Wednesday, November 18, 2009

பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம் – விகடன்




தமிழகத்திலிருந்து வெளிவரும் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த “பொன்சேகா அதிரடி அரசியல் வாக்குமூலம்” கட்டுரை மீனகம் வாசகர்களுக்காக…

இலங்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து துல்லியமாக அளித்து வரும் ஜூ.வி., ‘அதிபருக்கும் தளபதிக்குமான வெ(ற்)றிக் கூட்டணியில் விரிசல் விழுகிறது என்பதையும் முதன்முதலில் மிகவிரிவாகச் சொன்னது! கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற அலங்காரப் பதவியைக் கொடுத்து தன்னை அவமானப்படுத்தும் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தன் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் சரத் ஃபொன்சேகா குதிக்கப் போகிறார் என்றும் அடித்துச் சொன்னது ஜூ.வி.! அதிபர் மற்றும் தளபதியின் மனைவியர் தங்களுக்குள் இருந்த நட்பைப் பயன்படுத்தி கடைசியாக சில முயற்சிகள் செய்ய… அதுவும் பலிக்காமல் போய், ஃபொன்சேகா தன் பதவியைத் துறந்தேவிட்டார்! அதிரடியாக அதிபருக்கு சவால்களும் விடத் தொடங்கிவிட்டார்!

”அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, இல்வலனுக்கு நேர்ந்தது போல… புலிகள் இயக்கத்தைக் கூட்டாகக் கரைத்து விழுங்கப் பார்த்த இந்த இருவருக்குமே இப்போது பேராபத்து!” என்று வர்ணிக்கிறார் இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்!

அடுத்தடுத்து இலங்கையில் அரங்கேறப் போகும் அதிரடிகள் குறித்து அவரிடமும், இன்னும் சில இலங்கைப் பிரதானிகளிடமும் நாம் விசாரித்தோம்.

புறப்பட்ட ஃபொன்சேகா!

”ஃபொன்சேகாவின் எண்ணத்தில் அரசியல் குறித்த எள்ளளவு ஆசையும் எழாத

நேரத்திலேயே, ‘அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது!’ என தேசியபௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தை சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் மிரட்டினார். உடுவே தம்மாலோக தேரர், அதிபரின் ஆலோசகர் தெடிகமுவ நாயக்க தேரர், சாஸ்திரிபதி மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சிங்ஹலயே மகா சம்மத பூமி பத்ர கட்சி தலைவர் ஹரிசந்திர விஜேதுங்க, கலாநிதி குணதாச அமரசேகர, ஒல்கட் குணசேகர போன்றோர்கள்தான் இந்த தேசிய பௌத்த அமைப்புகளின் ஒன்றியத்தைத் தொடங்கி ஃபொன்சேகாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

அதோடு, 10,000 பிக்குகள் கலந்துகொள்ளும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் மிரட்டினர். இன்னொரு பக்கம் அனுர பிரியதர்சன யாப்பா, மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்ளஸ் அழகம்பெரும போன்ற அமைச்சர்களும் ஃபொன்சேகாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். இப்படி அடுத்தடுத்த தாக்குதல்களால் அவரை அடக்கி விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் எதிர்மறையாகப் போய்விட்டது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவரை அதிபர் தரப்பே வம்பிழுத்ததுதான் முரட்டுத் தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டது!” என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

கோதாவுக்கு காரணம் கோத்தபய!

”இலங்கையில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் மூலகாரணியே கோத்தபயதான்! விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்ததுமே முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் ஆயுதங்களும், தங்கமும் மீட்கப்பட்டன. இந்த ஆயுதப்புதையல் சத்தமின்றி பாகிஸ்தான் ராணுவத்துக்கு விலை பேசி விற்கப்பட்டதாக ஃபொன்சேகா தரப்பு நினைக்கிறது. இதுபற்றிய முழு விவரங்களும் கோத்தபயவுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறது. ராணுவ வீரர்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஆயுதக்குவியல் தனிப்பட்ட ஒருவரின் பாக்கெட்டுக்கு போவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட தங்கத்தில் கிட்டத்தட்ட 4,000 கிலோ தங்கமும் எந்தக் கணக்கும் இல்லாமல் காணாமல் போனது. இதையெல்லாம் ஃபொன்சேகா தட்டிக் கேட்கப் போய்த்தான் கோத்தபயவுக்கும் அவருக்குமான ஆரம்ப மோதல் வெடித்தது. உடனே பாதுகாப்பு செயலர் பதவியை பயன்படுத்தி கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரலை (ஃபொன்சேகாவை) நியமித்தார் கோத்தபய.

இதற்கிடையில், இலங்கை யின் அரச பத்திரிகையான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் ஹோண்டுராஸ் நாட்டில் நடந்த ராணுவப் புரட்சியைப் பற்றியும், அந்நாட்டு ராணுவத் தளபதியைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்த நாட்டுடன் இலங்கைக்கு எந்த உறவும் இல்லாத நிலையில், ஜெனரலை குறிவைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையைப் பார்த்ததும் பத்திரிகைக்குப் பொறுப்பாளரான கோத்தபயவிடம் கோபப்பட்டிருக்கிறார் ஜெனரல். அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து போனை துண்டித்திருக்கிறார் ஜெனரல். இதன் பிறகுதான் ராணுவப் பொறுப்பைத் துறக்கிற அளவுக்கு ஜெனரல் ஃபொன்சேகா துணிந்தார்!” என்கிறார்கள் ராணுவ வட்டாரத்தில்.


எடுபடாத சமாதானம்!

”ராஜபக்ஷேயின் செயலாளரான லலித் வீரதுங்க ஆறு முறை அழைப்பு விடுத்தும் ஃபொன்சேகா சென்று சந்திக்கவில்லை. இதனால் ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தி, ஃபொன்சேகாவின் மனைவியான அனோமாவை கொழும்பில் உள்ள ஒரு புத்த விகாரையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கொஞ்சம் சமாதானமான ஃபொன்சேகா, கடந்த 15-ம் தேதி ராஜபக்ஷேயை சந்தித்திருக்கிறார். 45 நிமிடங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். கோத்தபயவை மன்னிப்புக் கேட்கச் சொல்வதாகவும் கவலையோடு பேசியிருக்கிறார் ராஜபக்ஷே. பாதுகாப்பு அமைச்சர் அல்லது பிரதமர் பதவி வரை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சமாதானம் பேசியிருக்கிறார். ஆனால், ஃபொன்சேகா ‘போரின் முழு வெற்றிக்கு தன்னைக் காரணமாக அறிவிக்க வேண்டும், கோத்தபயவின் பாதுகாப்பு செயலர் பதவியை ஒழித்துவிட்டு, அந்த அதிகாரங்களை கூட்டுப்படை தலைமை தளபதிக்கு வழங்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பாகிப் போன ராஜபக்ஷே, ‘நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி விட்டேன்’ எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டார்…” என்கிறார்கள் அதிபர் மாளிகை வட்டாரத்தினர்.


ராஜினாமாவும், 17 காரணங்களும்!

ராஜபக்ஷேயின் கோபம் எத்தகைய கொடூரத்துக்கும் நீளும் என நினைத்த ஃபொன்சேகா, 17 காரணங்களைப் பட்டியலிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பிவிட்டார். தனக்குப் பிறகு ராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை தவிர்த்துவிட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த ஜெகத் ஜெயசூர்யாவை நியமித்ததையும் கண்டித்திருக்கிறார். கூடவே, ‘புலிகளை ஒழித்துக் கட்டிய ராணுவம் சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து, கடந்த அக்.15-ம் தேதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும், ராணுவத்தை அனுப்பி உதவுமாறும் அதிபர் கேட்டுக் கொண்டார்’ என்றும் ஃபொன்சேகா ஒரு குண்டு போட்டிருக்கிறார். இது, ஃபொன்சேகா நினைத்தபடியே சிங்கள மக்களையும் சிங்கள ராணுவத்தின் விசுவாச ஊழியர்களையும் ராஜபக்ஷேவுக்கு எதிராகக் கொதிக்க வைத்துவிட்டதாம் (இப்படியெல்லாம் இந்திய ராணுவத்திடம் எந்த உதவியும் கேட்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் சசி தரூர் உறுதியாக மறுத்திருப்பது தனிக் கதை!).

ஃபொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தில், ‘போராடிப் பெற்ற வெற்றியை சரியான விதத்தில் பயன்படுத்த அதிபர் தவறி விட்டார். தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு வழி செய்யாமல், அவர்களை அடைத்து வைத்திருப்பது, பல போராளிகளை உருவாக்கிவிடும் அபாயமிருக்கிறது’ என தமிழ் மக்களுக்கும் ஆதரவாக பரிந்து பேசியிருப்பதுகூட, அவருடைய எதிர்கால தேர்தல் திட்டத்தின் ஓர் அங்கம்தான்.

இதுபற்றிப் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், ”அதிபருக்கு ரகசியமாக அனுப்பிய கடிதத்தை மீடியாக்களுக்கும் பரப்பிவிட்டு, எடுத்த எடுப்பிலேயே கைதேர்ந்த அரசியல்வாதியாக ராஜபக்ஷேவுக்கு செக் வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய தந்திரம் சிங்கள மக்களை உசுப்பி வசியப்படுத்துமே தவிர, கூர்மையான தமிழ் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது!” என்கிறார்கள்.


களனி விகாரையில் களேபரம்!

ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு அக்மார்க் அரசியல்வாதியாக பளீர் வெள்ளை உடையில் களனி ரஜமகா விகாரைக்கு வழிபாட்டுக்குச் சென்றார் ஃபொன்சேகா. விகாரைக்குள் சென்று அங்குள்ள தேரரிடம் ஆசி பெற்றவர், தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும், அடுத்து வரும் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கத் திட்டமிட்டிருப்பதையும் அவரிடம் விளக்கியிருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி கொடியசைக்கக்கூடிய அந்த தேரர்களும் அவருக்கு ஆசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. வழிபாடு முடிந்து ஃபொன்சேகா வெளியில் வந்ததுமே அதிபருக்கு நெருக்கமான எம்.பி-யான மேர்வின் சில்வா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்திருக்கின்றனர். தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அங்கிருந்து நகர முடியாதபடி கெரோ செய்திருக்கிறார்கள். இதெல்லாம், எதிர்கால ரசாபாசத்துக்கான துளியூண்டு தொடக்கம்தான்!

ஃபொன்சேகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்பில் அங்கம் வகித்த அவருடைய உறவினர்களும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஒன்று… வியூகம் ரெண்டு!

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ராணுவப் பதவியை ஃபொன்சேகா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரிடம் தேர்தல் தொடர்பாக இரண்டு வியூகங்களை முன் வைத்திருக்கின்றன இலங்கை எதிர்க்கட்சிகள். இலங்கையை ஆளும் எண்ணத்தைவிட ராஜபக்ஷே சகோதரர்களை பழிவாங்கும் எண்ணம்தான் ஃபொன்சேகாவிடம் அதிகமிருக்கிறதாம். அதனால் ஐ.தே. முன்னணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதே நேரத்தில் ராஜபக்ஷே பெரிதாக நம்பியிருக்கும் சிங்கள வாக்குகளை உடைக்கும் எண்ணத்தில் ஜே.வி.பி-யின் வேட்பாளராக ஃபொன்சேகா களமிறக்கப்படுவாராம். இதனால் சிங்கள வாக்குகள் மூன்றாகச் சிதறி உடையும்.

அதோடு, ராஜபக்ஷேவுக்கு கடந்த தேர்தலில் போன வாக்குகளில் பெரும்பகுதியை இம்முறை ஃபொன்சேகாவே பிரித்துவிடுவார். இந்த நிலையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மை வாக்குகளை வாங்கி ரணில் எளிதில் வென்று விடுவார் என கணக்கு போடுகின்றனவாம் எதிர்க்கட்சிகள். ஒருவேளை பொது வேட்பாளராக ஃபொன்சேகாவே களமிறங்க வேண்டிய நிலை உருவானால், தமிழ் கட்சிகள் எந்தளவுக்கு அவரை ஆதரிக்க இயலும் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.


இந்தியாவா? அமெரிக்காவா?

இலங்கையைவிட இந்தியாவும், அமெரிக்காவும்தான் சிங்கள அரசாங்க சிக்கலை உற்று கவனித்து வருகின்றன. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா ஃபொன்சேகாவை அதிபராக்கி, அதன் மூலம் தெற்காசியாவிலும் தங்களது காலை வலுவாக ஊன்ற நினைக்கிறது. இந்தியாவோ, பாகிஸ்தானுடன் நெருக்கமாயிருக்கும் ஃபொன்சேகாவை அதிபராக்க விடாமல் தடுக்க நினைக்கிறது. அதற்கேற்ப ராஜவியூகங்களை வகுப்பதோடு, முதல்கட்டமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் இலங்கைக்கு அனுப்பி நிலவரம் பார்த்து வரச் செய்திருக்கிறது! இதற்கும் முன்னதாக, இலங்கையில் இந்த அரசியல் குழப்பங்களுக்கு ஃபொன்சேகா அடிபோட ஆரம்பித்த சமயத்திலேயே கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலை அவசர அவசரமாக அழைத்தது இந்தியாஅவரிடம், சில அந்தரங்கமான ஆலோசனைகளையும் நடத்தியது.

”இலங்கை சென்ற இந்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ராஜபக்ஷேயிடம் பேசியதோடு, ஃபொன்சேகாவையும் சந்திக்க முயன்றார். ஆனால், அதனை ஃபொன்சேகா தவிர்த்துவிட்டார்!” என்று செய்தி சொல்லும் சிலர்… பிரணாப் வந்து போன சூட்டோடு ‘இலங்கையில் முன்கூட்டி தேர்தல் நடக்காது’ என்று ராஜபக்ஷே சொல்லத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்!

மொத்தத்தில் இலங்கை விவகாரத்தில் வெல்லப்போவது இந்திய ராஜதந்திரமா, அமெரிக்க ராஜதந்திரமா என்பது போகப் போகத்தான் தெரியும்.


உயிருக்கு உத்தரவாதம் இல்லை!

ராணுவப் பதவியை ராஜினாமா செய்யும்போதே, தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, 800 படையினரும் 50 வாகனங்களுமாக இருந்த அவருடைய பாதுகாப்பு… 35 வீரர்கள், ரெண்டு ஜீப் என சுருக்கப்பட்டுவிட்டது. அதோடு, அமெரிக்காவில் உள்ள ஃபொன்சேகாவின் மகளுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் விலக்கப்பட இருக்கிறதாம். இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, அவர் அமெரிக்காவில் தங்கியிருக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால், அதற்கிடையில், அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஃபைல்கள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லி, அவரை விசாரணைக்கு அழைக்க எத்தனித்திருக்கிறதாம் சிங்கள அரசு. உண்மையிலேயே சர்வதேச அளவில் கோத்தபயவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக,நிஜமாகவே ஃபொன்சேகா சில ஆவணங்களைக் கைப்பற்றி வைத்திருப் பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது இலங்கையில்.

நன்றி – ஜீனியர் விகடன்

No comments:

Post a Comment