Sunday, August 30, 2009

இந்திய அழுத்தங்களுக்கு மகிந்த இணங்கினால் தாய் நாட்டைப் பாதுகாக்க எதனைச் செய்யவும் தயங்கமாட்டோம்: ஜே.வி.பி. எச்சரிக்கை

இந்திய அழுத்தங்களுக்கு இணங்கி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டால், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக எதனைச் செய்வதற்கும் தாம் தயங்கப் போவதில்லை என ஜே.வி.பி. மீண்டும் அரசை கடுமையாக எச்சரித்திருக்கின்றது.

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தனிநாட்டுக்கு அல்லது நாடு பிளவுபடுவதற்கே வழிவகுப்பதாக அமையும்" எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.

"காவல்துறை அதிகாரம் எந்தவொரு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தின் காவல்துறை மத்திய அரசின் காவல்துறை மா அதிபரின் கீழ் செயற்படாது" எனவும் ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார்.

தென்மாகாணத்தில் உள்ள தங்காலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர், தனது உரையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

"ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தன உடன்படிக்கையை அல்லது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு தனிநாட்டுக்கான அத்திவாரமாக அமையும்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்காகவும், வவுனியா நகர சபைக்காகவும் நடைபெற்ற தேர்தல் தொடர்பாகக் குறிப்பிட்ட ரில்வின் சில்வா, இவை எதுவும் அவசரமானவை அல்ல. இந்தப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்தினர் பயங்கரவாதம், மற்றும் பிரிவினைவாதத்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 12 வீதமானவர்களே வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளனர். இருந்தபோதிலும் அவர்களிடம் நாட்டின் நிலப் பகுதியில் 33 வீதமும், கடற்பகுதியில் 61 வீதமும் உள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களில் 55 வீதமானவர்கள் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு வெளியிலேயே வசிக்கின்றார்கள். வடக்கு - கிழக்குப் பகுதிகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது தென்பகுதியில் உள்ள தமிழர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு இரண்டு வழிகளைத் தவிர வேறு வழிகளில் அரசினால் தீர்வை நாட முடியாது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வசிப்பவர்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். தமிழர்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புக்களினால் போர் வீரர்கள் கெளரவிக்கப்படும்போது, இரண்டு போர் வீரர்கள் கெளரவிக்கப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து ஆச்சரியப்படத் தக்கவகையில் தப்பித்துக்கொண்ட முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி ஆகிய இருவரும் இவ்வாறான நிகழ்வுகளில் நடத்தப்படும் முறை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுடன் வந்த கப்பல்கள் பலவற்றை அழித்து அவர்களைப் பலம் இழக்கச் செய்த முன்னாள் கடற்படைத் தளபதியை அரசு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக நியமித்திருக்கின்றது. இதுதானா அவரைக் கெளரவிக்கும் முறை?" எனவும் ஜே.வி.பி. செயலாளர் கேள்வி எழுப்பினார்.

நன்றி:புதினம்

No comments:

Post a Comment