மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர்
மண்டபம் : இலங்கை சிறையிலிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு 27 நாட்களுக்கு பின் நேற்று தமிழகம் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் வீரமணி(21) ரத்தினம்(21) சுகன்(21) பிரகாஷ்(23) சிவராஜ்(23) திவேல்(24) உட்பட 18 பேர் கடந்த 2ம் தேதி ஐந்து படகுகளில் கோடியக்கரையில் தமிழக எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக படகுகளை நோக்கி சுட்டு, துப்பாக்கிமுனையில் மீனவர்களை கடத்திச் சென்று இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கபட்ட பின் தமிழக மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் உள்ள மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கேட்டுக் கொண்டதின் பேரில் மீனவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
நவ., 26ல் இலங்கையிலுள்ள மல்லாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களை, எவ்வித கட்டுபாடும் இன்றி கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவற்படையிடம் தமிழக மீனவர்கள் 18 பேரை ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவற்படையினர் 18 மீனவர்களையும் நேற்று காலை 8 மணிக்கு மண்டபம் அழைத்து வந்தனர். பின் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர் ரவி (38) கூறுகையில், ""நவ., 2ல் நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் படகுகளை நோக்கி சுட்டு எங்கள் கைகளை மேலே உயர்த்தச் சொல்லி மூன்று மணி நேரம் சித்திரவதை செய்தனர். இந்திய தூதரகத்திலிருந்து தகவல் வந்தால், எங்களை விடுதலை செய்வதாக கோர்ட் தெரிவித்தது. ஆனால், இந்திய தூதரகத்திலிருந்து எங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாங்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டோம்,'' என்றார்.
http://www.dinamalar.com/
நன்றி:ஓடும்நதி
No comments:
Post a Comment