட்ட உரிமைகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கை முகாம்களில் இன்னும் 1லட்சத்து 10ஆயிரம் தமிழர்கள்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர் மற்றவர்கள் அவர்கள் சொந்த குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். மீதமுள்ளவர்களும் அவர்கள் சொந்த குடியிருப்புகளுக்கு வரும் ஜனவரி 30ஆம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள்.

இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையோடு வாழ அரசியல் சட்டத்திருந்தம் கொண்டுவரப்படும் அதிபர் தேர்தல் முடிந்தபின்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே இலங்கை விரும்புகிறது. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுப்பணிகளுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்துவருகிறது "என்றார்.
நன்றி:தெனாலி

Saturday, December 5, 2009

Your Name : Your e-mail : Message subject : இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்

சனிக்கிழமை, 5, டிசம்பர் 2009 (11:54 IST)
சென்னை:

''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும் எனவெ தமிழ் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால் நானே சுயேச்சையாக போட்டியிடுவேன்"என்று இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது...''இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களை கொன்று குவித்த இன வெறியர்களான அதிபர் ராஜபக்செ, முப்படைக்கூட்டுத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அதிபர் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இனப்படுகொலை நடத்திய இவர்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கிடையாது. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ராஜபக்செவையும், பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது. அவர்களை ஆதரிக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் விரும்பமும்,

தமிழர்ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அண்மையில் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழர் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்தாலும், இலங்கைத்தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிவதற்கு இந்த போட்டி அவசியம்.

அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தால், நானே சுயேச்சையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்."என்றார் சிவாஜிலிங்கம்.
நன்றி:தெனாலி

Thursday, December 3, 2009

தமிழ் ஆடுகள்.......சிங்கள ஓநாய் !!!!!!!



''சரத் ஹேவலாகே சரத் சந்திர ஃபொன்சேகா ஆகிய நான், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏழாவது ஷரத்தின் 31-வது பிரிவிற்கமைய, சட்டரீதியான அரசியல் கட்சியின் ஊடாக, அன்னப்பறவை சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடப் போகிறேன்!'' - இலங்கையில் ஜெய்ஹில்டன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஃபொன்சேகா இப்படி அறிவித்தபோது, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வயிற்றில் புளி கரைத்திருக்கும். அப்பாவித் தமிழர்களைக் கூட்டுப் போட்டு வேட்டையாடியவர்கள், இப்போது அரசியல் களத்தில் எதிரெதிரே சதிராடும் காட்சியைப் பார்க்க, உலகம் பளிச்சென்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது!

இந்தியாவை ஜெயித்த ஃபொன்சேகா!

இந்தியாவின் தெற்கே இருக்கும் குட்டித் தீவான இலங்கையின் அரசியலமைப்பை ஆள்வதென்னவோ... தற்போதைக்கு இந்திய ராஜதந்திரம்தான். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவினால், ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைக் காரணம் காட்டி, தற்காலிகமாக ராஜபக்ஷேவின் சீன சிநேகிதத் துக்கு தடை போட்டிருக்கிறது இந்தியா. ஃபொன்சேகா புயல், அலரி மாளிகையிலிருந்து தன்னை அகற்றிவிடுமோ என்ற பயம் பெருக்கெடுத்துவிட்ட நிலையில்... ராஜபக்ஷே மெதுவாக இந்தியாவின் சொல்பேச்சுக்குத் தலையாட்ட ஆரம்பித்துவிட்டார்!

ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி என்றதுமே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்தது நம் மத்திய அரசாங்கம்.


ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ரணிலிடம், வேறு பல சமரசத் திட்டங்களை முன்வைத்தது இந்தியா. அதிபர் தேர்தல் முடிந்ததும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலையே பிரதமராக்க ராஜபக்ஷே தங்களிடம்(!) சம்மதித்திருப்பதாக இந்தியா சார்பில் சொல்லப்பட்டும், பிடி கொடுக்கவில்லை ரணில்.

அவர் இலங்கை திரும்பியதுமே, தனது அடுத்த கட்ட சித்து விளையாட்டுகளைத் தொடங்கியது இந்தியா. இலங்கையிலுள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத் மூலமாக ரணிலின் ஐ.தே. கட்சி முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. 'அதிபர் தேர்தலில் நிறுத்துவதற்கு நமது கட்சியில் வேட்பாளர்களே இல்லையா... ஃபொன்சேகாவை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?' என அவர்கள், ஐ.தே. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ரணிலை நோக்கி விமர்சனம் கிளப்பினார்கள். 'ஃபொன்சேகா பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டால்... கட்சியையே உடைப்போம்!' என பகிரங்கமாகவே சில எம்.பி-க்கள் மிரட்டல் விடுத்தபோதும், எதற்கும் அசரவில்லை ரணில்.

இன்னொரு பக்கம், ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துவந்த ஜே.வி.பி-யையும் விட்டுவைக் கவில்லை இந்தியா. அந்தக் கட்சியின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவரான அநுரகுமார திஸநாயக் கவிடம் ஃபொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதின் மூலம் ஜே.வி.பி-யின் அடிப்படை கொள்கையிலிருந்து மீறுவதோடு, தொண்டர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும் என வசமான ஆட்கள் மூலம் மிரட்டிப் பார்த்தது இந்தியா. அது வரை பொறுமையாக இருந்த ஜே.வி.பி., இந்த மிரட்டலுக்குப் பின், 'ஃபொன்சேகாதான் எங்கள் பொதுவேட்பாளர்; மற்ற கட்சிகளும் அவரை பொதுவேட்பாளராக ஏற்கவேண்டும்' என வெளிப்படையாக அறிவித்தது. இந்தப் பின்னணிக்கு இடையில்தான், அரசியல் களத்தில் கால் பதித்துவிட்டார் ஃபொன்சேகா.

தோற்றது ஜூரிச் முயற்சி..!

இலங்கைப் போர் வெற்றியின் ஹீரோவாகப் பார்க்கப்படும் ஃபொன்சேகாவால் முழுமையாக சிங்கள வாக்கு வங்கி உடையும் நிலையில், தமிழ் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு முழுமையாக விழுந்தால்தான் தனது வெற்றி சாத்தியமாகும் என கருதிய ராஜபக்ஷே, இதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தனது கூட்டணிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். கிட்டத்தட்ட இதே விஷயத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒரு புள்ளியில் கூடவைப்பதற்கான முயற்சியில் இறங்கியது இந்தியாவும். இது பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் சிலர்,

''இலங்கையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பத்மநாபா அணியில் இருந்த வரதகுமார் (வரதராஜ பெருமாள் அல்ல!) என்பவர் கடந்த 83-ம் வருடம் நடந்த இனக் கலவரத்தின்போது இந்தியா வந்துவிட்டார். அதன்பிறகு இந்திய அரசின் ஆதரவோடு வாழ்ந்த வரதகுமார், பின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார். இவர் தமிழர் தகவல் மையம் என்றொரு அமைப்பையும் நடத்துகிறார். இந்த அமைப்பின் சார்பாக இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அதன் மூலம் எல்லோரையும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாகத் திருப்பும்படி வரதகுமாருக்கு உத்தரவிட்டது இந்தியா. வரதகுமாரும் சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச் நகரில் மூன்று நாள் கூட்டம் ஏற்பாடு செய்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை அழைத்தார். அதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தலைவரின் செலவுக்காகவும் மூன்று லட்ச ரூபாய் பணத்தையும் வழங்கினார்.

கூட்டத்தில் சம்பந்தன், சேனாதிராஜா, மனோ கணேசன், ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டைமான், முத்துசிவலிங்கம், சந்திரசேகரன், சிவநேசத்துறை சந்திரகாந்தன், ரவூப் ஹக்கிம், பேரியல் அஸ்ரப், ஹிஸ்புல்லா உள்ளிட்ட 26 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்துவதற்கான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த இதன் நிகழ்ச்சி நிரலில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிப்பது என்றொரு விஷயமும் இடம்பெற்றிருந்தது. உடனே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், 'தமிழ் கட்சிகள் சார்பாக தனியாக ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தலாம்' என கருத்துத் தெரிவிக்க.... அரசுக்கு ஆதரவான டக்ளஸ் தேவானாந்தா அந்த நிகழ்ச்சி நிரலைக் கிழித்துவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு சலசலப்புகள் கிளம்பவும், 'தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடம் பொது இணக்கம் ஏற்பட நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், அதிபர் தேர்தல் தொடர்பான விஷயம் தேவையற்றது' எனக் கூறி அனைத்துத் தரப்பினருமே கூட்டத்தைப் புறக்கணிக்க... நிகழ்ச்சி நிரலில் அந்த விஷயம் நீக்கப்பட்ட பிறகுதான், கூட்டம் நடந்தது.

அதன் பிறகு தனித்தனியாக பல கட்சிகளிடமும் பேசிப் பார்த்தும், யாரும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு தர விருப்பம் காட்டவில்லை! தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபடி மேலே போய், 'தேர்தலில் யாரை ஆதரிப்பது என இது வரை முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகளின் சார்ப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதே எங்கள் யோசனை!' என்றனர். மொத்தத்தில், ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக இந்தியா கூட்டிய கூட்டம் எதிர்பார்ப்புக்கு மாறாக முடிந்தது!'' என்றார்கள்.

'அதிகாரம் இழக்க மாட்டேன்!'

அதிபர் தேர்தலில் ஃபொன்சேகாவை பொதுவேட் பாளராகக் களமிறக்க நான்கு கண்டிஷன்கள் போட் டிருந்தார், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில். அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை பதவியேற்ற ஆறு மாதத்தில் ஒழிப்பது என்பது முக்கியமான கண்டிஷன். முதலில் இந்த கண்டிஷன்களுக்கு ஓகே சொன்ன ஃபொன்சேகா பிறகு, 'ஆறு மாதத்தில் அந்த முறையை ஒழித்துவிட்டால், அதன் பிறகு நான் அதிபர் நாற்காலியில் இருந்துதான் என்ன பயன்?' என்கிற ரீதியில் கருத்துத் தெரிவித்தார். இதனால் ரணிலே அதிபர் தேர்தலில் களமிறங்குவார் என்றொரு சூழலில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் இருவரையும் சந்தித்துப் பேசினர். இந்தச் சூழலில்தான் ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக அறிவிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் அறிவித்தது. பொது எதிரி ராஜபக்ஷேவை ஒழிப்பதே நமது குறிக்கோள் என இருவரையும் சமாதானப்படுத்தி, பொது வேட்பாளராக ஃபொன்சேகாவை களமிறக்க ஏகமனதாக முடிவெடுத்தனர்.

இதற்கிடையில், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக பொதுமக்களிடம் பரபரப்பைக் கிளப்பி வருகிறார் ஃபொன்சேகா. அரசாங்கம் தனது வீட்டை காலி செய்யச் சொன்னது தொடர்பாகவும், பாதுகாப்பைக் குறைத்தது தொடர்பாகவும் அரசின் முடிவுகளை எதிர்த்து அடிப்படை உரிமைச் சட்ட அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஃபொன்சேகா. அதோடு அவர், 'ராஜபக்ஷேவும், கோத்தபயவும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி, தன்னை முழு எதிரியாகப் பார்ப்பதாகவும், நாட்டுக்கு 40 ஆண்டு கால சேவையாற்றிய என் விஷயத்தில் இப்படியான ஒரு நிலையை இவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டாம். மீடியாக்களைக்கூட நான் தொடர்புகொள்ளக் கூடாது என கட்டாயப்படுத்துவது எப்படி நியாயம்?' என்றும் கொதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி கொழும்பில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவரை வழிமறித்த பத்திரிகை யாளர்கள், 'அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், உங்களால் வெற்றி பெற முடியுமா?' என கேட்க.... 'என் வாழ்வில் இது வரை எந்த விஷயத்திலும் நான் தோற்றதில்லை!' என சிரித்தபடியே பதில் சொன்ன ஃபொன்சேகா, 'முக்கியக் கட்சிகள் எல்லாம் அதிபர் தேர்தல் தொடர்பான தங்களது நிலையை விளக்கி வருகின்றன. நானும் 29-ம் தேதி மாலை எனது நிலையை தெளிவாகக் கூறுவேன். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை செய்யும் பணிகளில் ஈடுபடுவேன்' என சஸ்பென்ஸாக கூறி, மொத்த இலங்கையையும் பரபரப்பின் பிடிக்குள் தள்ளினார்.

தமிழ் ஆடுகள்... திடீர் கேடயம்!

அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதை அறிவிக்கும் முன்னரே ராஜபக்ஷே சகோதரர்கள் மீது சரவெடி தாக்குதல் தொடங்கியிருந்தார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷே தமிழ் வாக்குகளை குறிவைப்பதை உணர்ந்தவர், கொழும்பில் கடந்த 27-ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், ''இறுதிக்கட்டப் போரில் தமிழர்களை கொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அதிபரின் சகோதரரான கோத்தபயதான் இறுதிக்கட்டப் போரை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவிக்க எனக்கு உத்தரவிட்டார்!'' என ஒரு குபீர் குண்டை வீசினார். உடனே பதறிய ராஜபக்ஷே தரப்பு, அவசரமாக தனது அமைச்சர்களை வைத்து இந்த விஷயத்தை மறுத்தது. அதற்கடுத்த தினம், ''இது வரை இலங்கையில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். யாராலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற முடியவில்லை! நான் ராணுவத் தளபதியான பிறகுதான் புலிகளுடனான போரில் முழு வெற்றி கிட்டியது. அதனால் இந்த வெற்றிக்கு அரசியல்வாதிகள் யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது!'' என ராஜபக்ஷேவை சீண்டினார் ஃபொன்சேகா. அதோடு, 'போரில் எண்ணற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது உண்மைதான்!' என மற்றொரு குண்டையும் வீசியிருக்கிறார்.

'விடுதலைப் புலிகளோடு அப்பாவித் தமிழர்களையும் ஆட்டுக் கூட்டத்தை வேட் டையாடும் ஓநாயாக சிதைத்துத் தீர்த்துவிட்டு, இப்போது தன்னை மட்டும் தற்காத்துக் கேடயம் பிடிக்கிறாரே' என்று தமிழ் உணர்வாளர்கள் அதிர்ந்துபோய்ப் பார்க்க... முன்னாள் தளபதி மனசாட்சிக்கு வேலை கொடுப்பதாக இல்லை. தொடர்ந்து அவரது சரமாரியான இந்தத் தாக்குதல்களால் திக்குமுக்காடிய ராஜபக்ஷே தரப்பு, தனது ஆதரவு அமைப்பு மூலமாக ஓர் அறிக்கை வெளியிட வைத்தது. இந்த அமைப்பின் தலைவரான குணதாச அமரசேகர, ''ஃபொன்சேகா எமது நாட்டு ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறார். யுத்தகாலத்தின் ராணுவ ரகசியங்களை வெளியிடுவது நல்லதல்ல. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்தான் இப்படியான செயல்களில் ஈடுபடுவார்கள். அமெரிக்காவின் தூண்டுதலோடுதான் ஃபொன்சேகா இப்படியெல்லாம் செயல்படுகிறார்...'' என பத்திரிகைகளிடம் பொங்கித் தீர்த்தார்.

இன்னொரு பக்கம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஃபொன்சேகாவுக்கு விழும் வாக்கு களைச் சிதறடிப்பதற்காக இடதுசாரி கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்சணாவை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ராஜபக்ஷே தரப்பு. அதோடு, தேர்தலில் வாக்காளர்களைக் குழப்ப, சரத் என்ற பெயரில் வேறு ஒருவரையும் களமிறக்க எண்ணமாம்!

அதிரடி வள்ளல் அவதாரம்!

நவம்பர் 29-ம் தேதி, ஜெய்ஹில்டன் ஹோட்டலில் தனது முதல் அரசியல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் ஃபொன்சேகா. இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள சுமார் 300 பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த அந்த சந்திப்புக்கு பளீர் வெள்ளை பைஜாமாவில் 'பச்சை' சிரிப்புடன் வந்திறங்கினார் மாஜி தளபதி. 'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் வாயிலாக 'அன்னம்' சின்னத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதாக' அறிவித்தவர், அடுத்தடுத்து விட்ட ஸ்டேட்மென்ட்கள் பத்திரிகையாளர்களையே அதிர வைத்திருக்கிறது.

''எந்த ஒரு விஷயத்திலும் நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும் இயற்கை! அந்த வகையில் ராஜபக்ஷே எனக்கு விரோதியாகியிருக்கிறார். புலிகளுக்கு நான் நண்பனாகியிருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற எவர் எனக்கு ஆதரவளிப்பினும் ஏற்றுக் கொள்வேன். பிரபாகரனின் தாய் - தந்தையர் ஆதரவளித்தால், அதையும் ஏற்றுக் கொள்வேன். புலி ஆதரவாளர்களும் நண்பர்களும் என்னை ஆதரிக்க பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டும். தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக எல்லாரும் 13-வது சட்டத் திருத்தத்தைத்தான் சொல்கிறார்கள். அது 20 வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தமிழ் மக்களுக்கு பெரிதாக என்ன கிடைத்துவிடப் போகிறது? அன்றிருந்த நிலைமையும் இப்போதைய நிலைமையும் வேறு. கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்பன போன்ற உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் 13-வது சட்டத் திருத்தத்துக்கும் மேலான நல்ல விஷயங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

அதோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்து நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பு கொடுக்கக் கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்' என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்! மேலும், 'வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மக்களை இந்த அரசாங்கம் கவனிக்கும் விதத்தைப் பொறுத்த வரை எனக்குத் திருப்தி இல்லை. சுமார் மூன்று லட்சம் மக்களை பெரும் சிரமத்துக்கிடையில் மீட்டுள்ளோம். இருப்பினும் அந்த மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்கள் இப்படியரு துன்பத்தை அனுபவிக்க நேரும் என நான் நினைக்கவில்லை. இந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதுடன் அவர்களை எந்தச் சிரமமுமின்றி மீள்குடியேற்றம் செய்வதுதான் எனது முதல் பணி'' என தமிழர்களை வாழ்விக்க வந்த வள்ளலாகவே வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருக்கிறார்! 'துன்பக்கேணியில் அல்லாடும் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை, தரையில் ஓநாய்.... தண்ணீரில் முதலை... இதில் யார் கழுத்துக்கு அவர்கள் ஓட்டு மாலை சூட்டுவது?' என்பதுதான் இலங்கை பூமியில் எழுந்திருக்கும் முதல் தேர்தல் கேள்வி!

- மு.தாமரைக்கண்ணன்
நன்றி: எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு........

Wednesday, December 2, 2009

ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்

1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.

கொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.

வழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.

83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி "காணாமல்போனார்கள்." சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது முக்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.

இராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.

போராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந்து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.

ராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.

1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண்களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.

1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண்மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.

முதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.

பல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. "ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா? அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா?" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.

கொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.

பிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.

நன்றி:கலையகம்

ஈழ‌ம் - மௌனத்தின் விலை

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகளுக்கிடையே வந்திருக்கிறது நவம்பர் 27, ஈழத் தமிழர்களின் தேசிய நினைவு தினம். ஒரு வார விழாவாக கொண்டாடப்பட்டு இறுதியில் பிரபாகரனின் உரையோடு நிறைவு பெறும் விழாவில் இவ்வருட உரையை நிகழ்த்தப் போகிறவர் யார் என்ற கேள்விகளுக்கு ஊடகங்கள் பல விதமான யூகங்களை வெளியிட்டு வந்தன. இம்மாதிரியான யூகங்களை வெளியிட்டும் அத்தோடு தங்களை இணைத்துப் பார்த்து பூரிப்படைவதும், அல்லது குழப்பமடைவதுமான மன நிலை தமிழர்களிடையே காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிரளயங்கள் எந்த மக்களின் பெயரால் நடைபெறுகிறதோ அந்த வன்னி மக்களிடம் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. தங்களின் வாழ்வு குறித்து இன்று நினைப்பது கூட பெரும் பாவமான காரியம் போல அரசு பயங்கரவாதம் ஆட்டம் போடுகிறது.

இலங்கையைச் சுற்றி நிலவும் மவுனம் அபத்தமான இடியாக தமிழ் மக்கள் மேல் இறங்குகிறது. துவைத்தெடுக்கப்பட்டு நைந்து போன அம்மக்களிடம் போய் இலங்கை அரசும் சிங்கள ஆதரவாளர்களும், முப்பதாண்டுகாலமாக நீங்கள் பிரபாகரனையும், தமிழ் ஈழத்தையும் நம்பியதன் மூலம் பெரும் பாவகாரியத்தை செய்து விட்டீர்கள் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிக்கிறார்கள். ஆனால் அம்மக்கள் தொடர்பாக உண்மைகளைப் பேசவோ காலப் பெருவெளியின் சேற்றில் சிக்கியிருக்கும் அம்மக்களை கைதூக்கி விடவோ இன்று நாதியில்லை. தமிழ் இனம் அழிந்தாலும் பரவாயில்லை தமிழுக்கு மகுடம் சூட்டலாம் என நினைக்கிறார்கள் தமிழினத் தலைவர்கள். ஆதரவுகள், சவால்கள், ஆருடங்கள், எதிர்பார்ப்புகள் இவைகளுக்கப்பால் வன்னி மக்கள் பற்றிய சில உண்மைகளை நாம் பேசியாக வேண்டும்.

வன்னிப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே௧17ஆம் தேதியை ஒட்டி இலங்கைக்குச் சென்ற இந்திய அதிகாரிகளிடம் இலங்கை ஒரு உறுதி மொழியைக் கொடுத்தது. 180 நாட்களுக்குள் முகாம்களுக்குள் உள்ள மக்களை விடுவித்துவிடுவோம் என்பதுதான் அந்த உறுதிமொழி. போர் முடிந்து 180 நாட்கள் ஓடிக் கழிந்து விட்டது. இன்னமும் பெரும்பாலான வன்னி மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் சொல்லண்ணாக் கொடுமைகளை அனுபவித்தபடி பிச்சைக்காரர்களைப் போல அழுது கொண்டிருக்கிறார்கள். ஆமாம் அவர்கள் இன்று பிச்சைக்காரர்கள்தான். முப்போகமும் நஞ்சையும் புஞ்சையுமாய் பயிர் செய்து வாழ்ந்த மானமுள்ள விவசாய பூமி வன்னி மண். ஒரு வேளை உணவுக்காகவும் நல்ல ஆடையொன்றிற்காகவும் இன்று அவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 180 நாட்களுக்குள் மக்களை விடுவித்து விடுவதாகச் சொன்ன இலங்கையோ இந்தியாவை ஏமாற்றவில்லை மாறாக புரிந்துணர்வுடனே செயல்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இலங்கைக்கும் இல்லை; கொடுத்த வாக்குறுதியை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கும் இல்லை. காரணம் வன்னி மக்கள் இன்று கேள்வி கேட்க நாதியற்ற மக்கள். கேட்கும் நிலையில் இருக்கிறவர்கள் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனைய தமிழ்த் தலைவர்களோ தலைவர் வருவாரா, உரை நிகழ்த்துவாரா என்று மக்களைப் பற்றிய கவலையில்லாமல் வெறும் அறிக்கை நாயகர்களாக இருக்கிறார்கள். இந்த கடித நாயகர்களுக்கும், அறிக்கை நாயகர்களுக்குமிடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களோ ஈழத் தமிழனைக் கொன்ற கொலை பாவத்தைக் கண்டு நாம் மௌனமாக இருந்து விட்டோமே என்று மனதுக்குள் அழுகிறான். மௌன வலியோடு வாழ்கிறான்.

இந்நிலையில்தான் தமிழகத்தில் வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டது போன்ற தோற்றம் ஒன்றை ஆளும் கட்சியும் அதன் ஊடகங்களும் தோற்றுவித்திருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவரவர் சொந்தச் செலவில் இலங்கைக்கு மேற்கொண்ட இன்பச் சுற்றுலாவை ஒட்டி அப்படியான ஒரு தோற்றம் ஒன்று உருவாகியிருக்கிறது. ஆனால் முட்கம்பி வேலிகளுக்குள் இன்னமும் சிக்கியிருக்கும் பெரும்பான்மை வன்னி மக்களின் நிலை மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட மக்களின் நிலையும் மிக மிகப் பரிதாபகரமானதாக இருக்கிறது. வன்னிப் போரில் தோல்வியுற்று நந்திக்கடலைக் கடந்து அவர்கள் முகாம்களுக்குள் வந்தபோது, வன்னி மக்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் வழங்கப்பட்டது. எண் என்பது எண்ணிக்கைக்காக அல்ல; தேவைப்படும்போது அழைத்துச் சென்று கேள்விகற்ற முறையில் விசாரணை செய்யும் நிர்வாக வசதிக்காக வழங்கப்பட்ட எண்கள்தான் அவை.

ஆனால் புலிகளின் மூத்த தலைவர்கள், இரண்டாம் மட்டத் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள், நீண்டகாலப் போராளிகள், இறுதி நேரத்தில் இணைந்தவர்கள், தீவீரமான ஆதரவாளர்கள், அனுதாபிகள் என பலவகையாகப் பிரித்து அதற்கு ஏற்ப எண்கள் கொடுத்து ஆதரவாளர்களையும், அனுதாபிகளையும் மட்டும் முகாம்களுக்குள் வைத்து விட்டு ஏனையோர் எல்லோரையும் கைது செய்து ரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். புலிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சித்திரவதை தடுப்பு முகாம்களுக்கு இலங்கை அரசு வைத்திருக்கும் பெயர் 'புனர் வாழ்வு மையங்கள்'. இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை வகைப்பிரித்து அந்த வரையறைக்கு அப்பாற்பட்ட மக்களாக கொஞ்சம் பேரை அடையாளம் காண்டு அவர்களை மட்டுமே இப்போது விடுவித்திருக்கிறார்கள். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் கூட எல்லோரையும் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியமர்த்தவில்லை.

மக்களின் நிலை?

போருக்குப் பின்னர் வவுனியா உட்பட வடக்கில் பல்வேறு இடங்களில் அடைக்கப்பட்டிருந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் 1,19,000 பேரை அவர்களின் வாழ்விடங்களில் குடியமர்த்தி விட்டோம் என்று சொல்லியிருக்கிறது இலங்கை அரசு. விடுவிக்கப்படும் மக்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்கிறது இலங்கை அரசு என்று தமிழக முதல்வர் கருணாநிதியும் சொல்லியிருந்தார். ஆனால் விடுவிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்த கிரவுண்ட் வியூவ்ஸ் என்னும் இணைய தள நிருபர் மக்கள் விடுதலை தொடர்பாக இந்திய மத்திய மாநில அரசுகள் உருவாக்க விரும்பும் தோற்றத்தை நம்முன் குலைத்துப் போட்டு விடுகிறார். கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகள் சிலவும் உண்டு.

முகாம்களில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பலானவர்கள் இன்னும் திரும்பவில்லை என்பதுடன், இப்படி காணாமல் போனவர்கள் குறித்து முறையிடுவதற்கான உரிமையோ தைரியமோ கூட இல்லாத அம்மக்கள் இக்கணத்தில் கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பலானவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் சிங்களர்கள் குடியேறியிருக்கிறார்கள். தங்களின் வீடுகளை தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டால் அதற்கும் தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று பலர் பொது இடங்களில் இன்னமும் வாழ்கிறார்கள். துணுக்காய் என்னுமிடத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் கொஞ்சம் உணவுப் பொருளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக முதல்வர் சொல்கிற இருபதாயிரம் ரூபாயை விடுவிக்கப்பட்ட எந்த ஒரு ஈழத் தமிழரும் பெறவில்லை. ஆனால் விடுவிக்கப்படும் மக்களின் வங்கிக் கணக்குகளில் அப்பணத்தை டெப்பாசிட் செய்வோம் என்று இலங்கை அரசு சொல்கிறதாம்.

இப்பணம் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அகதிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படுகிறது. அது போல உணவுப் பொருட்கள் ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் கீழும், ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கான பரிந்துரையை ஆசிய வளர்ச்சி வங்கி செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகும்போது முதல்வர் சுட்டிக் காட்டிய இந்தியாவின் நிதி உதவி 1,000 கோடி ரூபாய் என்பது எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது. இந்தியா அம்மக்களுக்கு கொடுத்தது கூடாரங்கள் அமைப்பதற்கான பிளாஸ்டிக் அட்டைகளையும், தகரங்களையும்தான். ஏனைய நிதி உதவிகள் எல்லாம் இலங்கை அரசுக்கு செய்தது. அதை துளியளவும் அவர்கள் அம்மக்களுக்கு பயன்படுத்தவில்லை. போரின் போது கொடுத்த குத்தகைக் கப்பல்கள், விமானங்கள் மூலம் போரை நடத்தினார்கள். இப்போது கொடுக்கும் நிதிகளையும் இலங்கை தமிழ் மக்களுக்குக் கொடுக்கவில்லை.

இப்படி கண்ணுக்குத் தெரியும் முடம்பி வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களையும் கண்ணுக்குத் தெரியாத முட்கம்பி வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களையும் வைத்து இங்குள்ள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு தாங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டது போன்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். விடுதலையானவர்களின் கதை இப்படி என்றால் இன்னமும் முகாம்களுக்குள் உள்ள மக்களின் துன்பமோ சொல்ல முடியாத சோகங்களை சுமந்திருக்கிறது. அது மழை விட்ட பின்னரான தூவானம் போன்றதல்ல. வன்னி புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்தபோது புலிகள் செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபான் அறிவுச்சோலை என்று குழந்தைகளுக்கான காப்பகங்களை நடத்தி வந்தார்கள். இதிலிருந்த ஆதரவற்ற சிறுவர்கள் ஆயிரக்கணக்கானோரை இலங்கை இராணுவம் பிடித்து வந்தது.

இப்போது அரசு மறுவாழ்வு இல்லங்களில் இருநூறுக்கும் குறைவான சிறுவர்களே எஞ்சியிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளில் பல நூறு பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. போர் முடிவுற்றபோது இருபதாயிரம் போராளிகள் சரணடைந்திருப்பதாக அரசுத் தரப்பு ஊடகங்களே செய்தி வெளியிட்டன. இப்போது மறுவாழ்வு இல்லங்களில் பத்தாயிரத்திற்கும் குறைவான போராளிகள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அப்படி எனில் மீதி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள்? இன்று வன்னி மண் அதன் வளத்தையும், நிலத்தையும், பணத்தையும் மட்டுமல்ல மனித வளத்தையும் இழந்து நிற்பதை ஒட்டு மொத்த வன்னி மக்களிடம் காண முடிகிறது. இந்நிலையில் தமிழக எம்பிக்கள் முகாம்களை பார்வையிட்டு வழங்கிய சான்றிதள் திருப்தியளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. பருவமழை தொடங்கும் முன்பே மக்களை விடுவிக்கக் கோருவதுதான் எம்பிக்களின் பயண நோக்கம். ஆனால் சமீபத்தில் பெய்த புயல் மழை காரணமாக இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்து எங்கும் தண்ணீர் காடாக காட்சியளிகிறது. இது தொடர்பான சில செய்திகளும் வெளிவந்தன. கொழும்பு நகரின் கதியே இதுவென்றால் மெனிக்பாம் காடுகளில் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுள்ள மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க முடியுமா?

மழைக்கு முன்னால் மக்களை முகாம்களை விட்டு அனுப்பச் சென்ற தமிழக எம்பிக்களின் அறிக்கையோ பரம ரகசியமான அறிக்கையாக இருக்கிறது. உண்மையில் அந்த நாடாளுமன்றக் குழுவினரின் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என்று எந்த தமிழ்க் குடிமகனுக்கும் கேட்கும் உரிமை இல்லை. காரணம் அவர்கள் சென்றது அவரவர் தனிப்பட்டச் செலவில். செலவுப் பிரச்சனை இருப்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆகவே அவர்கள் அறிக்கையை கருணாநிதியிடம் மட்டுமே சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைப்பார் என்று முதலில் சொன்னார்கள். எம்பிக்கள் குழு வந்தது; அறிக்கை சமர்பிக்கப்பட்டது ஆனால் இன்று வரை முகாம் மக்கள் குறித்து எவ்வித கோரிக்கையையும் கருணாநிதி மத்திய அரசிடம் வைக்கவில்லை. வழக்கமாக எழுதும் கடிதம் கூட எழுதவில்லை. ஆனால் இப்போது தமிழக அகதிகளின் முன்னேற்றம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. காரணம் அவரைப் பொறுத்தவரையில் இருபதைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு முகாம் மக்கள் விடுதலையாகிவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்.

அரசியல் கைதிகள்?

இங்கு பேசப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தமிழ் அரசியல் கைதிகள் குறித்தது. போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் புலிகளின் பிரதான தலைவர்களும் உண்டு. யோகரத்தினம் என்னும் யோகி, பாலகுமார், பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை , தமிழினி, தமிழ்ச்செல்வன், சூசையின் மனைவி, பிரபாகரனின் பெற்றோர் என எண்ணிடங்கா ஆண் பெண் தலைவர்கள் ரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இவர்களின் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள்
என்பது கூடத் தெரியவில்லை. ஒரு கைதியை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதுதான் சிவில் சமூக நடைமுறை. ஆனால் இன்று வரை கைது செய்யப்பட்ட இந்தத் தலைவர்களை நீதிமன்றத்திலும் நிறுத்தவில்லை. அவர்கள் பற்றிய தகவல்களும் இல்லை.

முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களும் சரி, ரகசிய தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களும் சரி, முகாம்களை விட்டு வெளியேறி கடுமையான கண்காணிப்பின் கீழ் வாழும் மக்களும் சரி என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்வி ஒன்று இருக்கிறது. ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு வழங்கப்படும் சிவில் உரிமைகள் கூட ஏன் இம்மக்களுக்கு மறுக்கப்படுகிறது? அவர்கள் என்ன கொலைகாரர்களா, இல்லை கொள்ளைக்காரர்களா என்றால், அவர்கள் தாங்கள் நம்பிய தேசிய உணவுகளுக்காகப் போராடினார்கள். அது சரியோ தவறோ? சரி, தவறு என்னும் ஒற்றை நோக்கிலிருந்து அணுகாமல் அவர்கள் மனிதர்கள்; நம்மைப் போலவும் இலங்கைத் தீவின் ஏனைய சிங்களர்களைப் போல வாழும் உரிமை பெற்றவர்கள் என்று அணுகினால் ஒட்டு மொத்த வன்னி மக்களுமே அரசியல் கைதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த அரசியல் கைதிகள் தமிழர்களாக இருப்பதாலேயே அவர்கள் சாகத்தான் வேண்டும் என்றால் அதை நாகரிகமுள்ள அரசுகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசுகள் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா?

இதற்கு முன்னால் புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்களர்களை இலங்கை அரசு விடுவிக்கவில்லையா? வடக்கில் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்திற்கு முன்னர் எழுபதுகளில் அதாவது 1971, 81, 89 என்று மூன்று பெரும் ஆயுதக் கிளர்ச்சியை இலங்கை அரசு சந்தித்தது. ஜே.வி.பி என்னும் இனவாத இடதுசாரிக் கட்சியின் பின்னால் அணி திரண்ட சிங்கள இளைஞர்கள் இப்புரட்சியை நடத்தினார்கள். இடது முன்னணியின் அந்தப் புரட்சியை முன்னின்று நடத்திய சமல் ஜயநித்தி, ரோகண விஜயவீர தலைமையிலான கிளர்ச்சியாளர்களை அரசியல் கைதிகளாகக் கருதி விடுதலை செய்தது இலங்கை அரசு. அன்றைக்கு இந்த சிங்கள இளைஞர்களின் விடுதலைக்காகப் போராடியவர் தன்னை ஒரு இடதுசாரியாகக் காட்டிக் கொண்ட ராஜபட்சே. இன்றைக்கு அவர் ஆளும் கட்சி, அவர்தான் அதிபரே.

சிங்களர்களின் கிளர்ச்சியை அரசியல் போராட்டமாகப் பார்த்த ராஜபட்சே அதே கிளர்ச்சியை வடக்கில் தமிழ் மக்கள் செய்தபோது அதை இனவாதமாகப் பார்த்தார். இன்று வெற்றி பெற்றுவிட்ட பெரும்பான்மை சிங்கள இனத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவாக்கப்பட்டிருக்கிறார் ராஜபட்சே. துட்டகைமுனுவால் சிங்களர்களையும் தமிழ் மக்களையும் எப்படி ஒன்றாகக் காண முடியும்? ஆகவே துட்டகைமுனுவின் ஆட்சியில் சிக்கிக் கொண்டு விலைபேசப்பட்ட அரசியல் அடிமைகளாக அம்மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நடந்து முடிந்துள்ள போர் என்பது கொடுங்கனவு போல தமிழ் மக்களை பீடித்துள்ளது. உலக அளவிலான ஆய்வாளர்கள் வன்னிப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் வன்னி முழுக்க இனப்படுகொலைக்கான சாட்சியங்கள் இறைந்து கிடக்கின்றன.

இனப்படுகொலையின் சாட்சியங்களாக இருக்கும் அம்மக்களுக்கு நம்பிக்கையளிக்கவோ சாட்சியங்களை ஒழுங்கு செய்து இனக் கொலை குற்றவாளிகளுக்கு எதிரான வாக்குமூலங்களைப் பதிவு செய்யவோ யாரும் இல்லை. மக்களிடம் சொல்வதற்கு எவளவோ கதைகள் இருக்கிறது. ஆனால் கேட்பதற்கு நம்மிடம்தான் செவிகள் இல்லை. மௌனம் என்பது பெரும் அச்சமாக அம்மக்கள் மீது படர்ந்து இப்போது அது உறைந்து விட்டது. இதற்கு இந்தியாதான் காரணம். ஆமாம் மத்திய மாநில அரசுகளே காரணம். ஐநாவோ மேற்குலகமோ அதற்குப் பிறகுதான். அண்டை வீட்டில் எரிந்த தீயை நாம் அணைக்கவில்லையே. மாறாக எண்ணெய் அல்லவா ஊற்றி விட்டோம்? எதிர்காலத்தில் சிங்களர்களோடு சேர்ந்து வாழும் சாத்தியங்களை இழந்துவிட்ட தமிழ் மக்கள் கோரி நிற்கும் ஈழ உணர்வுக்கு ஆதரவாக நாம் என்ன செய்யப் போகிறோம்?

- பொன்னிலா

நன்றி:எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு,,,,,,,,,,,,,,,,,,

இந்தியாவை நம்ப வைக்க பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை நாடகம் ஆடுகிறது; ஈழ தமிழ் எம்.பி. பேச்சு


"எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது...."




கொழும்பு, நவ. 29-

விடுதலைப்புலி தலைவர் 1989-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு பழ. நெடுமாறன் அணிந்துரை எழுதியுள்ளார். கவிஞர்கள் காசிஆனந்தன், பெருஞ்சித்திரனார் கவிதை எழுதி உள்ளனர்.இந்த புத்தக வெளியீட்டு விழா ஈழத்தில் நடந்தது. விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது:-

பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இந்த உரை களை படித்துப்பார்த்தால் பிரபாகரன் தன் கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளார் என்பது தெளிவாகப் புரியும்.

ஈழம் நாட்டை உருவாக்க அவர் எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்துள்ளார். சர்வதேச சக்திகளிடம் பேச்சு நடத்தி உள்ளார்.

ஆனால் சர்வதேச சமூகம் அவருக்கு துரோகம் செய்து விட்டன. இப்போதும் பல நாடுகள் அவருக்கு எதிராக செயல்படுகின்றன.

ஈழத் தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் என்னால் பல விஷயங்களை வெளியில் சொல்ல இயலாது. ஈழத்தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்தும் வெளியில் வரும்.

எமது தலைவர் பிரபாகரன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன் உடல் எதிரிகளின் கைகளில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தவர். இதற்காகவே தன் அருகில் போராளிகளை வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர் உடலை முள்ளி வாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று சிங்கள அரசு கூறும் கதையை சிறுபிள்ளை கூட நம்பாது.

இந்தியாவை நம்ப வைக்க இப்படி ஒரு நாடகத்தை இலங்கை அரசு நடத்தியது. எனவே நம் லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியிலான போராட்டங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு ஜெயானந்த மூர்த்தி எம்.பி. பேசினார்.

http://www.maalaimalar.com/2009/11/29125047/CNI02502901109.html
நன்றி:ஓடும்நதி

சிங்களச் சிறையிலிருந்த 18 தமிழகமீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர்





மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர்


மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் வீரமணி(21) ரத்தினம்(21) சுகன்(21) பிரகாஷ்(23) சிவராஜ்(23) திவேல்(24) உட்பட 18 பேர் கடந்த 2ம் தேதி ஐந்து படகுகளில் கோடியக்கரையில் தமிழக எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக படகுகளை நோக்கி சுட்டு, துப்பாக்கிமுனையில் மீனவர்களை கடத்திச் சென்று இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கபட்ட பின் தமிழக மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் உள்ள மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கேட்டுக் கொண்டதின் பேரில் மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.


நவ., 26ல் இலங்கையிலுள்ள மல்லாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களை, எவ்வித கட்டுபாடும் இன்றி கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவற்படையிடம் தமிழக மீனவர்கள் 18 பேரை ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவற்படையினர் 18 மீனவர்களையும் நேற்று காலை 8 மணிக்கு மண்டபம் அழைத்து வந்தனர். பின் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


விடுதலை செய்யப்பட்ட மீனவர் ரவி (38) கூறுகையில், ""நவ., 2ல் நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் படகுகளை நோக்கி சுட்டு எங்கள் கைகளை மேலே உயர்த்தச் சொல்லி மூன்று மணி நேரம் சித்திரவதை செய்தனர். இந்திய தூதரகத்திலிருந்து தகவல் வந்தால், எங்களை விடுதலை செய்வதாக கோர்ட் தெரிவித்தது. ஆனால், இந்திய தூதரகத்திலிருந்து எங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாங்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டோம்,'' என்றார்.

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14396&ncat=TN&archive=1&showfrom=11/30/२०
நன்றி:ஓடும்நதி


எம் உடல் எதிரியின் கைகளுக்கு சிக்கக் கூடாது...!


http://www.alaikal.com/news/wp-content/sarath12.jpg

ராஜபக்சே 2000 சிங்களப் படையினரை தன்னுடைய பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டபடி தான் வெளியில் நடமாடுகிறான்.


இந்த தொடை நடுங்கி பன்றி உலகத்துக்கு பேட்டி கொடுக்கிறான், இப்படி...

நாங்கள் புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம்!

என்று...

சரத் பொன் சேகா பேச்சிலிருத்து...
மாலை முரசு, 28.11.09.

http://www.tamilnet.com/img/publish/2004/08/ltte_rpg_force_3_27874_435.jpg




சிங்கள மீனவர்கள் 68 பேர் தமிழக சிறையில் அடைப்பு


Court news detail

சென்னை : இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 68 இலங்கை மீனவர்கள், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆந்திரா அருகே இந்திய கடல் பகுதியில், கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இலங்கை மீனவர்கள் சிலர், விசைப்படகுகளில் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, "விக்ரம்' ரோந்துக் கப்பல் அப்பகுதிக்கு விரைந்து சென்றது.
ஆந்திராவின் கிருஷ்ணாம்பட்டினம், ராமையா பட்டினம் அருகே 120 முதல் 150 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இலங்கை விசைப்படகுகளை, கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். அப்படகுகளிலிருந்த 68 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 6.6 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பிடிபட்ட 68 இலங்கை மீனவர்களும் பலத்த பாதுகாப்போடு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 68 பேரும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட 68 பேரும், எழும்பூர் ஐந்தாவது பெருநகர மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


ஒரே நாளில் 68 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஆறு மாதத்தில், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக 359 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4579&ncat=TN&archive=1&showfrom=11/30/2009
நன்றி:ஓடும்நதி