சென்னை, நவ. 22-
விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் நவம்பர் 27-ந்தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இலங்கையில் போர் மேகம் சூழ்ந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.
இந்த உரையின்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இதனால் இலங்கை மட்டு மல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த உரையை கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் பொழிந்த விஷ குண்டு மழையில் லட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர்.
இதில் பிரபாகரன், மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி வீடியோ படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா இலங்கையிடம் பிரபாகரன் இறப்பு சான்றிதழை கேட்டு வருகிறது. ஆனால் இதுவரை இலங்கை அந்த சான்றிதழை தராமல் இழுத்தடித்து வருகிறது.
இலங்கை அரசு பிரபா கரன் இறந்து விட்டதாக கூறுவதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவே கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைச் செய லகம் 2 வாரத்திற்கு முன்பு ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நவம்பர் 27-நதேதி வழக்கம்போல் மாவீரர் தின கொள்கை விளக்க உரை வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மாவீரர் தின உரையை நிகழ்த்தப்போகும் தலைவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கை அரசும் விடுதலைப்புலிகளின் மாவீரர் தின உரையில் இடம் பெறப்போகும் விஷயங்கள் என்ன, என்பதை எதிர் நோக்கி காத்திருக்கிறது.
மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையே விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சார்பில் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடக்கிறது பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடத்தப்படுகிறது.
இவ்விழாவின் போது விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ் ஈழம் பற்றிய தமிழர் நமக்கு, காலம் தந்த தலைவர், புயலுக்கு பின் மலரும் நம் தேசம், தமிழ்நாதத்தில் தமிழீழ கானங்கள் ஆகிய 4 இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகிறது.
http://www.maalaimalar.com/
thanks:otumnadhi
No comments:
Post a Comment