புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகளுக்கிடையே வந்திருக்கிறது நவம்பர் 27, ஈழத் தமிழர்களின் தேசிய நினைவு தினம். ஒரு வார விழாவாக கொண்டாடப்பட்டு இறுதியில் பிரபாகரனின் உரையோடு நிறைவு பெறும் விழாவில் இவ்வருட உரையை நிகழ்த்தப் போகிறவர் யார் என்ற கேள்விகளுக்கு ஊடகங்கள் பல விதமான யூகங்களை வெளியிட்டு வந்தன. இம்மாதிரியான யூகங்களை வெளியிட்டும் அத்தோடு தங்களை இணைத்துப் பார்த்து பூரிப்படைவதும், அல்லது குழப்பமடைவதுமான மன நிலை தமிழர்களிடையே காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிரளயங்கள் எந்த மக்களின் பெயரால் நடைபெறுகிறதோ அந்த வன்னி மக்களிடம் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. தங்களின் வாழ்வு குறித்து இன்று நினைப்பது கூட பெரும் பாவமான காரியம் போல அரசு பயங்கரவாதம் ஆட்டம் போடுகிறது.
இலங்கையைச் சுற்றி நிலவும் மவுனம் அபத்தமான இடியாக தமிழ் மக்கள் மேல் இறங்குகிறது. துவைத்தெடுக்கப்பட்டு நைந்து போன அம்மக்களிடம் போய் இலங்கை அரசும் சிங்கள ஆதரவாளர்களும், முப்பதாண்டுகாலமாக நீங்கள் பிரபாகரனையும், தமிழ் ஈழத்தையும் நம்பியதன் மூலம் பெரும் பாவகாரியத்தை செய்து விட்டீர்கள் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிக்கிறார்கள். ஆனால் அம்மக்கள் தொடர்பாக உண்மைகளைப் பேசவோ காலப் பெருவெளியின் சேற்றில் சிக்கியிருக்கும் அம்மக்களை கைதூக்கி விடவோ இன்று நாதியில்லை. தமிழ் இனம் அழிந்தாலும் பரவாயில்லை தமிழுக்கு மகுடம் சூட்டலாம் என நினைக்கிறார்கள் தமிழினத் தலைவர்கள். ஆதரவுகள், சவால்கள், ஆருடங்கள், எதிர்பார்ப்புகள் இவைகளுக்கப்பால் வன்னி மக்கள் பற்றிய சில உண்மைகளை நாம் பேசியாக வேண்டும்.
வன்னிப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே௧17ஆம் தேதியை ஒட்டி இலங்கைக்குச் சென்ற இந்திய அதிகாரிகளிடம் இலங்கை ஒரு உறுதி மொழியைக் கொடுத்தது. 180 நாட்களுக்குள் முகாம்களுக்குள் உள்ள மக்களை விடுவித்துவிடுவோம் என்பதுதான் அந்த உறுதிமொழி. போர் முடிந்து 180 நாட்கள் ஓடிக் கழிந்து விட்டது. இன்னமும் பெரும்பாலான வன்னி மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் சொல்லண்ணாக் கொடுமைகளை அனுபவித்தபடி பிச்சைக்காரர்களைப் போல அழுது கொண்டிருக்கிறார்கள். ஆமாம் அவர்கள் இன்று பிச்சைக்காரர்கள்தான். முப்போகமும் நஞ்சையும் புஞ்சையுமாய் பயிர் செய்து வாழ்ந்த மானமுள்ள விவசாய பூமி வன்னி மண். ஒரு வேளை உணவுக்காகவும் நல்ல ஆடையொன்றிற்காகவும் இன்று அவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 180 நாட்களுக்குள் மக்களை விடுவித்து விடுவதாகச் சொன்ன இலங்கையோ இந்தியாவை ஏமாற்றவில்லை மாறாக புரிந்துணர்வுடனே செயல்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இலங்கைக்கும் இல்லை; கொடுத்த வாக்குறுதியை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கும் இல்லை. காரணம் வன்னி மக்கள் இன்று கேள்வி கேட்க நாதியற்ற மக்கள். கேட்கும் நிலையில் இருக்கிறவர்கள் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனைய தமிழ்த் தலைவர்களோ தலைவர் வருவாரா, உரை நிகழ்த்துவாரா என்று மக்களைப் பற்றிய கவலையில்லாமல் வெறும் அறிக்கை நாயகர்களாக இருக்கிறார்கள். இந்த கடித நாயகர்களுக்கும், அறிக்கை நாயகர்களுக்குமிடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களோ ஈழத் தமிழனைக் கொன்ற கொலை பாவத்தைக் கண்டு நாம் மௌனமாக இருந்து விட்டோமே என்று மனதுக்குள் அழுகிறான். மௌன வலியோடு வாழ்கிறான்.
இந்நிலையில்தான் தமிழகத்தில் வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டது போன்ற தோற்றம் ஒன்றை ஆளும் கட்சியும் அதன் ஊடகங்களும் தோற்றுவித்திருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவரவர் சொந்தச் செலவில் இலங்கைக்கு மேற்கொண்ட இன்பச் சுற்றுலாவை ஒட்டி அப்படியான ஒரு தோற்றம் ஒன்று உருவாகியிருக்கிறது. ஆனால் முட்கம்பி வேலிகளுக்குள் இன்னமும் சிக்கியிருக்கும் பெரும்பான்மை வன்னி மக்களின் நிலை மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட மக்களின் நிலையும் மிக மிகப் பரிதாபகரமானதாக இருக்கிறது. வன்னிப் போரில் தோல்வியுற்று நந்திக்கடலைக் கடந்து அவர்கள் முகாம்களுக்குள் வந்தபோது, வன்னி மக்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் வழங்கப்பட்டது. எண் என்பது எண்ணிக்கைக்காக அல்ல; தேவைப்படும்போது அழைத்துச் சென்று கேள்விகற்ற முறையில் விசாரணை செய்யும் நிர்வாக வசதிக்காக வழங்கப்பட்ட எண்கள்தான் அவை.
ஆனால் புலிகளின் மூத்த தலைவர்கள், இரண்டாம் மட்டத் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள், நீண்டகாலப் போராளிகள், இறுதி நேரத்தில் இணைந்தவர்கள், தீவீரமான ஆதரவாளர்கள், அனுதாபிகள் என பலவகையாகப் பிரித்து அதற்கு ஏற்ப எண்கள் கொடுத்து ஆதரவாளர்களையும், அனுதாபிகளையும் மட்டும் முகாம்களுக்குள் வைத்து விட்டு ஏனையோர் எல்லோரையும் கைது செய்து ரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். புலிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சித்திரவதை தடுப்பு முகாம்களுக்கு இலங்கை அரசு வைத்திருக்கும் பெயர் 'புனர் வாழ்வு மையங்கள்'. இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை வகைப்பிரித்து அந்த வரையறைக்கு அப்பாற்பட்ட மக்களாக கொஞ்சம் பேரை அடையாளம் காண்டு அவர்களை மட்டுமே இப்போது விடுவித்திருக்கிறார்கள். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் கூட எல்லோரையும் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியமர்த்தவில்லை.
மக்களின் நிலை?
போருக்குப் பின்னர் வவுனியா உட்பட வடக்கில் பல்வேறு இடங்களில் அடைக்கப்பட்டிருந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களில் 1,19,000 பேரை அவர்களின் வாழ்விடங்களில் குடியமர்த்தி விட்டோம் என்று சொல்லியிருக்கிறது இலங்கை அரசு. விடுவிக்கப்படும் மக்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுக்கிறது இலங்கை அரசு என்று தமிழக முதல்வர் கருணாநிதியும் சொல்லியிருந்தார். ஆனால் விடுவிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்த கிரவுண்ட் வியூவ்ஸ் என்னும் இணைய தள நிருபர் மக்கள் விடுதலை தொடர்பாக இந்திய மத்திய மாநில அரசுகள் உருவாக்க விரும்பும் தோற்றத்தை நம்முன் குலைத்துப் போட்டு விடுகிறார். கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகள் சிலவும் உண்டு.
முகாம்களில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பலானவர்கள் இன்னும் திரும்பவில்லை என்பதுடன், இப்படி காணாமல் போனவர்கள் குறித்து முறையிடுவதற்கான உரிமையோ தைரியமோ கூட இல்லாத அம்மக்கள் இக்கணத்தில் கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பலானவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் சிங்களர்கள் குடியேறியிருக்கிறார்கள். தங்களின் வீடுகளை தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டால் அதற்கும் தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று பலர் பொது இடங்களில் இன்னமும் வாழ்கிறார்கள். துணுக்காய் என்னுமிடத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் கொஞ்சம் உணவுப் பொருளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக முதல்வர் சொல்கிற இருபதாயிரம் ரூபாயை விடுவிக்கப்பட்ட எந்த ஒரு ஈழத் தமிழரும் பெறவில்லை. ஆனால் விடுவிக்கப்படும் மக்களின் வங்கிக் கணக்குகளில் அப்பணத்தை டெப்பாசிட் செய்வோம் என்று இலங்கை அரசு சொல்கிறதாம்.
இப்பணம் ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அகதிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படுகிறது. அது போல உணவுப் பொருட்கள் ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் கீழும், ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கான பரிந்துரையை ஆசிய வளர்ச்சி வங்கி செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகும்போது முதல்வர் சுட்டிக் காட்டிய இந்தியாவின் நிதி உதவி 1,000 கோடி ரூபாய் என்பது எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது. இந்தியா அம்மக்களுக்கு கொடுத்தது கூடாரங்கள் அமைப்பதற்கான பிளாஸ்டிக் அட்டைகளையும், தகரங்களையும்தான். ஏனைய நிதி உதவிகள் எல்லாம் இலங்கை அரசுக்கு செய்தது. அதை துளியளவும் அவர்கள் அம்மக்களுக்கு பயன்படுத்தவில்லை. போரின் போது கொடுத்த குத்தகைக் கப்பல்கள், விமானங்கள் மூலம் போரை நடத்தினார்கள். இப்போது கொடுக்கும் நிதிகளையும் இலங்கை தமிழ் மக்களுக்குக் கொடுக்கவில்லை.
இப்படி கண்ணுக்குத் தெரியும் முடம்பி வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களையும் கண்ணுக்குத் தெரியாத முட்கம்பி வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களையும் வைத்து இங்குள்ள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு தாங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டது போன்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். விடுதலையானவர்களின் கதை இப்படி என்றால் இன்னமும் முகாம்களுக்குள் உள்ள மக்களின் துன்பமோ சொல்ல முடியாத சோகங்களை சுமந்திருக்கிறது. அது மழை விட்ட பின்னரான தூவானம் போன்றதல்ல. வன்னி புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்தபோது புலிகள் செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபான் அறிவுச்சோலை என்று குழந்தைகளுக்கான காப்பகங்களை நடத்தி வந்தார்கள். இதிலிருந்த ஆதரவற்ற சிறுவர்கள் ஆயிரக்கணக்கானோரை இலங்கை இராணுவம் பிடித்து வந்தது.
இப்போது அரசு மறுவாழ்வு இல்லங்களில் இருநூறுக்கும் குறைவான சிறுவர்களே எஞ்சியிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளில் பல நூறு பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. போர் முடிவுற்றபோது இருபதாயிரம் போராளிகள் சரணடைந்திருப்பதாக அரசுத் தரப்பு ஊடகங்களே செய்தி வெளியிட்டன. இப்போது மறுவாழ்வு இல்லங்களில் பத்தாயிரத்திற்கும் குறைவான போராளிகள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அப்படி எனில் மீதி பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள்? இன்று வன்னி மண் அதன் வளத்தையும், நிலத்தையும், பணத்தையும் மட்டுமல்ல மனித வளத்தையும் இழந்து நிற்பதை ஒட்டு மொத்த வன்னி மக்களிடம் காண முடிகிறது. இந்நிலையில் தமிழக எம்பிக்கள் முகாம்களை பார்வையிட்டு வழங்கிய சான்றிதள் திருப்தியளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. பருவமழை தொடங்கும் முன்பே மக்களை விடுவிக்கக் கோருவதுதான் எம்பிக்களின் பயண நோக்கம். ஆனால் சமீபத்தில் பெய்த புயல் மழை காரணமாக இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்து எங்கும் தண்ணீர் காடாக காட்சியளிகிறது. இது தொடர்பான சில செய்திகளும் வெளிவந்தன. கொழும்பு நகரின் கதியே இதுவென்றால் மெனிக்பாம் காடுகளில் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுள்ள மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க முடியுமா?
மழைக்கு முன்னால் மக்களை முகாம்களை விட்டு அனுப்பச் சென்ற தமிழக எம்பிக்களின் அறிக்கையோ பரம ரகசியமான அறிக்கையாக இருக்கிறது. உண்மையில் அந்த நாடாளுமன்றக் குழுவினரின் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என்று எந்த தமிழ்க் குடிமகனுக்கும் கேட்கும் உரிமை இல்லை. காரணம் அவர்கள் சென்றது அவரவர் தனிப்பட்டச் செலவில். செலவுப் பிரச்சனை இருப்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆகவே அவர்கள் அறிக்கையை கருணாநிதியிடம் மட்டுமே சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைப்பார் என்று முதலில் சொன்னார்கள். எம்பிக்கள் குழு வந்தது; அறிக்கை சமர்பிக்கப்பட்டது ஆனால் இன்று வரை முகாம் மக்கள் குறித்து எவ்வித கோரிக்கையையும் கருணாநிதி மத்திய அரசிடம் வைக்கவில்லை. வழக்கமாக எழுதும் கடிதம் கூட எழுதவில்லை. ஆனால் இப்போது தமிழக அகதிகளின் முன்னேற்றம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. காரணம் அவரைப் பொறுத்தவரையில் இருபதைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு முகாம் மக்கள் விடுதலையாகிவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்.
அரசியல் கைதிகள்?
இங்கு பேசப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தமிழ் அரசியல் கைதிகள் குறித்தது. போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் புலிகளின் பிரதான தலைவர்களும் உண்டு. யோகரத்தினம் என்னும் யோகி, பாலகுமார், பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை , தமிழினி, தமிழ்ச்செல்வன், சூசையின் மனைவி, பிரபாகரனின் பெற்றோர் என எண்ணிடங்கா ஆண் பெண் தலைவர்கள் ரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இவர்களின் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள்
என்பது கூடத் தெரியவில்லை. ஒரு கைதியை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதுதான் சிவில் சமூக நடைமுறை. ஆனால் இன்று வரை கைது செய்யப்பட்ட இந்தத் தலைவர்களை நீதிமன்றத்திலும் நிறுத்தவில்லை. அவர்கள் பற்றிய தகவல்களும் இல்லை.
முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களும் சரி, ரகசிய தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களும் சரி, முகாம்களை விட்டு வெளியேறி கடுமையான கண்காணிப்பின் கீழ் வாழும் மக்களும் சரி என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்வி ஒன்று இருக்கிறது. ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு வழங்கப்படும் சிவில் உரிமைகள் கூட ஏன் இம்மக்களுக்கு மறுக்கப்படுகிறது? அவர்கள் என்ன கொலைகாரர்களா, இல்லை கொள்ளைக்காரர்களா என்றால், அவர்கள் தாங்கள் நம்பிய தேசிய உணவுகளுக்காகப் போராடினார்கள். அது சரியோ தவறோ? சரி, தவறு என்னும் ஒற்றை நோக்கிலிருந்து அணுகாமல் அவர்கள் மனிதர்கள்; நம்மைப் போலவும் இலங்கைத் தீவின் ஏனைய சிங்களர்களைப் போல வாழும் உரிமை பெற்றவர்கள் என்று அணுகினால் ஒட்டு மொத்த வன்னி மக்களுமே அரசியல் கைதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த அரசியல் கைதிகள் தமிழர்களாக இருப்பதாலேயே அவர்கள் சாகத்தான் வேண்டும் என்றால் அதை நாகரிகமுள்ள அரசுகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசுகள் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா?
இதற்கு முன்னால் புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்களர்களை இலங்கை அரசு விடுவிக்கவில்லையா? வடக்கில் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்திற்கு முன்னர் எழுபதுகளில் அதாவது 1971, 81, 89 என்று மூன்று பெரும் ஆயுதக் கிளர்ச்சியை இலங்கை அரசு சந்தித்தது. ஜே.வி.பி என்னும் இனவாத இடதுசாரிக் கட்சியின் பின்னால் அணி திரண்ட சிங்கள இளைஞர்கள் இப்புரட்சியை நடத்தினார்கள். இடது முன்னணியின் அந்தப் புரட்சியை முன்னின்று நடத்திய சமல் ஜயநித்தி, ரோகண விஜயவீர தலைமையிலான கிளர்ச்சியாளர்களை அரசியல் கைதிகளாகக் கருதி விடுதலை செய்தது இலங்கை அரசு. அன்றைக்கு இந்த சிங்கள இளைஞர்களின் விடுதலைக்காகப் போராடியவர் தன்னை ஒரு இடதுசாரியாகக் காட்டிக் கொண்ட ராஜபட்சே. இன்றைக்கு அவர் ஆளும் கட்சி, அவர்தான் அதிபரே.
சிங்களர்களின் கிளர்ச்சியை அரசியல் போராட்டமாகப் பார்த்த ராஜபட்சே அதே கிளர்ச்சியை வடக்கில் தமிழ் மக்கள் செய்தபோது அதை இனவாதமாகப் பார்த்தார். இன்று வெற்றி பெற்றுவிட்ட பெரும்பான்மை சிங்கள இனத்தின் நவீன துட்டகைமுனுவாக உருவாக்கப்பட்டிருக்கிறார் ராஜபட்சே. துட்டகைமுனுவால் சிங்களர்களையும் தமிழ் மக்களையும் எப்படி ஒன்றாகக் காண முடியும்? ஆகவே துட்டகைமுனுவின் ஆட்சியில் சிக்கிக் கொண்டு விலைபேசப்பட்ட அரசியல் அடிமைகளாக அம்மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நடந்து முடிந்துள்ள போர் என்பது கொடுங்கனவு போல தமிழ் மக்களை பீடித்துள்ளது. உலக அளவிலான ஆய்வாளர்கள் வன்னிப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் வன்னி முழுக்க இனப்படுகொலைக்கான சாட்சியங்கள் இறைந்து கிடக்கின்றன.
இனப்படுகொலையின் சாட்சியங்களாக இருக்கும் அம்மக்களுக்கு நம்பிக்கையளிக்கவோ சாட்சியங்களை ஒழுங்கு செய்து இனக் கொலை குற்றவாளிகளுக்கு எதிரான வாக்குமூலங்களைப் பதிவு செய்யவோ யாரும் இல்லை. மக்களிடம் சொல்வதற்கு எவளவோ கதைகள் இருக்கிறது. ஆனால் கேட்பதற்கு நம்மிடம்தான் செவிகள் இல்லை. மௌனம் என்பது பெரும் அச்சமாக அம்மக்கள் மீது படர்ந்து இப்போது அது உறைந்து விட்டது. இதற்கு இந்தியாதான் காரணம். ஆமாம் மத்திய மாநில அரசுகளே காரணம். ஐநாவோ மேற்குலகமோ அதற்குப் பிறகுதான். அண்டை வீட்டில் எரிந்த தீயை நாம் அணைக்கவில்லையே. மாறாக எண்ணெய் அல்லவா ஊற்றி விட்டோம்? எதிர்காலத்தில் சிங்களர்களோடு சேர்ந்து வாழும் சாத்தியங்களை இழந்துவிட்ட தமிழ் மக்கள் கோரி நிற்கும் ஈழ உணர்வுக்கு ஆதரவாக நாம் என்ன செய்யப் போகிறோம்?
- பொன்னிலா
நன்றி:எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய தோழருக்கு,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment