Thursday, December 31, 2009

பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!

ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில் நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?

ஈரோடு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியிருக்கிறது.

பதிவர் சந்திப்பிற்கு பதிவர் சுமஜ்லா சென்று வந்ததோடு “பர்தாவோடு சென்றேன், பர்தாவோடு இருந்தேன்” என்று யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன? ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.

ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?

இதைப் புரிந்து கொள்ளாத ஒரு அனாமதேயம் பின்னூட்டத்திலோ வேறு எதிலோ இதை பகடி செய்து ” நான் பேண்டு போட்டு பேண்டோடு அமர்ந்தேன், நான் சேலை கட்டி சேலையோடு அமர்ந்தேன்” என்று எழுதப்போக, அக்மார்க் இசுலாமிய பெண்ணான சுமஜ்லா அதை ஓரம்தள்ளாமல் பிரஸ்டீஜ் பிரச்சினையாக பாவித்துக்கொண்டு பர்தாவின் மகத்துவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டார். ஆரம்பித்தது பிரச்சினை.

அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?

அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது. உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான். இதனால் மிருகங்கள் ஒன்றும் பரிதாபப் படபோவதில்லை.

உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.

அடுத்து பர்தா என்னவோ இசுலாமியருக்கு மட்டும் சொந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவின் பல இந்து சாதிகளில் பர்தா என்பது இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். பொதுவில் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எல்லா மதங்களும் ( கிறித்தவத்தில் கன்யாஸ்தீரியின் அங்கி கூட ஒரு பர்தாதான்.) இப்படித்தான் சட்ட திட்டங்களை வைத்திருக்கின்றன.

பர்தாவின் அநீதியை ஒருவர் எதிர்க்க வேண்டுமென்றால் அவர் எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். சுமஜ்லா பர்தாவைப்பற்றி பதிவு எழுதியதும், கலகலப்ரியா எனும் இந்து பெண்பதிவருக்கு ஆத்திரம் வான்தட்ட அவர் ஒரு கவிதையை தாளித்தார். இவர் ரௌத்திரம் பழகும் பாரதியின் பயங்கர விசிறியாம். இவருக்கு எழுந்த கோபம் பெண்ணுரிமையின் பாற்பட்டதல்ல. பர்தா போட்ட பெண்களெல்லாம் நல்லவர்கள் மற்றவர்களெல்லாம் கெட்டவர்களா என்ற அணி அதாவது இந்து அணியிலிருந்து வரும் கோபமே அடிப்படை.

இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். மாற்றுமுகாம் பதிவுகளுக்கு கள்ள ஒட்டு போட்டு கைதட்டுகிறார்கள். ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.

“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?

வட இந்தியாவில் இன்று வரை சீரோடு நடந்து வரும் குழந்தை திருமணங்களினால் பெண்தானே பாதிக்கப்படுகிறாள்? கயர்லாஞ்சியில் உழைத்து முன்னேறி வாழ விரும்பிய பூட்மாங்கே குடும்பத்தை ஆதிக்க சாதி ஆண்கள் கற்பழித்து வாய்க்காலில் வீசினார்களே இதுவெல்லாம் கலகலப்பரியாவுக்கு ரௌத்திரத்தை எழுப்பாதா? நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?

பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?

அவ்வவளவு ஏன், தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?

சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம் ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பாப்பானின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பாப்பான் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறான். இதைக்கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்த கபோதிகள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்யவேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு அறிவியல் விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் ஆர்.வியின் ஞானகுரு டோண்டு ஐய்யங்காரிடம் கேட்டால் பதில் பெறலாம். ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்கும் கேவலமான காட்டுமிராண்டிகளின் நாடுதான் இந்தியா. இந்த காட்டுமிராண்டிகளின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பர்தா விவகாரத்தில் மதப்பற்றோடு குமுறி எழுகிறார்கள்.

சபரிமலையின் இந்த அயோக்கியத்தனத்தை மென்மையான வரிகளில் சந்தனமுல்லை தன் பதிவொன்றில் கேட்டிருந்தார். உடனே ஆம்பளை சாமிகள் அவருக்கு எச்சரிக்கை இடும் விதத்தில் பின்னூட்டமிடுகிறார்கள். அதில் ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான் என்று பச்சையாக மிரட்டியிருக்கிறார். இதுதான் பதிவுலகின் இந்துத்வ இலட்சணம்.

சந்தனமுல்லையின் நியாயத்துக்கு குரல் கொடுக்காத கோழைகள்தான் இப்போது சுமஜ்லாவின் பர்தா பற்றுக்காக பொங்கி எழுகிறார்கள்.

சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?

thanks:vinavu

No comments:

Post a Comment