தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.
மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!
இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.
சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.
“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.
தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.
“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.
பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.
நன்றி:வினவு
No comments:
Post a Comment