Sunday, August 30, 2009

'மீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கரம்


அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை.

1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்த முதன்மையான அதிகாரங்களில் சுகாதார நிர்வாகமும் ஒன்று.

அதன்படி - மாகாண சுகாதார அமைச்சுக்கள் - மத்திய அரச சுகாதார அமைச்சின் அனுமதியோ உத்தரவோ இல்லாமலேயே - சுகாதாரம் தொடர்பான வேலைத் திட்டங்களைத் தத்தமது மாகாணத்திற்குள் செயற்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் வன்னிப் போர்க்களப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கில் வெளியேறிய தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் செட்டிக்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு முகாம்களை (Detention Camps) சிறிலங்கா அரசு 'நிவாரணக் கிராமம்' (Relive Villages) என்றும், அரசு சாரா நிறுவனங்கள் 'நிவாரண வலயம்' (Relive Zones) என்றும் பெயரிட்டு வைத்துள்ளன. ஆனால் - உண்மையில் இவை எல்லாம் 'தடுப்பு வதைபுரி முகாம்கள்' (Nazi style Concentration Camps) என்பது நாம் அறிந்ததே.

அதன்படி - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வவுனியா மாவட்ட சுகாதாரச் சேவையின் கீழ் - செட்டிக்குளம் தடுப்பு முகாம்களது சுகாதாரச் செயற்திட்டங்களும், செட்டிக்குளம் அரச மருத்துவமனையின் பணிகளும் இதுவரை காலமும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த நிலையில் - செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளை அங்கு இருந்தே நேரடியாக இயக்குவதற்கான இணைப்புச் செயலகம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் செட்டிக்குளம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டதுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட திறமை மிக்க தமிழ் மருத்துவர் ஒருவர் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சும், வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து - முற்றுமுழுதாகத் தமிழ் மருத்துவர்களது தலைமையில் - தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கான சுகாதார மற்றும் மருத்துவ சேவையினை மிகச் சிறப்பாக வழங்கி வந்தன.

ஒவ்வொரு உயர்மட்ட சுகாதார நிர்வாகக் கலந்துரையாடல்களிலும் அந்த மக்களது சுகாதார மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தெளிவான புள்ளி விபரங்களுடன் முன்வைத்துத் தீர்வுகாண முற்பட்டன.

இது சிறிலங்கா அரச நிர்வாக இயந்திரத்துக்குச் சங்கடத்தினை விளைவித்தது.

நேரடியாக சுகாதாரத்துறையினருடன் முரண்படுவது அனைத்துலக மட்டத்திலான சிக்கல்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரச வட்டாராம் - தந்திரோபாயமாக - பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத்துறை மூலம் தமிழ் மருத்துவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது.

இந்த வேளையில் - அண்மையில் - எதிர்பாராத விதமாக - அந்த தமிழ் மருத்துவ இணைப்பாளர் வீதி விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்து விட்டார்.

அதனை அடுத்து, அவரது இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு - மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படாமலேயே - சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவசர அவசரமாக நியமித்துவிட்டது சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சு.

இது ஒன்றும் இயல்பாக நடந்துவிட்ட ஒரு சாதாரண நிர்வாகச் சம்பவம் அல்ல. மிகவும் நுணுக்கமாக - அரவம் எதுவும் இன்றி - அரங்கேற்றப்படும் ஒரு பாரிய பேரினவாதத் திட்டம்.

தமிழ் இனத்தை வேரறுக்கும் மாறாத தனது இலட்சியத்தை அடைய, சிங்களப் பேரினவாதம் மாற்றி மாற்றிச் செயற்படுத்தும் பேரினவாத வடிவங்களில் ஒன்றுதான் - இப்போது இந்த மருத்துவச் சுகாதாரத்துறை.

அந்தத் தமிழ் மருத்துவ இணைப்பாளரைப் படுகாயப்படுத்திய அந்த வீதி விபத்துக் கூட சந்தேகத்துக்கு இடமான விதத்திலேயே நடந்தேறியதாக வவுனியா மாவட்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதன்பின்பு - சிங்களவர் ஒருவர் செட்டிக்குளம் பகுதிக்கான மருத்துவ சுகாதார இணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்பு - சிறிது சிறிதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஓரங்கட்டப்பட்டு, சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சும் சிங்கள ஆதிக்கமும் செட்டிக்குளம் பகுதியில் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கின.

அதிலும் குறிப்பாக - இணைப்பாளராகச் சிங்கள மருத்துவரை நியமித்தவுடன், ஒவ்வொரு தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாகச் செயற்பட்ட தமிழ் மருத்துவர்களது பரிந்துரைகள் எவையுமே செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டன.

உதாரணமாக - அதுவரை காலமும் மருத்துவ மரபின் பிரகாரம் - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு மருத்துவர் கருதினால் எதுவித தடையுமின்றி நோயாளர் காவு வாகனம் (Ambulance) மூலம் குறித்த நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வசதி இருந்து வந்தது.

ஆனால் இப்போது - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு தமிழ் மருத்துவர் கருதினால் கூட (அவர் சிறப்பு மருத்துவ நிபுணராக இருப்பினும் கூட) மேற்-பரிந்துரை ஒரு சிங்கள மருத்துவரால் அல்லது இராணுவ மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்பின்னர் - அந்தச் சிங்கள இணைப்பாளரின் அனுமதி கிடைக்காத நிலையில் - குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட தமிழ் நோயாளர்கள் தடுப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகச் செத்து விழத் தொடங்கினர்.

இதனால் - தமது கண் முன்னாலேயே சொந்தங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் எதுவும் செய்ய வகையில்லாத தமது கையாலாகாத நிலையால் மனம் வெதும்பிய தமிழ் மருத்துவர்கள் ஒவ்வொருவராக செட்டிக்குளம் பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினர்.

தற்போது - செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏழு தடுப்பு முகாம்களில் எதிலுமே பொறுப்பு மருத்துவர்களாகத் தமிழர்கள் இல்லை. எல்லாவற்றிலுமே சிங்களவர்களே பொறுப்பாக உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த செட்டிகுளம் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் (Medical Officer for Health அல்லது Divisional director of Health Services) அதிகாரங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிங்கள் மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.

சிறிலங்காவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு நடைமுறையாக - நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை (Preventive and Curative) செட்டிக்குளம் பிரதேச சுகாதார அதிகாரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இதன் பின்னால் இன்னொரு பாரிய சதி நடவடிக்கை ஒளிந்திருக்கிறது.

சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிகளில் சிசு மரணங்கள் (Infant Deaths), கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது (Maternal Deaths) இறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுவதும் அடங்குகின்றது.

அந்த அறிக்கையானது அதிகாரபூர்வப் புள்ளி விபரங்களில் வெளியானால் அரசுக்குச் சிக்கல்களை உருவாக்கும். இதனாலேயே தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்கள மருத்துவர்களிடம் முடக்கப்பட்டது.

விளைவாக - கடந்த ஐந்து மாத காலத்தில் - செட்டிக்குளம் பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மட்டும் இறந்து போன 20 வரையான பிரசவத் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களது இறப்புக்கள் தொடர்பான கள விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை (Field Investigation Report) முழுமைப்படுத்தப்படவில்லை.

இது - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு வெற்றியடைந்திருப்பதையே காட்டுகிறது.

மேலும் - தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்களவர்களிடம் முடக்கப்பட்டதால் - தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைள் (Maternal and Child Health Activities) முற்றாகச் சீர்குலைந்து போயின.

கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது மரணங்களும் (Maternal Deaths) சிசு மரணங்களுமாகும் (Maternal Deaths) ஒரு நாட்டின், அல்லது ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் சுகாதார நிலவரத்தின் குறிகாட்டிகள் (Health Indicators) எனக் கருதப்படுபவை.

ஒரு நாட்டில், அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் தாய்மார்களது இறப்புக்களோ (Maternal Deaths) அல்லது சிசுமரணங்களோ (Infant Deaths) அல்லது இரண்டுமே கூட - அடிக்கடி நிகழ்கின்றது எனின் அந்தச் சமூகம் சுகாதாரத்தில் படுவீழ்ச்சி கண்டதாகவே (Poor Health Status) அர்த்தம்.

மேலும் - வன்னிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே கட்டுப்பாட்டில் இருந்த கொடிய தொற்று நோயான சின்னமுத்து (Measles) செட்டிக்குளம் பகுதி ஏழு தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக - தமிழ் மருத்துவர்களைத் துரத்தி விட்டுச் சிங்களவர்களை அந்த இடங்களுக்கு நியமித்துச் சுகாதாரச் சீர்கேடுகளை முடிமறைத்து, அவை பற்றிய புள்ளி விபரங்கள் வெளியே செல்வதைத் தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு.

இதே வேளையில் - வெளிநாட்டு அரசுகளும் சரி, அரசு சாரா நிறுவனங்களும் சரி "இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் நேரடியாகத் தான் உதவுவோம்" எனக் கூறி மருத்துவ உபகரணங்களாகவும், மருந்துகளாகவும் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஊடாகத் தமது உதவிகளைக் குவிக்க தொடங்கின.இவ்வாறாக வந்து குவிந்த மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தென்னிலங்கை மருத்துவமனை ஒன்றின் மருத்துவ அதிகாரி ஒருவர் "செட்டிக்குளம் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூடக் கிடையாது" என்று சொன்னார்.

இதனால் - கொழும்பில் இரகசிய ஆலோசனைகள் அவசர அவசரமாக நடந்தன. "எப்படி இந்த மருத்துவ உபகரங்களைத் தென்னிலங்கைக்குக் கடத்துவது" என்பது பற்றித் தான் அந்த ஆலோசனைகள் நடந்தன.

தற்போதைய சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சொத்து.

செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் - செட்டிக்குளம் மருத்துவமனையிலும், தடுப்பு முகாம்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் இந்தக் கருவிகள் அங்கு பயனற்றவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எண்ணினால் - அந்த உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைகளுக்கோ அல்லது முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ அனுப்பலாம். வடக்குக்கு வெளியே வேறு எங்கும் கொண்டுசெல்ல முடியாது.

இதுதான் சிறிலங்கா அரச மட்டத்தினருக்குப் பிடிக்கவில்லை.

"பல கோடி ரூபாய்கள் பெறுமதியான - மிகத் தரமான அவ்வளவு உபகரணங்களையும், ஏனைய மருத்துவ உதவிகளையும் தெற்கிற்கு எப்படி எடுத்துச் செல்வது?"

வேகமாகச் சிந்தித்த மத்திய சுகாதார அமைச்சு - செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகரான தமிழ் மருத்துவரை எப்படித் "தூக்குவது" என்பது பற்றியும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரத்தை செட்டிக்குளத்தில் எப்படி இல்லாது செய்வது என்பது பற்றியும் சிந்தித்து திட்டமிடத் தொடங்கியது.

இறுதியாக - குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்த மத்திய சுகாதார அமைச்சு - அவசர அவசரமாக - அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலமாக செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களும் (தடுப்பு முகாம்கள்), ஆதார மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாகப் பிரகடனப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

இந்த முயற்சிக்கு உடந்தையாக - முன்னாள் தரைப்படை அதிகாரியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயின் உத்தரவுக்கு இணங்க மாகாண சுகாதார அமைச்சும், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் எந்தவித எதிர்ப்பும் காட்ட முடியாது அமைதியாக இருப்பது அனைத்து தமிழ் மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பான முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இந்த முறைகேடான நடவடிக்கை தொடர்பில் உண்மை நிலையினை வெளி உலகுக்கு தெரிவித்து இந்த முறைகேட்டினை முறியடிக்க உதவுமாறு வவுனியா தமிழ் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் வேண்டுகின்றன.

இந்த விடயத்தைப் பெரிதாக்கி - உரிய முறையில் சிறிலங்கா அரசு மீது - இலங்கைத் தீவுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களைப் போட்டு தமிழ் இனத்துக்கு உதவுமாறு -

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகளாவிய ரீதியில் இயங்கும், தமிழர் மருத்துவ அமைப்புக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்படும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரிடம் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

நன்றி:புதினம்

No comments:

Post a Comment