ஹேர்பின், வாடிய ரோஜா, வாடாத சாக்லேட் பேப்பர் என்று காதலின் சின்னமாக பலரும் பல விஷயங்களைப் பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதில் சேரன் தன் காதலி எழுதிய கடிதங்களையும் காதலைப் பற்றி எழுதிய டைரிகளையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருக்குப் பிறகு அவருடைய மனைவியும் மகனும் அதே மரியாதையோடு அதை பாதுக்காக்கிறார்கள்.
கவிதையாகத்தான் இருக்கிறது கதை... ஆனால், சொன்ன விதத்தில்தான் சாக்லேட் பேப்பரையும் வாடிய பூவையும் பாதுகாக்கும் ஆசாமி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றிவிடுகிறது.
இன்றைய தலைமுறையைக் காட்டி அவர்கள் காதலையும் காட்டி, 'நாங்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு கவிதையாகக் காதலித்தோம் பார்...' என்றும் காட்ட முனைந்திருக்கிறார் சேரன். ஆனால், 'ஏண்டா... உன்கிட்டேயிருந்து எஸ்.எம்.எஸ். வரலைன்னா என்னால் மூணு நிமிஷம் பொறுக்க முடியலை... முப்பது நாள் லெட்டருக்காகக் காத்துகிட்டு எப்படிடா இருக்கமுடிஞ்சது" என்று ஒரு கேரக்டர் சொல்லும் வசனம்தான் படத்துக்கான விமர்சனமாகவும் ஆகிவிடுகி
றது. இவ்வளவு வேகமாக இருக்கும் தலைமுறைக்கு சொல்லும் கதை எத்தனை வேகமாக இருக்கவேண்டும்.
ஆனால், சேரனும் பத்மப்ரியாவும் மாறிமாறி கடிதங்களை படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதையே எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும். அதிலும் நாலு பக்க கடிதம் என்றால் நாலு பக்கத்தையும் பொறுமையாகப் படிக்கிறார்கள்.
படம் தொடங்கிய நொடியில் இருந்தே யுகம் யுகமாகக் கழிகிறது. நடுவில் பத்மப்ரியாவைத் தேடி சேரன் நாகூருக்கு வரும்போது கொஞ்சமே கொஞ்சம் வேகமெடுக்கிறது. சில நிமிடங்கள்தான்... அதன்பிறகு மீண்டும் பழைய கூட்டுக்குள் போய்விடுகிறது. இந்த மெதுவான திரைக்கதைதான் படத்துக்குப் பெரிய கத்தியாக ஆகிவிட்டது.
சேரன் கைவசம் நாலைந்து பாவனைகளை வைத்திருக்கிறார். அதை கூடியமட்டும் ஆட்டோகிராஃபிலேயே காட்டிவிட்டார். இன்னும் ஏன் நடிப்பாசையில் நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக நல்ல இயக்குனர் சேரனை நாயகனாக நடிக்க வைக்கமாட்டார். இயக்குனர் சேரன் சிந்திக்க வேண்டிய நேரம் இது!
படத்தின் அழகான விஷயங்கள் கேமராவும் அது காட்டும் பத்மப்ரியாவும்! ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஓவொரு காட்சியையும் ஓவியம் போல அமைத்திருக்கிறார். எந்தக் காட்சியையுமே முதல் நொடியிலேயே அதன் தன்மையை உணர்த்தி விடுகிறது கேமராவின் கோணமும் ஒளியமைப்பும்.
பத்மப்ரியா முகபாவனைகளாலேயே மொத்த வசனத்தையும் பேசிவிடுகிறார். அதிலும் இஸ்லாமியப் பெண்ணாக வருவதால் முழுக்க மூடிய பர்தாவில் மிச்சமிருக்கும் கண்கள் பாதி கதைகளைச் சொல்கின்றன. உணர்வுகளை அத்தனை அற்புதமாகக் கொண்டு வருகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான மேக்கப்தான் படு உறுத்தல்!
கதை எழுபதுகளில் நடப்பதாகக் காட்டும் சேரன், அதற்காக ஓவராக உழைத்துவிட்டார் போலும். ரூபாய் நோட்டுகள் பெரிதாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் நாடகத் தமிழில் வசனங்கள் பேசுகிறார்கள். மீசையில் ஜெமினிகணேசனை நினைவுபடுத்துகிற மேக்கப் தொடங்கி பல இடங்களில் மிகை!
எந்த விஷயத்தையும் ஒரு எஸ்.எம்.எஸ்-ஸுக்குள் சொல்லிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இரண்டு ஷோ சேர்ந்து பார்க்கிறோமோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு நீட்டி முழக்க வேண்டியதில்லை.
சேரன் சார்... உங்க பாரதி கண்ணம்மா, பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு எல்லாமே மக்களின் மனதில் நின்ற படங்கள்தான்... நீங்கள் நல்ல படம் என்றால் வேறு எதுவோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி:தெனாலி
No comments:
Post a Comment