Monday, December 14, 2009

மேற்கு வங்கத்தில் மாபெரும் நக்சலைட் கலைவிழா

இந்திய மத்திய அரசுக்கும், மேற்கு வங்க மாநில அரசுக்கும் சவால் விடும் வண்ணம், 'ஜங்கல்மஹால்' என்ற இடத்தில் மாவோயிஸ்ட் இராணுவப்பிரிவின் (மக்கள் விடுதலைப் படை) ஆண்டுவிழா (டிசம்பர் 2) நடைபெற்றுள்ளது. Asian Age பத்திரிகையில் ( Dec. 6th 2009 ) இதுபற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்கு வங்காள மாநிலத்தின், மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளது ஜங்கல்மஹால். ஆண்டுவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆயுதமேந்திய மக்கள் விடுதலைப் படையினரின் பிரசன்னம் அந்தப் பகுதி முழுவதும் காணப்பட்டது. சுற்று வட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் விழாவிற்கு சமூகமளித்திருந்தனர். கிஷேன்ஜி, ராகேஷ் ஆகிய இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்கள்.

ஜன்கல்மஹாலிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் செங்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. ஒலிபெருக்கிகளில் புரட்சிக்கீதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. மக்களிடையே விழாவுக்கு அழைப்பு விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவும் பகிரங்கமாக, அரசுக்கு சவால் விடும் வகையில் நடைபெற்ற போதிலும், மாநிலப் போலிஸ் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. காவல்துறையினர் மாவோயிஸ்ட் ஆயுதபாணிகளை எதிர்கொள்ள துணிவின்றி பொலிஸ் நிலையத்திற்குள் பதுங்கியிருந்தனர். இதனால் சினமுற்ற உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிடம் இருந்து விளக்கத்தை கோரியுள்ளனர். மேற்கு வங்கப் பொலிஸ்காரர்கள் பலர் மாவோயிஸ்ட் அரசியலுக்கு தார்மீக ஆதரவு வழங்குவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு முன்னரும் பல தடவை, மாவோயிஸ்ட் கூட்டங்கள் குறித்து வரும் தகவல்கள் மீது, எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருப்பதை, நடைபெற்ற சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

CPI (M) மத்திய குழு உறுப்பினர் கிஷேன்ஜி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை பின்னர் துண்டுப்பிரசுரமாக கிராம மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் தற்போது அறுவடைக் காலமாகையினால், விவசாயிகளின் பாதுகாப்பை மக்கள் விடுதலைப் படை பொறுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்தார். கிஷேன்ஜி உரையிலிருந்து: "வயல்களில் நமது ஆயுதமேந்திய வீரர்கள் காவல் காப்பார்கள். ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் ஏழை ஆதிவாசிகளை பாதுகாக்க பயன்படுத்துவார்கள். அறுவடைக் காலத்தில் போரை முன்னெடுப்பதினால் விவசாயிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சுட்டிக்காட்டினோம். ஆனால் எமக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு அரசு மறுத்து விட்டது. அதனாலேயே இந்த ஏற்பாடு."
நன்றி:கலையகம்

No comments:

Post a Comment