Wednesday, November 18, 2009

”பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் ஃபொன்சேகா



sarathகார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார். போரின்போது பிடிபட்ட விடுதலைப் புலிகளையும், காயம்பட்ட மக்களையும் செம்மணி என்கிற இடத்தில் உயிரோடு அள்ளிப்போட்டு புதைத்து, அப்போதே ஆவேசக் குற்றச்சாட்டில் சிக்கினார். பெரிய அளவில் குழி தோண்டி, 600-க்கும் மேற்பட்டோரைஅதற்குள் தள்ளி உயிரோடு புதைத்த கொடூரத்தை ஆதாரத்துடனேயே ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் அப்போது கண்டித்தன.

இலங்கை கதைதான் தெரியுமே… இந்த கொடூரத்தைச் செய்ததற்காகவே ராணுவத்தின் 18-வது தளபதியாக உயர்ந்தார்.

ஃபொன்சேகாவின் மனசாட்சியற்ற கொடூரங்களை சகிக்க முடியாத விடுதலைப் புலிகள், 2006-ம் ஆண்டு அவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள். அதில் எப்படியோ தப்பிவிட்ட ஃபொன்சேகா, ஒருவழியாய் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், விடுதலைப் புலிகளை அடியோடு ஒழிக்க நினைத்த ராஜபக்ஷே அரசு, அவரை வலிய அழைத்து, ராணுவத் தளபதியாக அறிவித்தது.

”ஃபொன்சேகா இப்போது முழுக்க முழுக்க அமெரிக்கா வின் கைப்பாவையாக இருக்கிறார். ராஜபக்ஷே அரசைக் காப்பாற்ற இந்தியா முயற்சித்தால், அமெரிக்கத் துணையோடு அதனை முறியடிக்க ஃபொன்சேகா தயாராகி வருகிறார். கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில், 2,000-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இப்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலங்கை ராணுவத்தின் அனுதின நடவடிக்கைகளை ஆராயவும், புலிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை அழிப்பதற்காகவும்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிக்னலுக்காக காத்திருக்கும் ஃபொன்சேகா, போர்க் காலத்தில் இந்திய அரசு காட்டிய அக்கறையைப் போட்டு உடைக்கவும் தயாராகி வருகிறார்.

போர் நடந்த நேரத்தில், தமிழர்களைக் காக்கும் கோரிக்கையோடு இலங்கை அதிபரை சந்தித்த சில இந்தியப் பிரதிநிதிகள், ‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதாக, சில ஆதாரங்களை முன்வைத்துச் சொல்ல ஃபொன்சேகா தயாராகிவிட்டார்…” என்கிறார்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் எதிர்க்கட்சித் தரப்பினர்.

- இரா.சரவணன்

நன்றி: விகடன்

No comments:

Post a Comment