அ.தி.மு.க-வின் பிரம்மாஸ்திரம்!
அரசியல் செய்திகள் இருந்தால் ஆபீஸ் பக்கம் வரவும் என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லியிருந்ததால், சீரியஸான முகத்துடன் வந்திருந்தார் ரகசிய தெனாலி.
சினிமா செய்திகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால், அரசியல் செய்திகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ என்ற ஆதங்கம்... அதனால்தான் அப்படி கடிந்து கொண்டோம் என்று விளக்கம் சொன்னதும் சமாதானம் ஆகிவிட்டார்.
இடைத்தேர்தல் செய்திகளில் இருந்தே ஆரம்பித்தார்.
‘ஏகமாக எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் இடைத்தேர்தல் அத்தனை சுறுசுறுப்பாக இல்லை. கடமைக்காக பலரும் வேலை செய்கிறார்கள். தி.மு.க. தரப்பில் முக்கிய தலைவர்கள் பலரும் அழகிரி அத்தனை ஆர்வமாக இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு தாங்களும் சைலண்ட் ஆகிவிட்டனராம். அழகிரிக்கும் அனிதாவுக்கும் அத்தனை பிணைப்பு ஏற்படவில்லை என்பதால் அவரும் கணக்குக்கு சில தினங்கள் தலைகாட்டியதோடு சரி என்று ஒதுங்கிக் கொண்டாராம்! இதனால், அனிதா தரப்பு கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறது. கம்பீரமான வித்தியாசம் கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று கலங்கிப் போயிருக்கிறார். என்று நிறுத்தியவரிடம்,
‘அப்போ வெற்றி உறுதி என்று முடிவு செய்துவிட்டாரா?' என்றோம்.
அதை அவர் உறுதி செய்யவில்லை. அ.தி.மு.க-வின் மந்தமான பிரசாரம் உறுதி செய்திருக்கிறது. தி.மு.க. தரப்பில் ஆரம்பத்திலேயே வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் பட்டுவாடா நடந்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க இன்னமும் முடிச்சை அவிழ்க்கவேயில்லை. அதிமுகவின் வேட்பாளரான அம்மன் நாராயணனின் சொந்த ஏரியாவான உடன்குடி பகுதியில் மட்டும் வோட்டுக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் விநியோகம் நடந்திருக்கிறதாம். ஆனால், திருநெல்வேலியில் பிடிபட்ட 41 லட்ச ரூபாயை வைத்து அனுதாப வோட்டுக்களைக் கவர்ந்துவிடலாம் என்று திட்டம் போடுகிறதாம் அ.தி.மு.க. அதனால்தான் நெல்லையில் அதிமுகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வசம் இருக்கும் ஹோட்டலில் வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று தெரிந்தும் அதிமுக எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது என்கிறார்கள்.
அது எப்படி வோட்டுக்களைக் கவரமுடியும்?
அதாவது, உங்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்த பணம்தான் அது. அதை அப்படியே போலீஸும் ஆளுங்கட்சியும் கொள்ளை அடித்துவிட்டது. அடித்த பணத்தில் கொஞ்சத்தை மட்டும்தான் கணக்கில் காட்டியிருக்கிறார்கள். உங்களுக்கு வரவேண்டிய பணத்தை தட்டிப் பறித்துக் கொண்டு போனவர்களுக்கா வோட்டு என்று கேட்கப் போகிறார்களாம். ஆனால், நேரடிப் பிரசாரம் முடிந்த நிமிடத்தில் இருந்து தனக்கே உரித்தான ஸ்பெஷல் பிரசாரத்தை அதிமுக தொடங்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த விஷயத்தில் வேட்பாளர் அம்மன் நாராயணன் எக்ஸ்பர்ட்டாம்! கடந்தமுறை அனிதாவை அவர் ஜெயிக்க வைத்ததே அந்த டெக்னிக்கால்தானாம்! அதை நினைத்து அனிதாவே கொஞ்சம் அரண்டு போய்த்தான் இருக்கிறாராம். அனிதாவை மிரட்டும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் வோட்டு கேட்டுச் செல்லும் கிராமங்களில் உங்களுக்குத்தானே... இரட்டை இலையில் கண்டிப்பா போட்டுடுறோம் என்று கிராம மக்கள் சொல்கிறார்களாம். இதை எப்படிச் சமாளிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறார் அனிதா!
நல்ல வேடிக்கையா இருக்கே! இது இல்லாமல் சில வோட்டு வங்கிகளை வளைக்கும் முயற்சி நடக்குமே... அப்படி ஏதாவது?
ஏன் இல்லாமல்... திருச்செந்தூர் கோவிலில் திரிசுதந்திரர்கள் என்று ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். கோவில் கட்டமைப்பில் உதவியவர்களின் வாரிசுகள் அவர்கள் என்று மரியாதையோடு நடத்தப்பட்டார்கள். அவர்களும் பக்தர்களுக்கு கோவிலை சுற்றிக் காட்டுகிறேன் என்று அழைத்துச் சென்று காசு வசூலிக்கும் கதை நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்த கோவில் அதிகாரி பாஸ்கரன் திரிசுதந்திரர்களை வெளியேற்றிவிட்டார். இவர்கள் கையில் நேரடியாக 3000 வாக்குகளும் மறைமுகமாக சில ஆயிரம் ஆதரவாளர்கள் வாக்குகளும் இருப்பதால் இவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தி.மு.க.
அப்பா... திகட்டத் திகட்ட திருச்செந்தூர் செய்திகளைக் கொடுத்து விட்டீரே... நன்றி! என்றோம்.
இப்போதாவது காதில் விழுந்த சில சினிமா செய்திகளைச் சொல்லலாமா? என்று பணிவாக அனுமதி கேட்டுவிட்டுத் தொடர்ந்தார்.
அதிகாரச் சண்டை சினிமா தயாரிப்பில் புகுந்துவிட்டது. அரசியலில் இருக்கும் மூத்த தலைமுறையினரின் இளவல்கள் சினிமா தயாரிப்பில் முட்டிக் கொண்டிருக்கிறார்களாம். மூத்த நடிகர் ஒருவர் இளவலுக்கு தேதி கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கப் போகும் நிலையில், அந்தத் தேதிகளைக் கேட்டு இன்னொரு இளவல் அந்த நடிகரிடமே கேட்டாராம். அந்த நடிகர் நோ சொல்லிவிட, தம்பிதான் இதற்குக் காரணம்... தயாரிப்பிலும் அவர்கள் சூரியன்தான் பிரகாசிக்க வேண்டுமா என்று கொந்தளிக்கிறாராம் அண்ணன் மகன்!
ஓஹோ என்று மட்டும் சொன்னோம்.
அடுத்த செய்தி இளைய தளபதி பற்றி..! சுறாவுக்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படத்தை இயக்கப் போவது ஜெயம் ராஜா. இன்னமும் வேட்டைக்காரனே ரிலீஸ் ஆகாத நிலையில் ஜெயம் ராஜா, தன் தம்பியை வைத்து தில்லாலங்கடியை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டாராம். இன்னமும் கதைகூடச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட நிலையில் என் பட வேலைகளைப் பார்க்காமல் தம்பி படத்துக்கு எப்படிப் போகலாம் என்று ராஜா மீது கடுப்பாகிவிட்டாராம் விஜய். இதைக் கேள்விப்பட்ட எடிட்டர் மோகன், இவர் மட்டும் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார்... ஆனால், இவர் ஓகே சொன்ன ஒரே காரணத்துக்காக என் மகன் எல்லா வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இவருக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று தனக்குத் தெரிந்த வட்டாரத்தில் குமுறுகிறாராம். இதற்கிடையில் லிங்குசாமி சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போனதால், ராஜாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு லிங்குவை ஓகே பண்ணிவிட்டாராம் விஜய்.
பிரிந்த செய்தியைச் சொன்னால் சேர்ந்த செய்தி சொல்வீர்களே..?
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment