Friday, December 25, 2009

வெண்மணிச் சரிதம்

அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவாத அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கைநீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி.

இரண்டாவது கொம்பொலிக்கு
நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம்
கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள்

கழனிக்குள் இறங்கியவுடனேயே
“ஓ” வெனும் ஓசையெழுப்பி
உழைக்கத் தொடங்கியதை
நிலவுடமையாளனின் உலை மனதில்
பதிய வேண்டும் உழைக்கும் மக்கள்.

நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில்
உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே
சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு.
வெறும் வயிற்றில் துடித்து விழும்
வியர்வையின் சூடு பட்டு
வயல் நண்டு துடித்தோடும்.

களைத்த விரல்களுக்கு
பழஞ்சோறு இதமாகும்.
ஓரிரு பருக்கைகளுக்கு
உதடுகள் தடுமாறும்
பட்டமிளகாயும், உப்பும்
பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும்
தொட்டுக்கை.

சூரியனிருக்கும் வரைச் செய்யும்
“கொத்து வேலை” எப்போதாவது,
அரிக்கேன் விளக்கொளியில்
கண்ணெரியும் வேலை எப்பொழுதும்.

நீளும் வேலையின் முடிவில்
நிலவு காய்த்து விடும்…
அல்லி மலர்ந்து
குளம் ஆவியிழந்துவிடும்..

வேலை முடிந்ததும் நேரே
குடிசைக்கு போகவியலாது
பண்ணையார் வீட்டில் பல
’வெட்டிவேலை’ கூப்பிடும்
வரப்பு காயாமல் வைத்தவன் பிள்ளை
தாய்ப்பாலுக்கு ஏங்கி
உதடுகள் காய்ந்து வெடித்திடும்.

படியாள் வீட்டு அடுப்புச் சாம்பலும்
பண்ணை வயலுக்கே சொந்தம்!
கூலி விவசாயி குடிசையிற் படர்ந்த சுரைக்காயும்
பண்ணையார் அடுப்படிக்கே சொந்தம்!
இதைவிடக் கொடுமை,
பண்ணையடிமைகள் முதலிரவும்
பண்ணையார் படுக்கைக்கே சொந்தம்!

இமைகளை நிமிர்த்தி.. எதிர்த்துப் பார்த்தால்
”சவுக்கடியும்”, ”சாணிப்பாலும்” தண்டனை
இதுதான் அன்றைய நிலப்பிரபுத்துவ தஞ்சை.

———-

தஞ்சைத் தரணியெங்கும் தனிப்பெரும் கோயில்கள்…
திருத்தலப் பெருமை பேசும் தடித்தடி சாமிகள்…
எல்லையில்லா சக்தி கொண்டதாய் சொல்லப்படும்,
எந்தவொரு தெய்வமும்
பண்ணையாதிக்க பாதகத்திற்கெதிராய்
புல் ஒன்றையும் புடுங்கக் காணோம்!

விவசாயத் தொழிலாளர்
விளைவித்த உபரியில்
கோயிலும், கூத்தியாளுமாய்
சாமியும் கும்மாளமடித்தது
நிலப்பண்ணைகளோடு.

மண்டையோட்டில் பசியாறும் மகேசனுக்கே
இரவு, பகல் பாராது படியளந்தனர்
அண்டைவெட்டும் விவசாயத் தொழிலாளர்.
இந்த லட்சணத்தில்,
உலகுக்கே படியளக்கிறானாம் ஈசன்!

உண்மையில்.. அவனது உமையம்மையின்
உண்டை கட்டிக்கும்
உழைத்துக் கொட்டுபவன் கூலி விவசாயி.

கட்டிய மனைவிக்கு
சோறுபோட வக்கில்லாதவனுக்கு
கட்டிய கோயில்கள் எத்தனை… எத்தனை…

பொறிதட்டிப் போய் உழைப்பாளர் பிடுங்கிவிட்டால்
எனும் பயத்தில் கட்டிய கதைகள் எத்தனை… எத்தனை…

சிவன் சொத்து குல நாசமாம்- பல
குலங்களை அழித்தே சிவனுக்கு சொத்து!
எனும் உண்மையை விவசாய நிலம் பேசும்!

எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன்
பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று
ஏழை விவசாயிகள் மேல்
ஏவப்பட்ட அல்சேசன்.

கடவுளின் பெயரால்,
இனாம்தார், பிரம்மதேயம் எனும் பெயரில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து
”கலம் கலமாய்”
கூலி விவசாயி குலங்களை அறுத்து
பண்ணையடிமைகள் உழைப்பை
வெண்ணையாய் நக்கின
பார்ப்பன நகங்களும், சூத்திர மடங்களும்

வெள்ளம், புயலால்
விளைச்சல் குறைந்தால்,
கூலிவிவசாயி அளக்கும்
வாரம், குத்தகை அளவு குறைந்தால்
கூலியின்றி அவர் வயிற்றிலடித்த மடங்கள்.
கோபுரத்தினின்று அவர் விழுந்து செத்த
சைவக் கொலைகள்!

இசைவான நெல்லளக்காத குற்றத்திற்காக
கசையடிகள் கொடுத்திட்ட காட்சிகளை
காட்டிநிற்கும் சோழமண்டல சிற்பங்கள்!

தஞ்சை வடபகுதி;
தருமபுரம், திருப்பனந்தாள்,
அகோபில சங்கரமடம்,

தஞ்சை தென்பகுதி;
மதுக்கூர், பாப்பன்காடு
சிக்கவலம் ஜமீன்தார்கள்

தஞ்சை நடுப்பகுதி;
வடபாதி மங்கலம், நெடும்பலம்
கோட்டூர், வலிவலம், குன்னியூர்
பூண்டி, உக்கடை, கபிஸ்தலம்

எங்கும் பண்ணையாதிக்கத்தின் கொடும் பலம்.

கபிஸ்தலமும் குன்னியூரும்
காங்கிரசுப் பண்ணைகள்.

வடபாதியும், நெடும்பலமும்
நீதிக்கட்சி பண்ணைகள்.

ஏழை கூலிவிவசாயிகள் சுயமரியாதைக்காக
எந்தத் ’திராவிடமும்’ பேரியக்கம் கண்டாரில்லை,
தாழ்த்தப்பட்ட விவசாய வர்க்கத்திற்காக
’தலித் தம்பிரான்களும்’ ஓரியக்கம் விண்டதில்லை.
எதிர்த்துக் கேட்பாரில்லை…

’பார்ப்பன, சூத்திரப்’ பண்ணையம்
என ஏங்கிக் கிடந்த கழனியெங்கும்
செங்கொடி இயக்கம் துளிர்த்தது!
சேற்றினில் நடுங்கிய கைகளில் ஒரு..
சிவப்புத் திமிர் முளைத்தது,

”அடித்தால் திருப்பி அடி!
ஏண்டி என்றால்.. ஏண்டா எனக் கேள்!
சாதி சொன்னால் மோதி நட!
உழுபவர்க்கே நிலம் சொந்தம்
உழைப்பவர்க்கே அதிகாரம்!”
எனக் கம்யூனிச இயக்கம்
கற்றுக் கொடுத்தது, களத்தில் விளைந்தது.

சுகந்தை என்றும், அமிஞ்சி என்றும்
பள்ளு என்றும், பறை என்றும்
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை
அதே ஊரில் தோழர் என்று நிமிர வைத்தது.

அகந்தை கொண்ட ஆதிக்க சாதியுணர்வை
அடியறுத்து
விவசாய சங்கமாய் ஒன்றிணைத்தது.

தென்பரை சேர்ந்தது
விதைநெல்லாய் கம்யூனிசம்
தஞ்சைக் கழனியெங்கும்
நடவு செய்தார் சீனிவாசராவ்.

விடுமோ பண்ணைகள்,
அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அவரோ.. தலைமறைவான போதும்
ஊருக்கு பல தலைகளை உருவாக்கிக் கொண்டே போனார்!

நெற்பயிற் காத்தது
அவர் ரகசிய பயணம்
வரப்பின் நெருஞ்சியும் இளகிடும்
அவர் ராத்திரி கால்தடம்
நீளும் வர்க்கப் போராட்டத்திற்கு
நிலவும் ஒத்துழைத்து
அவரை ஆற்றுப்படுத்திய
அமாவாசைக் கூட்டங்கள்.

களப்பால் குப்பு, தனுஷ்கோடி,
மணலூர் மணியம்மை.. இன்னும்
பெயர்கள் பலவாய் காய்த்தன செந்நெல்.
சங்கையே நெறித்த போதும்
விவசாய சங்கமே உயிரென
காவிரிப்படுகை கனன்று முழங்கின.

வேறுவழியின்றி…
கூலியுயர்வு, கொத்தடிமைத் தடை,
வாடா, போடி, சவுக்கடி, சாணிப்பால் நிறுத்தம்
என பண்ணைகள் கொஞ்சம் பதுங்கின.

சோழநாடு சோறுடைத்து
என்பதென்ன சிறப்பு!
ஆங்கே… கம்யூனிசம்
நிலப்பண்ணைகள் அதிகாரமுடைத்தது
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்ப்பு!

நேற்று வரை…
தன் நிழல் திரும்பிப் பார்க்கவே
தயங்கி நடந்த சேரிகள்…
பண்ணையை நிமிர்ந்து கேள்வி கேட்பதும்
பணிதல் மறந்து
சுயமரியாதையாய் வாழ்ந்து பார்ப்பதும்…
கூலி உயர்வை விட,
கொதிப்பேறியது ஆண்டைகளுக்கு.

தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காய் மட்டுமல்ல,
அரைலிட்டர் கூலி
அதிகம் கேட்டாரென்பதற்காய் அல்ல
தம்மை எதிர்க்கும் அரசியல் சக்தியாய் ஆனது கண்டு,
சாதியால் தகர்க்க முடியாத
செங்கொடி அமைப்பாய்..
உழைக்கும் மக்கள் எழுந்தது கண்டு
கலக்கமடைந்தனர் நிலப்பிரபுக்கள்.

வேரோடிய கம்யூனிசத்தின்
போராட்ட அழகோடு
பூத்துக் கிடந்தது வெண்மணி
தீராத வன்மத்துடன்
அதைத் தீக்கிரையாக்க
தருணம் பார்த்தன பண்ணைகள்.
தோதாக அதன் கால்களுக்கு
செருப்பாய் கிடந்தன
தேசிய, திராவிடக் கட்சிகள்..

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ!
ஆம்பல் பூத்த எங்கள் கீழவெண்மணி
சாம்பல் பூத்தது.
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
எனும் பண்ணைமிருகம் ஊரில் நுழைந்தது.

முதலில்.. அவன் கண்ணை உறுத்திய
செங்கொடியை வெட்டிச் சாய்த்தான்,
அவன் வர்க்கமடக்கிய
விவசாய சங்கத்தை திட்டித் தீர்த்தான்

”ஊரையே கொளுத்துங்கடா.. வெட்டிச்சாயுங்கடா”…
தீ நாக்கை திசைகளில் சுழட்டினான்.

அவன் வெறிப்பார்வைதனைப் பார்த்து
தெருநாய்கள் குரைப்பற்று ஓடியது.
கூடுகள் அடைந்த பறவைகளோ
குஞ்சுகள் கதற, திசை தேடியது
வேலியோரத்து திசம்பூர் பூ
வெந்து பிணமாய் நாறியது.
அய்யய்யோ… ஏனையில் கிடந்த பிள்ளையின் குரல்
எரிந்து, கருகி அடங்கியது.

தப்பியோட இராமய்யன் குடிசையில்
தஞ்சமடைந்த நாற்பத்தி நான்கு பேரை
வெளியே தாழிட்டு குடிசையோடு கொளுத்தினான்
கோபால கிருஷ்ண நாயுடு.

நெருப்புக்கும் இரக்கம் வந்து
நின்று விடுமோ எனப் பயந்து
மேலும், மேலும் எண்ணையை ஊற்றி
எரிதழல் மூட்டினான்.

எரியும் நெருப்பையும் தாண்டித்
தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என
ஒரு தாய் வெளியில் தூக்கி எறிந்தாள் குழந்தையை.
இதயமிழந்த இரிஞ்சூர் கும்பலோ
தப்பியக் குழந்தையை துண்டாய் வெட்டி
எரியும் குடிசையில் எறிந்து மகிழ்ந்தது.

வர்க்கப் போருக்கு
இனி வாரிசே இல்லையென
திமிரில் சிரித்தான் இரிஞ்சூர் நாயுடு

திரும்பச் சிரித்தது உயர்நீதி!
காரோட்டும் கவுரமான கைகள்
இப்படியொரு காரியத்தை செய்யாதென
விடுதலை செய்து
கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு
ஆரத்தி எடுத்தது நீதிமன்றம்.

கூலி உயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டுச் செத்தான்… என
வசனம் பேசிய தி.மு.க. அரசும்
வழக்கை அத்தோடு புதைத்தான்.
இந்த அநியாயத்தை

எந்தத் தெய்வமும் கேட்கவில்லை….
கடைசியில்..
இருஞ்சூர் நாயுடு விதிவலியை
நக்சல்பாரியே முடித்தான்.

நெருப்பினில் வேகாத
வெண்மணிக் கனவை…
புதைத்திட வியலாத வர்க்கத்தீயை
வளர்ப்பவர்க்கு மட்டுமே
வெண்மணி சொந்தம்

வெண்மணிச் சமர்க்களத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு
ஏன் அமர்க்களம்?

போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு
வெண்மணி பக்கம் வீரவணக்கம்.
போராடும் விவசாயிகளுக்கு
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு.

மிட்டா,மிராசை எதிர்த்தவர்களுக்கு
வெண்மணியில் மலர் வளையம்
டாட்டா கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு
மேற்கு வங்கத்தில் சமாதி.

போயசு பண்ணைக்கு
புளுக்கை வேலை செய்யும் இடதும்,வலதும்
இருஞ்சூர் பண்ணையை எதிர்த்துப் போராடிய
தியாகிகள் பெருமையைத் தீண்டுவதா?
போலிக் கம்யூனிஸ்டுகளின் பாழும் முகத்தில்
காறித் துப்புது செங்கொடி!

இறந்தவர் சாதியை
சொந்தம் கொண்டாடும் பல இயக்கங்கள்
ஆனால் …இறந்தவர் லட்சியம்
சொந்தம் கொண்டாட நக்சல்பாரிகள்!

வெண்மணித் தீ அடங்கவில்லை இன்னும்
ஊரையே கொளுத்துகிறது உலகமயம்…
ஊரைவிட்டுத் துரத்துகிறது விவசாயம்..
தப்பித்து தஞ்சமடையும் குடிசைகளை
எரிக்கிறது நகரமயம்…
கைத்தொழில் ஒடித்து, சிறுகடை பிடுங்கி
கொத்தடிமையாக்கும் தனியார் மயம்…
நகரங்கள் தேடி.. நாடுகள் ஓடி
இனியும் தப்பிப்பிழைக்க வழியின்றி
விவசாயிகளை எரிக்கிறது தாராளமயம்..

இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
இன்னும் சாகவில்லை..
இருங்காட்டுக் கோட்டையில்
ஹூண்டாயாய் சிரிக்கிறான்..

ஆயிரம் வேலிகள் வளைத்து
டாட்டாவாய் நெறிக்கிறான்..

இனாம்தார் அம்பானியாய்
எல்லா பக்கமும் அறுக்கிறான்..

கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..

குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..

இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?

கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்

வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகளே
பதில் சொல்லுங்கள்!

- துரை.சண்முகம்

நன்றி:வினவு

No comments:

Post a Comment