'மீட்கப்பட்ட மக்கள்' - 3: சுகாதாரச் சீர்கேடு, பாலியல் துன்புறுத்தல்கள், சமூகச் சீர்குலைவுகள்: காப்பாற்ற யாருமற்ற அவலத்தில் தடுப்பு முகாம்களில் துடிக்கும் தமிழர்கள் |
[சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2009, 07:23 மு.ப ஈழம்] [க.நித்தியா] |
வவுனியா தடுப்பு வதைபுரி முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் - மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இருந்து மீண்டும் தாம் இரகசியமாக இயங்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் - தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தாம் எடுக்கும் கடின முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி உலகத் தமிழர்களிடம் கோரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. |
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர் ஒன்றியம் வவுனியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுங்கள் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாக கைப்பற்றிய சிறிலங்கா அரசு வன்னியில் வாழ்ந்த மக்களை முழுமையாக சிறைப்பிடித்து 'நலன்புரி முகாம்கள்' என்ற பெயரில் வவுனியாவின் காட்டுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு எந்த வகையிலுமே பொருத்தம் இல்லாத சூழல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அந்த முகாம்களில் ஏறக்குறைய 2 லட்சத்து 90 ஆயிரம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னியில் மிகுந்த வளமோடும் செழிப்போடும் வாழ்ந்த எமது மக்கள் தமது உயிர்களை மட்டுமே இந்த முகாம்களுக்கு வரும்போது எடுத்து வந்திருந்தனர். மாற்று உடைகள் கூட அவர்களிடம் இருக்கவில்லை. சுத்தமான குடிநீரோ, சத்தான உணவோ, தேவையான மருத்துவ வசதிகளோ எதுவும் இன்றி 100 நாட்களுக்கும் மேலாக அந்த முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மிகப் பெருமளவான இளம் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு சிங்களப் படை ஆட்களால் உள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர் அல்லது வற்புறுத்தப்படுகின்றனர். சத்தான உணவோ, சுத்தமான குடிநீரோ பெற்றுக்கொள்ள முடியாது அழுக்கு நீரைக் குடித்து, அகப்படும் எல்லா உணவுகளையும் உண்ணும் அவலத்தில் அந்த மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் யாராவது உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவ நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டாலும் கூட, அவர்களது உயிராபத்து நிலையைப் புரிந்து கொண்டு உடனடியாக சிகிச்சை வழங்க குறித்த சிங்கள மருத்துவர்கள் முன்வருவதே இல்லை. ஏனெனில், தடுப்பு முகாம்களில் உள்ள அந்த சிங்கள மருத்துவர்கள் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். அங்குள்ள தமிழ் மருத்துவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது; அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது. தடுப்பு முகாமில் உள்ள ஒரு நோயாளிக்கு மேலதிக சிகச்சை தேவை எனக் கருதி தமிழ் மருத்துவர் ஒருவரின் பரிந்துரையுடன் வவுனியா பெரிய மருத்துவமனைக்கு அந்த நோயாளியைக் கொண்டுசெல்ல முடியாது. குறிப்பிட்ட தடுப்பு முகாமின் மருத்துவ நிலையத்துக்கு பொறுப்பாக உள்ள சிங்கள மருத்துவரினதும், இராணுவத் தளபதியினதும் அனுமதி இருந்தால் மட்டுமே மேலதிக சிகிச்சைக்கு செல்லமுடியும். அவர்களது அனுமதி மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிடைப்பதே இல்லை. இவ்வாறான கெடுபிடிகள் காரணமாக நாளாந்தம் குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஆகக் குறைந்தது 20 தமிழ் மக்கள் இந்த முகாம்களில் உயிரிழந்தபடியே உள்ளனர். இந்த கொடூரம் வெளியே வருவதில்லை. தமிழ் அதிகாரிகளால் வெறுமனே தமது மனதுக்குள் அழ முடிகிறதே தவிர வேறு எந்த உதவியுமே செய்ய முடியாதுள்ளது. இத்தகைய துன்பங்கள் ஒருபுறம் இருக்க - நாளாந்தம் சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவினர், ஈ.பி.டி.பி மற்றும் புளொட் அமைப்பினர் பெருமளவான பொதுமக்களை கைது செய்து கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட எவரும் திரும்பி வந்ததே இல்லை. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் இந்தத் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் - இந்த முகாம்களின் குறித்த ஒரு பகுதி மட்டும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு அவர்களுக்குகு் காட்டப்படுகின்றது. அந்த வெளிநாட்டவர்களும், குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, சிறிலங்கா அரசுக்குப் புகழ்மாலை சூடிவிட்டுச் சென்று விடுகின்றனர். இத்தகைய துயர நிலையில் - வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் கூட தடுப்பு முகாம்களில் உள்ள எம் மக்களை மீட்க ஆக்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் எமக்கு மிகவும் வேதனையாக உள்ளது. அவலத்தில் வாழும் மக்களுக்காக தயவு செய்து குரல் கொடுத்து - எந்த விலை கொடுத்தாவது அவர்களை மீட்பதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும்படி அவலத்தில் வாழும் எம் மக்கள் சார்பாக வேண்டுகின்றோம். Thanks:puthinam.com |
Saturday, August 29, 2009
மீட்கப்பட்ட மக்கள்' - 3: சுகாதாரச் சீர்கேடு, பாலியல் துன்புறுத்தல்கள், சமூகச் சீர்குலைவுகள்: காப்பாற்ற யாருமற்ற அவலத்தில் தடுப்பு முகாம்களில் துடிக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment