Wednesday, December 2, 2009

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களம் இறக்க முயற்சி: ஈழத் தமிழ் தலைவர்கள் ஆலோசனை



கொழும்பு, நவ. 28-

இலங்கையில் ஜனவரி மாதம் 26-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சுதந்திர கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவுக்கும் இடையில் கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே, பொன்சேகா இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் ஓட்டுக்களை பெற இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் பிளாட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மகிந்த ராஜபக்சேயை ஆதரிக்கப் போவதாக நேற்று அறிவித்தது. இதற்கு பதிலடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் முயற்சிகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை களம் இறக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். அவர்கள் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

தமிழர் தரப்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து தமிழர் வேட்பாளர் குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூத்த தலைவர்கள் இது தொடர்பாக வேறு சில தமிழ்த்தரப்புகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒத்துப்போனால் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழர்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஓட்டுக்கள் சிதறும் அது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. இதற்கிடையே ராஜபக்சே, பொன்சேகா இருவருமே தாங்கள் எளிதான வெற்றியை பெறுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதால் கூடுதலாக 4 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக பொன்சேகா கூறுகிறார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஓபாமாவுக்கு பிரசார யுக்திகளை வடிவமைத்து கொடுத்தவர்களின் உதவியை ராஜபக்சே நாடி உள்ளார்.

ஆனால் ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் ஒருவித சோகம் நிலவிக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் தேர்தல் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.

http://www.maalaimalar.com/2009/11/28151950/CNI02802801109.html
நன்றி:ஓடும்நதி

No comments:

Post a Comment