Thursday, December 31, 2009

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மிகக் கொடிய இனப்படுகொலையையும், புலிகள் இயக்கம் சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவையும் தொடர்ந்து நடைபெறும் பெரியதொரு நிகழ்ச்சி என்பதனால், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலவும் பலவிதமான கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு இம்மாநாட்டில் விடை கிடைக்கக் கூடும் என்ற ஒரு இலேசான எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சமீபத்திய மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் குரலையோ அறிக்கையையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலர். பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ, கேள்விகள் பல இருக்கின்றன. இனி ஆயுதப் போராட்டமா, அரசியல் போராட்டமா, அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்யவேண்டும்? தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது? புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார்?..என்பன போன்ற கேள்விகளுக்கு புலி ஆதரவாளர்களே ஆளுக்கொரு விதமாகப் பதில் சொல்லி வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் இத்தகைய கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதிலை எதிர்பார்ப்பது குற்றமோ துரோகமோ ஆகாது என்பதால் இந்த எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.

மேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன். பக்கத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சின்னம். அதன் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கதறும் தாய் – இதுதான் மேடையின் பின்புலமாய் அமைந்திருந்த சித்திரம். இது உலகத்தமிழர் ஒற்றுமையின் குறியீடா, அல்லது இந்திய மேலாதிக்கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமா? உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா? இவை நமக்குத் தோன்றிய கேள்விகள். தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோருக்குத் தோன்றக் கூடாத கேள்விகள்.

25 ஆம் தேதி காலை முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பிலான அமர்வு. தலைமை வகித்த முனைவர் த.ஜெயராமன் “4000 புலிகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ஆதனால்தான் இலங்கை அரசு இராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது. எனவே இது தோல்வியே அல்ல’’ என்றார். அந்த அமர்வில் பேசிய அனைவரும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

அடுத்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார் நடராசன் (சசிகலா). “நெடுமாறனும் நானும் ஒன்றாக இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை என்று குமுதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. விசாரித்தபோது அது போலீசின் ஏற்பாடு என்று தெரிந்தது. தமிழ் ஈழத்துக்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா?’’ என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார். விரும்புகிறோம் விரும்புகிறோம் என்று பதிலளித்தது கூட்டம்.

அன்று நெடுமாறனை பொடாவில் உள்ளே வைத்தபோதும் அம்மாவுடன் ஒன்றாக இருந்தாரே நடராசன் அதுவும் தமிழ் ஈழத்துக்காகத்தானோ என்று யாரும் கேட்கவில்லை. “தமிழகத்தைப் பெறுவதற்காக’’ அம்மாவுடன் ஒன்றாக இருக்கிறார் சசிகலா. “தமிழீழத்தைப் பெறுவதற்காக’’ அய்யாவுடன் ஒன்றாக இருக்கிறார் நடராசன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

ஈழம் – நிமிரும் காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற அடுத்த அமர்வில் பேசத்தொடங்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், “பிரபாகரன் அவர்களே’’ என்று விளித்து பேசத் தொடங்கினார். இங்கே நான் பேசுவது அவருக்கு கேட்கும் என்று அவர் கூறியவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது. அடுத்துப் பேசிய பேராசிரியர் அய்யாசாமி, “இது பின்னடைவே அல்ல. புலிகள் திட்டமிட்டுப் பின்வாங்கியிருக்கிறார்கள். தமிழ் ஈழப்போராட்டத்தின் வேர் உலகம் முழுவதும் பரவிவிட்டது’’ என்று கூறி, இன்றைய நிலைமையை மாபெரும் முன்னேற்றமாகச் சித்தரித்தார்.

தற்போது ஏற்பட்டிருப்பது பின்னடைவுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அடுத்துப் பேச வந்த இராசேந்திர சோழன். “ஏற்கெனவே ஈழம் மலரும் என்றோம். இன்று நிமிரும் காலம் என்று தலைப்பிட்டிருக்கிறோம். வீழ்ந்ததனால்தான் நிமிர வேண்டியிருக்கிறது. இதிலிருந்தே பின்னடைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்து வந்த பாதையை சுயவிமரிசனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார். எதை சுய விமரிசனமாகப் பார்க்கவேண்டும் என்ற விவரத்துக்குள் போகாமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்.

அடுத்து நடைபெற்ற பொது அரங்கிற்கு பா.ம.க தலைவர் ராமதாசு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மகேந்திரன் ஆகிய இருவருமே வரவில்லை. இரண்டு பேருக்கும் உடல்நிலை சரியில்லையாம். என்ன நோய் என்பது ஒருவேளை பிற்காலத்தில் நமக்குத் தெரியவரலாம். ஆனால், தேர்தலுக்கு முன் ஐயாவுடன் இருந்த தியாகு, சீமான், பெரியார் தி.க போன்றோரையும் இங்கே காணமுடியவில்லை. அதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை.

பொது அரங்கின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன்.

முதலில் பேசிய வடிவேல் இராவணன், பாமக, கருணாநிதியை தாக்கிப் பேசவே நிலை கொள்ளாமல் தவித்த சச்சிதானந்தன், “”எங்களுக்கு எல்லோரும் வேண்டும். ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். உங்கள் உள்ளூர் பிரச்சினையை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அடுத்துப் பேசவந்த மணியரசன், இதனைக் கணக்கில் கொண்டார் போலும். “இந்தியாவிலும் தமிழகம் அடிமையாகத்தான் இருக்கிறது, எனவே ஈழத்துக்காக மட்டுமின்றி தமிழகத்தின் விடுதலைக்காகவும் போராடவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்று சொல்ல முடியாது’’ என்றார். பேச வந்த அத்தனை பேரும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடனே அரங்கம் ஆர்ப்பரிப்பதையும் மணியரசனாலேயே சீரணிக்க முடியவில்லை போலும்! “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

யாரையும் புண்படுத்தாமல் பேசிய மணியரசனை வெகுவாகப் பாராட்டினார் சச்சிதானந்தன். தனித்தமிழ்நாடு கேட்பதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர் கவலை எல்லாம் கருணாநிதியைத் திட்டுவது பற்றியதுதான். அடுத்துப் பேச வந்த ஆவடி மனோகரன் மறுபடியும் கருணாநிதியை சாடத்தொடங்கவே, சச்சிதானந்தன் குறுக்கிட்டார். அப்படித்தான் பேசுவேன் என்றார் ஆவடி மனோகர். அவர் பேசி முடித்தவுடன் “ஈழத்துக்காக எம்.ஜி.ஆர் 5 கோடி கொடுத்தார், ராஜீவ் 50 இலட்சம் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து யார் என்ன கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நின்றுதான் போராடினோம். உணர்ச்சி வசப்படுவதெல்லாம் காரியத்துக்கு ஆகாது’’ என்று புத்திமதி கூறினார் மறவன் புலவு.

“நம்பக்கூடாத இந்தியாவை நம்பி நீங்கள் கெட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்னைப் பொருத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழர்கள் சீனாவை ஆதரிக்க வேண்டும்’’ என்று இன்னொரு காமெடி பிட்டை வீசினார் அடுத்துப் பேசிய நகைமுகன். இவர் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர், சந்தேகத்துக்குரிய நபர் என்பது தமிழகம் முழுதும் உலவிய ஒரு செய்தி.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கட்சியும், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவதற்கு எதிராக தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் கட்சியுமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அடுத்த பேச்சாளர்.

“இலங்கைப் பிரச்சினை என்பது தமிழரின் இனப்பிரச்சினையோ, மொழிப்பிரச்சினையோ அல்ல. அது காஷ்மீர் முதல் இலங்கை வரை உள்ள 110 கோடி இந்துக்களுக்கு எதிராக ஒரு கோடி பவுத்தர்கள் தொடுக்கும் போர். அதேபோல சைவம் வேறு தமிழ் வேறு அல்ல. களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆக்கிரமித்த சமண, பவுத்தங்களை வீழ்த்தி சைவத்தை மீட்டார்கள் சமயக் குரவர்கள். இந்தப் பிரச்சினையை இப்படி சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருப்பதனால்தான், எங்கள் தலைவர்கள் பால் தாக்கரேயும், முத்தாலிக்கும் (கர்நாடக இந்து சேனா) புலிகளை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். நாத்திகர்களை ஏளனம் செய்து அர்ஜூன் சம்பத் பேசிய போது மட்டும் கீழேயிருந்து சிறிய தொரு சலசலப்பு வந்தது. அதை அர்ஜூன் சம்பத் சட்டை செய்யக்கூட இல்லை. மற்றப்படி அவரது பேச்சை மேடையிலிருந்த யாரும் ஆட்சேபித்தோ மறுத்தோ பேசவில்லை.

அப்புறம் ஓவியர் வீர சந்தானம். “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னார். எனக்கு 99% நம்பிக்கை வந்தது. அப்புறம் மலேசியா போயிருந்த போது அங்கேயும் இருக்கிறார் என்றார்கள். 100% நம்பிக்கை வந்துவிட்டது’’ என்றார். “அம்மா தேர்தல் நேரத்தில் ஈழத்துக்காக குரல் கொடுத்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்புறம் ஏனோ அதை கைவிட்டு விட்டார்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் சேர்ந்து ஈழத்துக்காக நின்றால் நாம் அனைவரும் அவர்கள் பின்னால் நிற்போம்’’ என்றார். “இப்போதைக்கு நெடுமாறன் சொல்கிற இடத்தில் நிற்கணும்’’ என்பதுதான் அவர் உலகத்தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை.

26 ஆம் தேதி காலை முதல் அமர்வு – முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் . பேசியவர்கள் வதை முகாமின் கொடுமைகளை விவரித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சூழ்ந்து வரும் சீன அபாயத்தை விளக்கினார் பேரா. சுப்பிரமணியன். இலங்கையில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் மூலம் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக தென்தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இந்த உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை என்றும் அதனை அவர்களுக்கு உரைப்பது போல நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்துப் பேசவந்தவர் மார்க்சிய லெனினியப் பார்வையில் இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தையும் அணுகும் எழுத்தாளர் சூரியதீபன். இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் தமிழ் உணர்வாளர்களின் மேற்படி தந்திரம், ஒரு காலாவதியாகிப்போன காமெடி என்பதையோ, சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை. “மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அனுமதிக்காத ராஜபக்சே இந்திய எம்.பிக்களை அனுமதிக்க காரணம், இவர்கள் இலங்கை அரசின் கூட்டாளிகள் என்பதுதான்’’ என்று ஊரறிந்த ஒரு உண்மையை உலகத்தமிழர்களுக்காக இன்னொருமுறை கண்டுபிடித்து வெளியிட்டார். இலங்கை சென்றிருந்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, எட்டு கோடி உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர்தான் என்று அங்கே பேசியதைச் சாடி, உலகத்தமிழர்களின் தலைவன் பிரபாகரனே என்று பிரகடனம் செய்தார். பிறகு கருணாநிதி நடத்தவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் சிவத்தம்பியையும், ஆள்பவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழறிஞர்களையும் சாடினார்.

அடுத்துப் பேசிய ஈழப்பத்திரிகையாளர் அய்யநாதன், தான் ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பத்திரிகையாளன் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, புலிகள் சரணடையக் காரணம் அவர்கள் போரிடும் ஆற்றலை இழந்தது அல்ல, மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான் என்று “தெளிவு’’படுத்தினார். எனினும் இன்று தலைவர் இல்லாததால் நாம் நிர்க்கதியாக நிற்கிறோம். “போராட்டத்தை தொடர்வதற்கு ஆயுதம் ஏந்தவேண்டுமென்று அவசியமில்லை. இனி, நெடுமாறன் வழிகாட்டுதலில் செயல்படுவதுதான் உலகத்தமிழர்களின் கடமை’’ என்றார். எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அடுத்துப் பேசவந்த அருட்தந்தை பாலு, “இனி மனித வரலாற்றை கி.மு, கி.பி என்று குறிப்பிடக்கூடாது. தமிழனுக்கு முன், தமிழனுக்குப் பின் என்றுதான் குறிப்பிட வேண்டும்’’ என்றார். கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் தமிழன் என்பதால் தமிழனுக்கு முன் என்ன வரலாறு இருந்திருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. தமிழனுக்குப் பின் என்று வேறு அவர் கூறிவிட்டதால், உலகத்தமிழினம் முழுவதும் ஒழித்துக் கட்டப்படும் நாளை எண்ணி அச்சம் மேலிட்டது.

“தமிழனுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்துக்கும் தலைவன் பிரபாகரன்தான். ஈழம் ஏற்கெனவே பிறந்து விட்டது. சற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அவ்வளவுதான்’’ என்று அடுத்த அதிர்ச்சிப் பிரகடனத்தையும் வெளியிட்டார். பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றவேண்டும் என்றார். கடைசியாக சோனியாவைப் பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, விவிலியத்தில் ஏரோதுக்கு நேர்ந்த கதிதான் சோனியாவுக்கு நேரும் என்று சாபமிட்டார்.

முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் என்ற இந்த அமர்வுக்கு பிரபல தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ஹென்றி திபேன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரைக் காணோம்.

தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்ற தலைப்பிலான அடுத்த அமர்வில் மும்பை, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 தமிழறிஞர்கள் பேசினர். புதிதாக ஒன்றும் விசயம் இல்லை. வெளிநாட்டு தமிழறிஞர்கள் பங்கு பெறும் அடுத்த அமர்வுக்கு டத்தோ சாமிவேல் வரவில்லை. மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒருவர் பேசினார்.

பிறகு உலகப் பெருந்தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் நெடுமாறன். உலகப்பெருந்தமிழர் என்ற விருதினைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லகண்ணு, இந்திய அரசின் மீது மிகவும் மென்மையாகத் தனது விமரினத்தைத் தெரிவித்தார். பேராசிரியர் விருத்தாசலம், சங்க இலக்கியங்களிலிருந்து தமிழரின் மேன்மையை நினைவுபடுத்திப் பேசினார். விருது வழங்கி விழாப்பேருரையாற்றினார் நெடுமாறன். அவரது பேச்சு முழுவதும் சச்சிதானந்தனுக்கு பதிலாகவே அமைந்திருந்தது. 1983 முதல் ஈழத்தமிழர் போராட்டத்துக்காக தமிழகத்திலிருந்து செய்யப்பட்ட உதவிகளைப்பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை விவரித்தார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சியாக இருந்தபோதும், ஈழப்பிரச்சினையில் ஆதரவாக இருந்ததாகக் கூறினார். இறுதியாக ஈழப்போராட்டத்தை பிரபாகரன் தொடர்ந்து நடத்துவார். இப்போதே நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.

மாலை பொது அரங்கிற்கு தலைமை தாங்கிய காசி ஆனந்தன், “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் கூறுகிறார். இல்லேன்னா சொல்வாரா? அதனால் தலைவர் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார். “இன்று சந்தித்திருப்பது பின்னடைவு என்று கூறுவதே தவறு. விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வியே கிடையாது, ஈழம் ஒன்றுதான் தீர்வு’’ என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்து தமிழர் இயக்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம். தஞ்சையைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் ஏற்கெனவே இருந்த இடம் பாரதிய ஜனதா கட்சி. “எல்லா அனைத்திந்தியக் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும், எல்லோரு வீட்டிலும் பிரபாகரன் படத்தை மாட்டுவதுடன், ஒரு உண்டியல் வைத்து காசு சேர்த்து அதனை நெடுமாறனிடம் கொடுக்கவேண்டும்’’ என்றார் வைத்தியலிங்கம்.

கடைசியாகப் பேசிய வைகோ, இறுதிப் போரின் கொடுமைகளை விவரித்தார். “போரில் படுகாயமுற்று இரண்டு கால்களையும் இழந்த சோழமன்னன் விஜயாலயச் சோழன், என்னைத் தூக்கிக் கொண்டு போய் போர்க்களத்தில் விடுங்கள் என்று கூறிய மண் இது. எனவே தலைவர் பிரபாகரன் இருக்கிறார். வழிநடத்துவார்’’ என்றார். பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாறு, அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் வாக்கெடுப்புகள் பற்றிக் கூறி தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடக்கும் என்றார். எதற்கு வாக்கெடுப்பு, தனி ஈழத்துக்கா, தனித் தமிழ்நாட்டுக்கா என்று கூறாமல் நைசாக அவர் நழுவிய போதிலும் கூட்டம் ஆரவாரித்தது. பிறகு 33 ஆண்டுகளுக்கு முன் ஈழத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கதையை விலாவரியாக சொன்னார். ஈழத்தமிழர்க்கு நடந்த கொடுமைகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவு திரட்டவேண்டும் என்றும், பிரபாகரன் புதிய எழுச்சியுடன் வருவார் என்றும் பிரகடனம் செய்தார்.

தனி ஈழம்தான் தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம்தான் இறுதி. அதுதான் இலக்கு என்பதே இந்த மாநாட்டின் தீர்மானம்.


மாநாடு நடைபெற்ற இடம் நடராசனுக்கு (சசிகலா) சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபம். கூட்டம் சுமார் 2000 பேர். மண்டபம் கொடுத்தது மட்டுமின்றி வந்திருந்தவர்களுக்கு சாப்பாடும் அங்கே போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த நடராசனுக்கு வெகுவாக நன்றி தெரிவித்தார் நெடுமாறன். பிரபாகரன் படங்கள், பனியன்கள் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய சீருடையும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற சட்டை, அரக்கு நிற பார்டருடன் சரிகை போட்ட நீண்ட மேல்துண்டு – துண்டை பழைய தமிழ்ப்பட ஜமீன்தார் பாணியிலும், சுப்பிரமணியசாமி பாணியிலும் பலர் அணிந்திருந்தார்கள். பெண்களுக்கான தமிழ்த் தேசியச் சீருடை என்று எதையும் காணோம்.

கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் 80 களில் ஈழப்போராட்டம் துவங்கியபோது இளைஞர்களாக இருந்து தற்போது நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், முதியவர்கள். சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள்.

பேச்சாளர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள், இந்திய அரசின் சதி, கருணாநிதியின் துரோகம் ஆகியவற்றையும் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையும் தாக்கிப் பேசினர். பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கூச்சல், அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியவுடன் ஆர்ப்பரிப்பு, கருணாநிதியைத் திட்டினால் கைதட்டல்.

இந்த மூன்றும்தான் கூட்டத்தைக் கவரும் பாயிண்டுகள் என்று பேச்சாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இதே விசயங்களை ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் பில்டப் கொடுத்துப் பேசத்தொடங்கினார்கள் பேச்சாளர்கள். இதன் விளைவாக அடுத்தடுத்தப் பேச வந்த பேச்சாளர்கள் முந்தைய பேச்சாளர்களின் ரிக்கார்டை முறியடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்கள்.

“தலைவர் இருக்கிறார், இது பின்னடைவே அல்ல, தலைவரின் தந்திரம், 4000 புலிகள் தயாராக இருக்கிறார்கள், முன்னிலும் வேகமாகத் தாக்குதல் தொடுப்பார்கள்.. ” என்று பலவிதமாகப் பேசி, பார்வையாளர்களின்

நரம்புகளை முறுக்கேற்றி, இதற்கு மேல் முறுக்கினால் அறுந்துவிடும் என்ற நிலையில் கடைசி பேச்சாளராக வழக்கம்போல வைகோ இறக்கப்பட்டார். வைகோவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பல்சார் பைக்கைப் போல ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியருக்குப் போய்விடுகிறார். அப்புறம் அவ்ளோதான்.

வைகோ பேச்சைக் கேட்கும்போது தஞ்சை ரெட்டிப் பாளையம் தப்பாட்டக்குழுதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் குழுவிரின் முறுக்கேறிய அடியும் ஆட்டமும், தூங்குகிறவனைக் கூட கிளப்பி முறுக்கேற்றி விண்ணென்று நிறுத்திவிடும். அந்தத் தாளம் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. வைகோ வின் பேச்சைப் போலவே அதுவும் வெறும் ஓசைதான். என்றாலும் இன்னதென்று தெரியாத ஒரு முறுக்கேறிய நிலையை மட்டும் அந்தத் தாளமும் ஆட்டமும் கேட்பவர்களின் உடலில் உருவாக்கிவிடும். ஆட்டம் முடிந்த பின் ஆடியவர்கள் மட்டுமல்ல, கேட்டவர்களும் அறுந்து போன ஸ்பிரிங் கம்பியைப் போல துவண்டு விடுவார்கள்.

வைகோவின் பேச்சும் அப்படித்தான். அவரை எப்போதுமே கடைசிப் பேச்சாளராகப் போடுவதன் நோக்கம், பார்வையாளர்களின் முறுக்கை மேலும் ஏற்றுவதா, அல்லது ஏறிய முறுக்கை இறக்குவதா என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கடைசியாக வைகோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தந்திருக்கும் வேலைத்திட்டம் இதுதான். இறுதிப்போர் துயரத்தின் புகைப்படங்களை வீடுவீடாகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வாக்கு கேட்கவேண்டும். இதே காரியத்தைத்தான் மே மாதம் செய்து, முடிவும் தெரிந்து விட்டது. மக்கள் கிடக்கட்டும், போட்டோக்களை போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று காட்டி அம்மாவைப் பேசச்சொல்வாரா வைகோ? அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார்? அதற்கும் பதில் இல்லை. கூடியிருந்த கூட்டத்திடம் இப்படிப்பட்ட கேள்விகளும் இல்லை.

மாநாட்டில் இன்னொரு விசயம் பளிச்சென்று தெரிந்தது. “எல்லாப்பயலும் திருடனுங்க. ஐயா நெடுமாறன்தான் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’’ என்று பலர் பேசினார்கள். எளிமையானவர், நேர்மையானவர் என்று ஹமாம் சோப்பு விளம்பரம் போல நெடுமாறன் உயர்த்தப் பட்டார். வீரம், தியாகம் என்பனவற்றை முன்னிறுத்தி புலிகளை உயர்த்திப் பிடித்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எளிமையான, நேர்மையான தலைவரான நெடுமாறனின் கொள்கை முடிவுகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியவுடனே ஈழ ஆதரவு அவதாரம் எடுத்தவர் சசிகலாவின் கணவர் நடராசன். இந்த அரசியல் தரகனை தமிழ்நாட்டு சுப்பிரமணியசாமி என்றும் கூறலாம். ஜெயலலிதாவால் தூர நிறுத்தப்பட்டாலும், அம்மாவின் வெற்றிக்காக அயராது உழைத்து அதன் மூலம் அதிகாரத் தாழ்வாரங்களில் தனது செல்வாக்கைப் பேணிக்கொள்ளும் இந்த நபரை ஒரு பெருநோயாளியைப் போல அரசியல் உலகமே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இப்படிப்பட்ட ஒரு நபரால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.

இத்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதில் பார்ப்பனக் கும்பலைக் காட்டிலும் தீவிரமான சூத்திர ஆழ்வார் நான்தான் என்று நிரூபிப்பதற்காகவே கட்சி தொடங்கியிருப்பவர் அர்ஜுன் சம்பத். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினையே அல்ல, இந்துப் பிரச்சினை என்று பேசிவரும் இப்பேர்ப்பட்ட ஒரு நபரை அழைத்து வந்து மேடையேற்றுகிறார் நெடுமாறன் என்றால் அது அறியாமை அல்ல. இத்தகைய நபரை மேடையேற்றுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் வெறுப்பு கொள்வார்கள் என்பதும் நெடுமாறன் அறியாதது அல்ல. நெடுமாறனின் தமிழ்ப் போர்வை போர்த்திய ஆர்.எஸ்.எஸ் கொள்கை அப்பட்டமாக அரங்கேறுவதைத்தான் இது காட்டியது.

யோசித்துப் பாருங்கள்! ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் புலிகளை விமரிசிக்கிறோம் என்று கூறும் யாராவது இந்த மேடையில் ஏறியிருக்க முடியுமா? ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும்! இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி? ஐயா பாரதிய ஜனதா, ஜெயலலிதாவுடனான இரண்டாவது அணியின் தூணாக நின்று கொண்டிருப்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை போலும்!

இறுதியாக, இம்மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

30 ஆண்டு காலப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய பின்னடைவு, கொடூரமானதொரு இனப்படுகொலையை நடத்தி முடித்து விட்டு குற்றவாளிகள் கடுகளவும் அச்சமின்றி நடமாடும் சூழல், தமிழக மக்கள் மத்தியில் வடிந்து விட்ட ஈழப்பிரச்சினை குறித்த அக்கறை, இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள், கடந்த தேர்தலுக்கு முன் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த தமிழகத்துக் கட்சிகள் இப்போது சாதித்து வரும் மர்மமான மவுனம்… என பேசுவதற்கும் பரிசீலிப்பதற்கும் பல விடயங்கள் உள்ளன. இவையெதுவும் இந்த மாநாட்டில் பேசப்படவே இல்லை என்பதைக் கவனித்தீர்களா?

இது தோல்வியே அல்ல என்று பேசுகிறார்கள் சிலர், தோல்விதான் என்று அரைமனதுடன் ஒப்புக் கொள்கிறார்கள் சிலர். இது குறித்த மாநாட்டின் முடிவு என்ன? ஐரோப்பா முழுவதும் நாள் கணக்கில் தெருவில் நின்று கதறியபோதும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்த முடியவில்லையே, இலங்கையின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே, அவலமான இந்த உண்மை நிலையைக் கூட அங்கீகரிக்காமல் சவடால் அடிப்பவர்களை ஈழ மக்களின் நண்பர்கள் என்றா கருதுகிறீர்கள்?

பிரபாகரன் இருக்கிறார் என்று உறுதிபடப் பிரகடனம் செய்கிறார்கள் பலர். இதே தஞ்சையில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்க்கண்டவாறு பேசினார் நெடுமாறன். “பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறீர்களே, என்ன ஆதாரம் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என் ஆழ்மனது சொல்கிறது. அவர் இருக்கிறார். இதுதான் என்னுடைய பதில்’’ என்றார் நெடுமாறன். “ஐயா சொல்வதால் நானும் நம்புகிறேன்’’ என்கிறார் காசி ஆனந்தன்.

பிரபாகரன் இருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கட்டும். இந்த உண்மையை மட்டுமே திரும்பத் திரும்ப அடித்துப் பேசி, அதற்குக் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொள்வதன் பொருள் என்ன? அதன் மூலம் சம்மந்தப் பட்டவர்கள் பெறுகின்ற நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களுடைய செயலுக்கு வழிகாட்டப் போகிறது?

தந்தையை இழந்து நிர்க்கதியாய் விடப்பட்ட குடும்பத்தில், அதுவரை உலகம் அறியாத பெண்ணாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனைவியோ அல்லது பருவம் வராத சிறுவனோ கூட, எதார்த்தத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு, குடும்ப பாரத்தைச் சுமப்பதையும் கரைசேர்ப்பதையும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தான் செய்கிறோம். இருக்கிறார், வருவார் என்பதை மட்டுமே நற்செய்திகளாக வழங்கியிருக்கிறது இந்த மாநாடு. இதனை ஜெபக்கூட்டம் என்று அழைப்பதா அல்லது மாநாடு என்று அழைப்பதா?

புலிகள் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் சரியானவர்களாகவே இருக்கட்டும், இன்று புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் யார், இன்றைய சூழலில் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் வருகின்றனவே, இதற்கு எப்படித் தீர்வு காண்பது? எது சரியான தீர்வு என்பதை எப்படிக் கண்டடைவது?

இந்த மாநாட்டு மேடையில் இந்தியாதான் குற்றவாளி என்கிறார்கள் பலர்; இந்திய அரசுக்குப்புரியவைத்து வென்றெடுக்க வேண்டும் என்று சிலர். தனித்தமிழ்நாடுதான் தீர்வு என்கிறார்கள் சிலர்; காங்கிரசையும் திமுகவையும் முறியடிப்பதுதான் தீர்வு என்று சிலர். பின்னடைவுதான் என்று சிலர், பின்னடைவு என்று சொல்வதே குற்றம் என்று சிலர். பிரபாகரன் இருக்கிறார் என்று பலர், இல்லை என்று சிலர். இது இந்து பவுத்த பிரச்சினை என்று சிலர், ஆரியர் தமிழர் பிரச்சினை என்று சிலர். எல்லாம் முடிந்தபின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அமல் படுத்துவோம் என்பது மாநாடு போட்ட தீர்மானம். ஐயா சொல்படி நடப்போம் என்பது மாநாடு போடாத தீர்மானம்.

எதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு?

சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுடையதுதான் என்பதில் ஐயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று இவர்கள் தஞ்சையிலிருந்து பிரகடனம் செய்கிறார்கள். ஐரோப்பாவெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார் என்கிறார் வைகோ. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கத் தேவையில்லையா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா? அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா? புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது. தஞ்சை மாநாட்டில் கூடியிருந்தோரிடம் அத்தகைய நம்பிக்கையைக் காணமுடியவில்லை. மாறாக தம் நம்பிக்கையை மறு உறுதி செய்து கொள்வதற்காகவும், தலையெடுக்கும் சந்தேகங்களைத் தம் சொந்த மனதில் ஆழப்புதைத்து மூடுவதற்காகவும், ஒத்த உணர்வுள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட சந்திப்பாகவே இது இருந்தது. தோற்றத்தில் வீரம் காட்டினாலும், இது பரிதாபத்துக்குரிய ஒரு அவலம்.

உளனோ அன்றி இலனோ என்று தனது ஐயத்தைப் பாடலில் பதிவு செய்ய மாணிக்க வாசகருக்கு இருந்த தைரியம் கூட அங்கே யாருக்கும் இல்லை. “ஐயர் சொல்வதனால் கடவுள் இருக்கிறார்’’ என்று நம்பி வளர்ந்த சமூகம், “”ஐயா சொல்வதனால் பிரபாகரன் இருக்கிறார்’’ என்று நம்புகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு இது ஒரு பேரவலம்தான்.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் தீவிர பக்தனும் கூட தனது அடுத்த வேளைச் சோற்றுக்கு கடவுள் வழி சொல்வார் என்று காத்திருப்பதில்லை. தன் சொந்த முயற்சியையும் உழைப்பையுமே அவன் நம்புகிறான். இறை நம்பிக்கையை இழந்து விடவில்லையென்றாலும், தன் சொந்தத் தவறுகளைப் பரிசீலிக்கவும் செய்கிறான். அதன் ஊடாக, தன் சொந்த எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறான். பின்னொரு நாளில், அவன் இறை நம்பிக்கையைத் துறந்து விட்டான் என்ற உண்மையை நாம் அவனுக்கு நினைவூட்ட வேண்டியதாகி விடுகிறது. “அப்படியா, மறந்து விட்டேன்’’ என்பது அவனது பதிலாக இருக்கிறது.

நாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.

thanks:vinavu

பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!

ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில் நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய விசயங்கள் மலையளவு இருக்கும் போது தொடர்ந்து பிரச்சினைகளையும், தகராறுகளையும் அலசி ஆய்வதிலிருந்து என்று விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் ஊர் உலகமென்றால் பிரச்சினைகளும் இருக்கும்தானே?

ஈரோடு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியிருக்கிறது.

பதிவர் சந்திப்பிற்கு பதிவர் சுமஜ்லா சென்று வந்ததோடு “பர்தாவோடு சென்றேன், பர்தாவோடு இருந்தேன்” என்று யாரையோ திருப்திப்படுத்தவோ, முன்னெச்சரிக்கைக்காகவோ, ஜாக்ரதையாக எழுதி பதிந்து கொண்டார். இதன் பின்னணி என்ன? ஒரு பெண் அதுவும் இசுலாமியப் பெண் பதிவு எழுதுவது பெரிய விசயம். அதையும் அவர் வீட்டு ஆண்கள் அனுமதிப்பது பெரிய சுதந்திரம்.( இன்னும் இதுபோன்ற என்னவெல்லாம் சுதந்திரங்கள் இருக்கிறதோ?) இதில் சுமஜ்லா தமிழில் வேறு என்ன செய்திகளை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.

ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?

இதைப் புரிந்து கொள்ளாத ஒரு அனாமதேயம் பின்னூட்டத்திலோ வேறு எதிலோ இதை பகடி செய்து ” நான் பேண்டு போட்டு பேண்டோடு அமர்ந்தேன், நான் சேலை கட்டி சேலையோடு அமர்ந்தேன்” என்று எழுதப்போக, அக்மார்க் இசுலாமிய பெண்ணான சுமஜ்லா அதை ஓரம்தள்ளாமல் பிரஸ்டீஜ் பிரச்சினையாக பாவித்துக்கொண்டு பர்தாவின் மகத்துவம் பற்றி ஒரு தனி பதிவு போட்டார். ஆரம்பித்தது பிரச்சினை.

அதிலும் “நற்குடி” பெண்களென்றால் பர்தா இல்லாமல் வாழமாட்டார்கள் என்ற ரேஞ்சில் தனது அடிமைத்தனத்தை சிலாகித்திருந்தார். இப்பத்தான் பதிவுலகம் வந்திருக்கும் அந்த பேதைப்பெண்ணுக்கு உலகம், அடிமைப்பெண்கள், சுதந்திரப் பெண்கள், மத பிற்போக்குத்தனங்கள் எல்லாம் புரிவதற்கு பதிவுலகமென்ன முற்போக்கு சிங்கமாகவா உள்ளது? மொக்கைகள், சினிமாக்கள் என்று காலம்தள்ளும் பதிவுலகை விண்டு பார்த்தால் சாதியும், மதமும், ஆணாதிக்கமும்தானே கோலேச்சுகிறது?

அந்த்தபடிக்கு சுமஜ்லாவும் திருந்த வாய்ப்பில்லாதது நம் சூழலோடு இணைந்தது. இதனால் அந்தப் பெண்பதிவர் எதுவும் தெரியாத அப்பாவி என்று பரிதாபப்படவில்லை. பர்தா என்ற அடிமை சமாச்சாரத்தை அப்படி உருகி உருகி அவர் எழுதியிருந்ததைப் பார்த்தால் அது நிச்சயம் அல்லாவுக்கே பொறுக்காது. உலகம் எங்கேயே போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் அந்த பர்தாவைத் தொங்கிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வன்புணர்ச்சிக்கு அலையும் ஒரு கொடூரனிடமிருந்து ஜீன்ஸ், சல்வார் போட்ட பெண்களாவது கொஞ்சம் கை, காலை ஆட்டி சண்டையாவது போட முடியும், சுதந்திரமாக ஓட முடியும். பர்தா அணிந்த பெண்கள்? மூலையில் தேமே என்று அழவேண்டியதுதான். இதனால் மிருகங்கள் ஒன்றும் பரிதாபப் படபோவதில்லை.

உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி.

அடுத்து பர்தா என்னவோ இசுலாமியருக்கு மட்டும் சொந்தமென்று சிலர் நினைக்கிறார்கள். வட இந்தியாவின் பல இந்து சாதிகளில் பர்தா என்பது இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். பொதுவில் பெண்களை அடிமைகளாக பார்க்கும் எல்லா மதங்களும் ( கிறித்தவத்தில் கன்யாஸ்தீரியின் அங்கி கூட ஒரு பர்தாதான்.) இப்படித்தான் சட்ட திட்டங்களை வைத்திருக்கின்றன.

பர்தாவின் அநீதியை ஒருவர் எதிர்க்க வேண்டுமென்றால் அவர் எல்லா மதங்களையும் அதில் உறைந்திருக்கும் ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பவராக இருக்கவேண்டும். சுமஜ்லா பர்தாவைப்பற்றி பதிவு எழுதியதும், கலகலப்ரியா எனும் இந்து பெண்பதிவருக்கு ஆத்திரம் வான்தட்ட அவர் ஒரு கவிதையை தாளித்தார். இவர் ரௌத்திரம் பழகும் பாரதியின் பயங்கர விசிறியாம். இவருக்கு எழுந்த கோபம் பெண்ணுரிமையின் பாற்பட்டதல்ல. பர்தா போட்ட பெண்களெல்லாம் நல்லவர்கள் மற்றவர்களெல்லாம் கெட்டவர்களா என்ற அணி அதாவது இந்து அணியிலிருந்து வரும் கோபமே அடிப்படை.

இவ்வளவிற்கும் இவர் பர்தாவை எதிர்க்கவில்லையாம். அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றுவது சரியாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தவர்களை நொட்டம் சொல்வது சரியல்ல என்பதே பிரியாவின் வாதம். பிரியாவின் இரசிகர் கூட்டம் இந்த கவிதைக்காக பின்னூட்டத்தில் ஒரு பெரும் ஆவேசக் கூச்சலையே எழுப்பிச் சென்றிருக்கிறது. சாராமாகச் சொன்னால் நாகரீகமான வார்த்தைகளில் துடித்துக்கொண்டிருக்கும் இந்துத்வ மனமே இதன் இயக்கம். இதற்கு நம்ம ”ஞானப்பழம்” உண்மைத்தமிழன் கூட விலக்கல்ல. அப்பப்பா மொக்கைகளுக்குள் மறைந்து நிற்கும் பதிவுலகம் மதம் எனும் வாதத்தில் எப்படி சிக்குண்டிருக்கிறது என்பதறிய அந்த பின்னூட்டங்களை வாசிக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரும் எமது இந்துமதத்தை இழிக்கிறாயா என்ற ஆவேசத்தில் பதிவர் சுமஜ்லாவை கிழிக்கிறார்கள், மைனஸ் ஒட்டு போட்டு ரசிக்கிறார்கள். மாற்றுமுகாம் பதிவுகளுக்கு கள்ள ஒட்டு போட்டு கைதட்டுகிறார்கள். ஒரு புறம் பதிவுலகம் மத மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டது என்று பல்லவி பாடிக் கொண்டே மறு புறம் இசுலாமிய வெறுப்பை நாசுக்காகவும் பகிரங்கமாகவும் கொட்டுகிறார்கள். கவிதையும்(?) பதிவுமாக எழுதி தள்ளுகிறார்கள். இவர்கள் எவருக்குமே பெண்ணை மதங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அநீதி குறித்து கிஞ்சித்தும் கவலை கிடையாது. அது இருந்தால் இந்து மதம் பெண்ணை வதைத்திருக்கும், வதைத்துவரும் கொடூரங்கள் குற்ற உணர்வை கொள்ள வைத்திருக்கும். இந்த விசயங்களை அந்தப் பதிவர்களின் பின்னூட்டங்களில் தனியாக நின்று வாதிட்ட சுகுணா திவாகரின் பின்னூட்டத்தை பலரும் சீண்டவில்லை என்பது மட்டுமல்லாமல் அநாமதேயங்களாகவும் வந்து கிண்டலடித்தார்கள்.

“மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் இப்படித்தான், யாரும் மாற்ற முடியாது” என்று இசுலாமியர்களை இழிக்கும் இந்த சிகாமணிகள் மாறாத இந்து மதத்தை மாற்ற என்ன கிழித்தார்கள்? பிறந்ததிலிருந்து தகப்பன், கணவன், பிள்ளை என மாறி மாறி எல்லா ஆண்களுக்குக்கும் கட்டுப்பட்டவள் பெண் என்பதே மனு வகுத்து இன்றுவரை அமுலிலிருக்கும் நடைமுறை. பெண்கள் வேலைக்கு சென்றாலும் இந்த முறை மாறிவிடவில்லை. இன்றும் மற்ற மதங்களை விட விதவை திருமணம் என்பது இந்து மதத்தில் மிகுந்த இழிவாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள விதவைப் பெண்கள் இன்னமும் ஒரு கல்யாணம் காச்சிக்கும இன்றும் செல்ல முடியாது. இதைப்பற்றியெல்லாம் ஏன் ப்ரியாவுக்கு சீற்றம் வரவில்லை?

வட இந்தியாவில் இன்று வரை சீரோடு நடந்து வரும் குழந்தை திருமணங்களினால் பெண்தானே பாதிக்கப்படுகிறாள்? கயர்லாஞ்சியில் உழைத்து முன்னேறி வாழ விரும்பிய பூட்மாங்கே குடும்பத்தை ஆதிக்க சாதி ஆண்கள் கற்பழித்து வாய்க்காலில் வீசினார்களே இதுவெல்லாம் கலகலப்பரியாவுக்கு ரௌத்திரத்தை எழுப்பாதா? நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட பார்ப்பனப் பெண்கள் விதவையானால் அவளது முடியை ஒண்ணொண்ணாக பிடுங்கி மொட்டையடித்த நாடும் இதுதானே? இந்தக் கதையெல்லாம் தனக்கு தெரிந்த நல்ல பார்ப்பனர்களை வைத்து ஜெயேந்திரப் பார்ப்பனர்களை மறைக்கும் பழமைபேசி பஞ்சாங்கங்களுக்கு தெரியுமா?

பெண்ணின் இயல்பான மாதவிடயாக் காலத்தை வைத்தே எத்தனை சட்ட திட்டங்கள்? அவள் பூ சூடக்கூடாது, கோவிலுக்கு போகக்கூடாது, விசேசங்களுக்கு செல்ல கூடாது, வீட்டில் ஒரு மூலையில் மூன்று நாட்களும் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றெல்லாம் கிரிமினல் சட்டம் வகுத்தவர்களைப்பற்றி கோபம் வராதா?

அவ்வவளவு ஏன், தற்போது ஐயப்ப சீசன். என்னவெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள், சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று ஒரு விதியை இன்னும் அமல்படுத்தி வருகிறார்களே இதுவெல்லாம் ‘நற்குடி’ பதிவர்களுக்கு கோபத்தை கொண்டுவரும் தகுதி படைத்தது இல்லையா?

சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப்பாகட்டும், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளாராகட்டும் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். இந்த மாதிரி கேவலம் உலகில் வேறு எங்கவாது உண்டா? கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம் என்றொரு அறிவியல் விளக்கத்தையும் தெளிக்கிறார்கள்.

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல? இதைப்பற்றியெல்லாம் ரௌத்திரதாசர்களுக்கு ரௌத்திரம் வராதா?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பாப்பானின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பாப்பான் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறான். இதைக்கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்த கபோதிகள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்யவேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு அறிவியல் விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் ஆர்.வியின் ஞானகுரு டோண்டு ஐய்யங்காரிடம் கேட்டால் பதில் பெறலாம். ஹை லெவல் இன்புளுயன்ஸ் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்டலாம், மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்கும் கேவலமான காட்டுமிராண்டிகளின் நாடுதான் இந்தியா. இந்த காட்டுமிராண்டிகளின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பர்தா விவகாரத்தில் மதப்பற்றோடு குமுறி எழுகிறார்கள்.

சபரிமலையின் இந்த அயோக்கியத்தனத்தை மென்மையான வரிகளில் சந்தனமுல்லை தன் பதிவொன்றில் கேட்டிருந்தார். உடனே ஆம்பளை சாமிகள் அவருக்கு எச்சரிக்கை இடும் விதத்தில் பின்னூட்டமிடுகிறார்கள். அதில் ஒரு கபோதி சபரிமலை ஆண்டவன் சக்தி உள்ளவன், அவனிடம் விளையாட வேண்டாம், கண்ணைப் பிடுங்கி விடுவான் என்று பச்சையாக மிரட்டியிருக்கிறார். இதுதான் பதிவுலகின் இந்துத்வ இலட்சணம்.

சந்தனமுல்லையின் நியாயத்துக்கு குரல் கொடுக்காத கோழைகள்தான் இப்போது சுமஜ்லாவின் பர்தா பற்றுக்காக பொங்கி எழுகிறார்கள்.

சினிமா, மொக்கை, அரட்டை, அக்கப்போர், தொடர்பதிவு, வடிவேலு ஸ்லாங், மீதபர்ஸ்டு, முதுகு சொறிதல் என்று பிழைப்பை நடத்தும் பதிவுலகின் ஆன்மாவைக் கீறிப்பார்த்தால் அங்கே சாதியும், மதமும்தான் கோலேச்சும். வினவின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இதை உணராதவர்களுக்கு ‘நற்குடி’ பிரச்சினை தெளிவாய் விளக்கியிருக்கும். இதை முட்டி, மோதி, தட்டி, கொட்டி மாற்ற வேண்டுமானால் வினவும் ஏனைய முற்போக்கு பதிவர்களும் இன்னும் எத்தனை மாமாங்கள் பாடுபடவேண்டுமோ தெரியவில்லை?

thanks:vinavu

Tuesday, December 29, 2009

“இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!

vote-012“இனியொரு” தளத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த தோழர் சபா.நாவலன் ஈழத்தை சேர்ந்தவர், தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். ஜூலை, 2009 சமயத்தில் சென்னை வந்திருந்த போது அவரிடம் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது. வினவிற்காக இந்த நேர்காணலை எடுத்தவர் தோழர் இராவணன். தனது சென்னைப் பயணத்தின் நினைவுகளினூடாக தனது நேர்காணலைத் துவங்கினார் தோழர் சபா. நாவலன்.

”நான் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறேன். எண்பதுகளில் அரசியல் காரணங்களுக்காக எல்லா விடுதலை இயக்கங்களும் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்திய காலத்தில் டெலோவில் இயங்கிய நானும் அரசியல் நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு வந்திருக்கிறேன். நான் எண்பதுகளில் பார்த்த சென்னைக்கும் இன்றைக்கு பார்க்கும் சென்னைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியாவின் நிலபுரபுத்துவ தன்மைகள் குறைந்து மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிக்கப்பட்டதன் அடையாளமாக சென்னை உருமாறியிருக்கிறது. சென்னையில் இன்றைய உருமாற்றத்தை வளர்ச்சியாக காண முடியுமா? என்று தெரியவில்லை. ஏனென்றால் ஐய்ரோப்பாவின் மூலதனக் குவியலும் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடும் இதை ஒப்பிட முடியாது. உலகமயமாக்கலின் ஒரு விளைவை இங்கு காண முடிகிறது. மேல் மத்திய தரவர்க்கம் செல்வாக்குச் செலுத்தும் சென்னையில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சென்னையில் அழகிற்காக இங்கிருக்கும் பூர்வகுடி உழைக்கும் மக்களை அன்றாடம் அள்ளி எடுத்து வெளியில் வீசிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இந்த முரண்களூடாக இடது சாரிகள் தேசிய மூலதனத்தைப் அன்னிய மூலதனத்திற்கு எதிராக நிறுத்தும் செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

வினவுநாவலன் என்பதன் அடையாளம் என்ன?

நாவலன்: 7 ஆம் வகுப்புவரை நான் மலையகத்தில் படித்துக்கொண்டிருந்தேன், ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியராக இருந்தவர் திரு.பி.ஏ.காதர் அவர்கள். அவர் சண்முகதாசனின் மாவோயிசக் கட்சியின் ஆதரவு உறுப்பினராக இருந்தார். அவர்தான் எங்களுக்கு மார்க்சியம் சொல்லித்தந்தார். ஏழாவது வகுப்பின் இறுதியில் எங்கள் வகுப்பில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அப்போது காதரின் வழிநடத்தலில் “நாளை நமதே” என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடாத்தினோம். இப்போது காதரும் பிரித்தானியாவில் தான் வாழ்கிறார். 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் பரிசை வாங்குவதற்காக அப்பா 10 ரூபா பணம் கொடுத்தார். அதை வைத்து நான் மாவோவின் படத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் என்னை மலையகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றிவிட்டார்கள். அப்போது எனது உறவினர்கள் வீட்டிலும், கல்லூரி விடுதியிலும் தங்கிக் கல்வி கற்றேன்.

யாழ்பாணத்தில் 8 வது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது விடுதலை இயக்கங்களின் தலை மறைவுச் செயற்பாடுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பின்னாளில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து கொலைசெய்யப்பட்ட அற்புதராசா (ரமேஷ்) என்னுடைய பள்ளி நண்பன். அவருடைய பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள். இவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் நான் காதரிடம் கற்ற சோசலிசம் குறித்துப் பேச அவர்கள் தமிழீழம் குறித்துப் பேசுவார்கள்.

இவர்களூடாக மேலும் என்னைப் போல சில சிறுவர்களதும் உயர்தர வகுப்பு இளைஞர்களதும் தொடர்பு கிடைக்கவே நாங்கள் பள்ளிக்கூட மதிலேறிக் குதித்து கூட்டம் நடத்துவோம், விவாதிப்போம். சில நாட்களில் எனது சோசலிசமும் அவர்களது தமிழீழமும் இணைந்து சோசலிசத் தமிழீழம் என்ற முடிபில் இனிமேல் போராடுவதாகத் தீர்மானித்தோம்.

இதை நானும் இன்னும் சிலரும் சேர்ந்து போய் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியரிடம் தெரிவித்தோம்.அப்போது ஈழ நாடு பேப்பரின் சோசலிசத் தமிழீழத்திற்காக சிறுவர்கள் கூட்டம் போட்டுள்ளனர். என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியாகியிருந்தது.

அது எங்கள் பள்ளியில் பிரச்சனையாகி எங்கள் பிரின்சிபால் என்னை ரத்தம் வருகிறபடி அடித்து விட்டார். எண்பதுகளில் போலீஸ், இராணுவ அடக்குமுறைகளை மீறி விடுதலை இயக்கங்களில் இணைவதென்பது ஒரு சமூக அங்கீகாராமாக இருந்தது.

ஈழப் போராட்டத்தைத் பாய்ச்சல் நிலையான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது இந்திய உளவு நிறுவனமான “ரா”. திட்டமிட்டுப் போராட்டத்தை அழிப்பதற்கான அத்திவாரததை இந்திய அரசுதான் மேற்கொண்டது.

இந்தியாவிடம் பயிர்ச்சிக்குச் செல்வது பற்றிய ஒரு விதமான மயக்கமான எண்ணங்கள் எல்லா இளைஞர்களுக்குமே இருந்தது.

அந்த வேளையில் மனோ மாஸ்டர் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு பிரபாகரனும் இன்னும் சிலரும் குட்டிமணி மற்றும் தங்கத்துரை தலைமையிலான குழுவில் இணைந்து கொண்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் மனோமாஸ்டர். தமிழ் புதிய புலிகள் என்று இருந்த பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றியவரும் இவர்தான். மார்க்சிய சிந்தனைகளில் தேடல் ஆர்வம் கொண்ட மனோ மாஸ்டர், பின்னதாக கம்யூனிச இயக்கத்தின் தலைமையிலேயே தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, வேறு சிலரோடும் சேர்ந்து தத்துவார்த்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மக்களோடு மக்களாகக் கிராமங்களில் வாழ்ந்தார். 1983 வரை இவ்வாறான சிந்தனையைக் கொண்டிருந்த மனோமாஸ்டரை 83 ஜூலைக் கலவரங்களின் பின்னர் நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த வேளையில் அவர் ரெலோ இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இணைந்திருந்தார்.இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சிகாக ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் திரட்ட்ப் பட்டுக்கொண்டிருந்தனர்.

எனது மார்க்சிய ஈடுபாடு குறித்து அறிந்துகொண்ட மனோ மாஸ்டர், புதிய கருத்து ஒன்றை என்னிடம் சொன்னார். இந்தியா பயிற்சிவழங்கும் இளைஞர்கள் இலங்கைக்கு வந்து தமக்குள் மோதிக்கொள்ளப் போகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராகச் செயற்படப்போகிறார்கள். இந்தியா தமிழீழத்தை எந்தக் காரணம் கொண்டும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இறுதியில் போராட்டமும் பெரும் தொகைப் போராளிகளும் மக்களும் அழிவதிலேயே இந்த புதிய நகர்வுகள் முடிவடையப் போகின்றன என்றார். இந்த நிலையில் நாம் இவ்வியக்கங்களைச் சுற்றி பலமான மக்கள் திரளமைப்புக்களை கட்டியமைப்பதன் ஊடாக அழிவுகளை மட்டுப்ப்படுத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தார். இவ்வாறான ஒரு கருத்தியல் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும் என்றும், இந்த வகையில் ரெலோ இயக்கத்தின் பலவீனமான தலைமையின் கவனத்திற்கு உட்படாமல் அவ்வியக்கத்தின் பலத்துடனேயே மக்கள் வேலைகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார்.

84 ஆரம்பத்தில் மனோமாஸ்டரின் அடுத்த கட்ட வேலைத்திட்டமாக ரெலோ இயக்கத்தின் மத்திய குழுவை முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை திரட்ட அமைப்பதாகத் திட்டமிட்டார். அதற்கான உட்கட்சிப் போராட்டம் இந்தியாவில் ஆரம்பித்திருந்தது. இதனை ஆரம்பத்திலிருந்தே ரேலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மறுத்திருந்தார். மத்திய குழு அமைத்து ரெலோ இயக்கத்தை ஜனநாயக மயப்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதே அவர் முன்வைத்த காரணமாகும். 84 இல் ரெலோ இயக்கத்தை கருணாநிதி ஊடாகவும் புலிகளை எம்.ஜீ.ஆர் ஊடாகவும் இந்திய உளவுப்படை கையாண்டது. மத்திய குழு அமைப்பதை கருணாநிதியும் நிராகரித்து விட்டதாக சிறீ சபாரத்தினம் கூறியிருந்தார். ஆனால் உட்கட்சிப் போராட்டம் தொடர்ந்தது. அவ்வேளையில் சுதன், ரமேஷ் என்ற இரு முக்கிய தலைவர்கள் சிறீ சபாரத்தினத்தால் கைது செய்யப்பட்டு சிறைவக்கப்பட, மனோமாஸ்டர் இந்தியாவிற்க்ச் செல்ல அவரைத் தொடர்ந்து நானும் இன்னும் 8 முக்கிய தள உறுப்பினர்களும் இந்தியா சென்றோம். அப்போது எனக்கு 19 வயது கூட நிரம்பவில்லை.

84 இல் கைது செய்யப்பட்ட சுதன் ரமேசை விடுதலை செய்யக் கோரி மரீனா பீச்சில் காந்தி சிலைக்குக் கீழ் காலவரையறையின்றி உண்ணாவிரத்மிருந்தோம்.

இதே வேளை நாமெல்லாம் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை சென்ற வேளை மனோமாஸ்டரைப் புலிகள் இயக்கம் சுட்டுக் கொலைசெய்துவிட்டது. ஆளுமை மிக்க தலைவராகவும் சமூக உணர்வுள்ள புரட்சிக்காரனாகவும், பிரபாகரன் நன்கு அறிந்த அவர் நண்பனாககவும் இருந்ததால் இக்கொலை நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்தில் மார்க்சிய சிந்தனைகளைப் பிரயோகித்த மிகச்சிலருள் ஒருவரான மனோமாஸ்டரின் இழப்பு மிகப் பெரிய பின்னடைவு.

வினவுஇடது சாரி அமைப்புகளின் தலைமை பின்பற்றும் மத்தியக் குழு மாதிரியான அமைப்புக்கு இந்தியா ஏன் சம்மதிக்கவில்லை?

நாவலன் – ஒரு தேசீய இனவிடுதலை இயக்கத்தில் பல் வேறு சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு வர்க்கத்தட்டும் அவரவர் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தலைப்படும். இந்தியாவுக்கோ தங்களின் சொல்படிக் கேட்டு நடக்கும் அடியாட் படைகளே ஈழத்தில் போராளிகளாக தோற்றம் பெற வேண்டும்.மற்றபடி அடிமட்டத்திலிருந்து அமைப்புக் கட்டி இடதுசாரி அமைப்புகளுக்கே உள்ள தத்துவார்த்தத் தளத்தில் எந்த அமைப்பும் உருவாகி விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது. இலங்கையில் பின்காலனியப் பகுதியின் நடைபெற்ற பல போராட்டங்கள் தீர்க்கமான சோசலிசப் புரட்சியை நோக்கிய வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிக்கான அமைப்புமுறைகளையும் வேலைத் திட்டங்களையும் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்தன.

வினவுஎல்லா போராளி அமைப்புகளுமே இப்படித்தான் இந்தியாவை நம்பி இருந்ததா? ஈழ விடுதலை என்னும் அரசியல் கேரிக்கையில் எந்த போராளிக் குழுக்களுக்குமே புரிதல் இல்லையா? அப்புறம் சீறி சபாரத்தினம் அவருடைய கொள்கை என்ன? அவர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார்?

நாவலன் - அவருக்கு அரசியல் ரீதியாகவோ கோட்பாட்டு ரீதியாகவோ எதுவிதமான அறிவோ படிப்பினைகளோ இல்லாமல் இருந்தது. இந்தியா எல்லாமே இந்தியா இந்தியா எங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக் கொடுக்கும் என்னும் எண்ணத்துடனேதான் அவர் இருந்தார். மற்றபடி ஆயுதப் போராட்டத்தின் துவக்கத்திற்கு வல்வெட்டித்துறை ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வல்வெட்டித் துறைக்கும் ஒரு “தொப்புள்கொடி” உறவு இருந்தது. கூட்டணியின் பிரதான பண வழங்கல் வல்வெட்டித் துறையின் கடத்தல் தொழிலூடாகவே திரட்டப்பட்டது. இது தான் பிரபாகரனின் சொந்த இடமும் கூட.

இவர்களுக்கு இந்தியாவின் தென் பகுதி கடலோர நகரங்களோடு பெரும் கடத்தல் வணிகத் தொடர்பு இருந்தது. அந்தவகையில் பண மூலதனம் வட பகுதியில் முதன் முதலாக உருவான இடமும் வல்வெட்டித்துறைதான். ஒரு கட்டத்தில் சிங்களக் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் தமிழ் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்கும் நிதி ஆதாரமாக இருந்ததும் இந்தக் கடத்தல் காரர்கள்தான். வரலாற்று ரீதியாக இந்தக் கடத்தல்காரர்கள் போராளி இயக்கங்கள் மீது செலுத்திய செல்வாக்கும் எமது போராட்டம் சீரழிய ஒரு காரணமாக அமைந்தது.

எழுபதுகளில் ஜெகன், குட்டிமணி, தங்கதுறை போன்றவர்கள் கடத்தல் தொழிலில் செல்வாக்குச் செலுத்தியவர்கள். கடத்தல் தொழில் வரும் பெருமளவான நிதியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நிதியாக இவர்கள் வழங்கி வந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியோ இதற்குப் பதிலாக சட்டரீதியான பாதுகாப்பையும் அதிகார பீடங்களோடு தங்களுக்கு இருந்த உறவைப் பயன்படுத்தியும் இவர்களுக்கு உதவி வந்தார்கள். இது ஒரு பரஸ்பர பரிவர்த்தனை மாதிரி அந்தக் காலத்தில் நடந்து வந்தது.

அப்படி குட்டிமணி, தங்கதுறை குழுவின் கள்ளக் கடத்தலில் இணைந்த 16 வயது சிறுவன்தான் பிரபாகரன். சிங்களர்களுக்கு எதிரான பிரபாகரனின் எதிர்ப்பரசியலின் துவக்கம் என்பது இதுதான். அவர் குறி பார்த்துச் சுடுவதில் திறமை பெற்றவர்.தமிழரசுக் கட்சி தங்களின் அரசியல் எதிரிகளைக் கொல்வதற்கும் இவர்க்ளை பயன்படுத்திக் கொண்டார்கள். யாழ்பாண மேயர் துரையப்பா கொல்லப்பட்டது கூட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் படுகொலைதான்.

அப்போது எழுபதுகளில் சிறிமாவோ பண்டாரநாயகே பதவிக்கு வந்த போது அந்நிய உற்பத்திகள் தடை செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் என். எம்.பெரேரா.

அதே சமையம் யாழ்பாண உள்ளூர் உற்பத்தி அளவு அதிகரிக்கவும் செய்கிறது. அரிசி உற்பத்தில் யாழ்பாணம் பெரும் பாய்ச்சலைச் சந்தித்த காலமாகவும் அது இருந்தது. பல யாழ்பாண விவசாயிகளே வட பகுதிகளாக முத்தையன் கட்டு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயத் தொழில் செய்த காலங்கள் கூட உண்டு. ஒரு பக்கம் உள்நாட்டு உறபத்தியின் அதிகரிப்பு, இன்னொரு பக்கம் கடத்தல் காரர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை. அதே காலக் கட்டத்தில்தான் இலங்கை அரசு தரப்படுத்தல் என்னும் சட்டத்தையும் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது இன ரீதியான படு பிற்போக்கு அம்சங்களோடு அறிமுகமானாலும் பிற்பாடு அது பிரதேசவாரியான தரப்படுத்தலாக மாற்றப்பட்ட போது அதில் முற்போக்குக் கூறுகள் இருந்தது. அதாவது பின் தங்கிய பகுதி மாணவர்கள் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருந்தது. இங்கே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? அது மாதிரி ஒரு முற்போக்கு ஏற்பாடு. ஆனால் இந்த பிரதேசவாரியான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்பாண வெள்ளாளர்கள்தான். அவர்கள் கூட வெவ்வேறு பெயர்களின் முகவரிகளில் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிக்கும் வந்து தேர்வு எழுதி விட்டுச் செல்லும் சூழல் கூட இருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க மனோபாவத்தைக் கொண்ட யாழ்பாணத்தவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதும் அவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக தமீழக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழீழ கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. தமிழீழக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது அதை தடித்தனமாக ஒடுக்கிய போலீஸ் ஒரு பக்கம் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரண்ட கடத்தல்காரர்கள் ஒரு பக்கம் என மாணவர்கள், கடத்தல்காரர்கள் என இரு சக்திகளும் இணைகிறார்கள். ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, உமா மகேஸ்வரன், குட்டி மணி, தங்கதுறை, பிரபாகரன் எல்லோரும் இணைந்தே ஈழப் போராட்டத்தை துவக்குகிறார்கள். இந்த இணைதலின் வரலாற்றுப் பின்னணி என்பது இதுதான்.

வினவுகடத்தல்காரர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி, இன்னொரு பக்கம் இலங்கை அரசாங்கம் என இவர்களுக்கிடையிலான முரண்பாடே தமீழீழப் போராட்டத்தின் துவக்கமாக இருந்தது என்கிறீர்கள்? அப்படி என்றால் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான இன முரண் இல்லை என்கிறீர்களா?

நாவலன் – அப்படிச் சொல்லவில்லை. சிங்கள் பௌத்த மேலாதிக்கவாதம் என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும் சிங்கள இனவாதம் இலங்கையில் இருந்தது, இன்றும் இருக்கிறது.

ஆக தமிழ்ப் பேசும் மக்களிற்கு எதிரான சோவனிச வடிவிலான பெருந்தேசிய அடக்குமுறை என்பதே இனப்பிரச்சனையின் ஊற்றுக்கண். பண்டாரநாயகா காலத்தில் 58 வது ஆண்டில் இருந்தே அது வெளிப்படையான கலவரங்களாக உருவாகி விட்டது. இலங்கையில் இருந்து பிரித்தானியா வெளியேறிய போது இலங்கைத் தீவினுள் இன முரண்பாட்டை உருவாக்கி விட்டுத்தான் வெளியேறியது. அனகாரிக தர்மபால என்கிற சிங்கள பெருந்தேசியவாதி இப்போதும் சிங்களர்களின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்படுகிறார். ” தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளி கொல்ல வேண்டும் ” என்று சொன்னவர் தர்மபால.இலங்கைப் பாடப்புத்தகங்களில் தேசத்தின் கதாநாயகனாகவும், இலங்கை தேச நிர்மாணத்தின் சிற்பியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

மகாவம்சம் என்னும் சிங்களர்களின் புனித நூல் பாலி மொழியில் மட்டுமே இருந்தது சிங்களத்தில் இல்லை. பிரித்தானிய கவர்னருடைய நிதி உதவியிலும் அவர்களில் திட்டத்திலும்தான் மகாவம்சம் சிங்கள மொழிக்கு மாற்றப்படுகிறது. பாலி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சத்தை மூன்று லட்சம் பிரதிகளாக எடுத்து கிராமங்கள் வரை பரவியிருந்த எல்லா விகாரைகளுக்கும் கொடுத்தார்கள். மகாவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்குமான போர் என்பதை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான போர் என்று பொயான புனைவுகளை ஏற்படுத்தினார்கள். இனவாதத்தை தத்துவார்த்தத் தளத்தில் நிறுவனமயப்படுத்தியவர்தான் தர்ம்பாலா. பின்னர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான முதல் தாக்குதல் இன முரணைத் தூண்டும் விஷயத்தை முன் வைக்கிறார் அவரது சகோதரர் 1915 ல் முதல் சிறுபான்மையினருக்கு (தமிழ் முஸ்லீம்களுக்கு) எதிரான தாக்குதல் டி.எஸ். சேனநாயகா காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது சிறுபான்மை வணிகர்களுக்கு எதிரானத் தாக்குதல்.

பிரித்தானிய ஆதிக்கத்திற்கு முன்னைய காலத்திலேயே தேரவாத தமிழ் நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகத் தேரவாத பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற செயற்பாட்டுத் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துவிட்டது. இதைத்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹொப்ஸ்பவும் போன்ற ஆய்வாளர்கள் தேரவாத பௌத்தம் இயல்பிலேயே தேசியவாதக் கூறுகளைக் கொண்டுள்ளதாக இலங்கையை உதாரணம் காட்டுகிறார்கள். இதை தேசிய வாதம் குறித்த மார்க்சிய தியரிக்கு எதிராகக் கூட அவர்கள் பிரயோகித்து விவாதிக்கிறார்கள். இது அடிப்படையில் தவறான கருத்து என்றாலும், இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான ஒருங்கமைப்பு ஒன்று காணப்பட்டதை பலரும் குறித்துக் காட்டுகிறார்கள். இது ஒரு தேசிய இணைவையும் கொண்டிருந்தது. ஆக, இந்திய மன்னர்களுக்கு எதிரான பௌத்தர்களின் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களாகக் புனையப்படது. இதனையே சோவனிச இனவாதத்தை விதைப்பதற்கான மகாவம்ச ஆதாரங்களாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

வினவுஅப்ப்போது ஒன்று பட்ட இந்தியா என்பதே இல்லையே…. சிறு சிறு நிலப் பகுதிகளை ஆண்ட குறு நில மன்னவர்கள் அவர்களை கட்டுப்படுத்திய பெரு நில மன்னர்கள் என்ற ஆட்சிமுறைதான் இங்கே இருந்தது.

நாவலன் – ஆமாம் இலங்கைக்கு வெளியே இருந்த சமாஸ்தானங்கள். அல்லது சேர, சோழ, பாண்டிய, பராக்கிரமாபாகு போன்ற இன்றைய தென்னிந்தியாவின் அன்றைய சமஸ்தானங்களின் செல்வாக்கு இலங்கையின் மீது அதிகமாக படிந்திருந்தது. இவர்கள் படையெடுத்துப் போய் வெற்றி கொண்ட வரலாறுகளும் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் வெற்றி கொண்ட இடங்களில் இவர்கள் இருந்து ஆட்சி செய்ததில்லை அங்கே தனக்கான பினாமி ஒருவரை நியமித்து வருகிறார்கள். இத்தகைய போக்குகள் தென்னிந்திய மன்னர்களுக்கு எதிராக மனோபாவத்தை சிங்களர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் உருவாக்கியது. தென்னிந்திய மன்னர்கள் மீதான அச்சம் இலங்கையில் அல்லது சிங்கள ஆட்சி பீடத்தில் வித்தியாசமான சமூக அமைப்பை உருவாக்கியது. சிங்கள மன்னனான துட்டகைமுனுவுக்கு எல்லாளன் மீதிருந்த கோபம் கூட தென்னக மன்னர்களுக்கு எதிரான கோபம்தான். துட்டகைமுனு, எல்லாளன் யுத்தம் கூட தமிழர் சிங்களர் போராக உணரப்பட்டதும் இதனால்தான். இலங்கையில் பௌத்தத்தின் துவக்கம் கூட இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகளில் இருந்து உருவானதுதான். அந்த அடிப்படையில்தான் பௌத்த எதிர்ப்புணர்வும் முக்கோண சமூக அமைப்பாக உருவாக்கியது. முக்கோணம் என்றால் மூன்று மூலைகள்…. ஒரு மூலையில் மன்னர்கள், இன்னொரு மூலையில் பௌத்த பிக்குகள், இன்னொரு மூலையில் மக்கள். மன்னனுக்கு படைகள் தேவைப்பட்டால் பௌத்த பிக்குகளிடம் கேட்பார்கள் பிக்குகள் மக்களிடம் கேட்பார்கள்.மக்கள் மன்னனுக்கு சேவை செய்வார்கள். 16 அம் நூற்றாண்டில் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி இலங்கைக்குச் செல்கிறார். அப்படிச் செல்லும் போது கண்டிய தமிழ் மன்னன் ராஜசிங்கன் என்பவனால் அவர் சிறைப்படுத்தப்பட்டார்., அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கும் போது சிங்களம் படிக்கிறார்.பின்னர் அவர் வெளியில் வந்து பயணம் செய்யும் போது மீண்டும் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அங்கே எவருக்கும் சிங்களம் தெரியாது. எல்லோரும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். அவரை விகாரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் பொலநருவ செல்கிறார். ஆக தமிழர் சிங்கள முரண் என்பது அப்போது மக்களிடம் இல்லை.

தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். அனுராதபுரம் இப்போது தூய சிங்களப் பகுதி. இங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றமடைந்திருக்கிறார்கள். ஆக, மொழி என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.

அதி அதிகார பீடங்களிடம் இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீதான இன முரண் என்பது தென்னிந்திய தமிழ் மன்னர்களுக்கு எதிரான முரணாகத்தான் துவக்கத்தில் இருந்திருக்கிறது. அது தமிழ் மக்களுக்கு எதிரான் இன முரணாக பின் காலனீயச் சூழலில் தான் உருமாற்றம் அடைகிறது. இன்னொரு பக்கத்தில் பார்த்தால் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்துதான் பௌத்தம் இலங்கைக்குச் சென்றது. தமிழ் நாட்டில் பௌத்தம் கோலோச்சிய காலத்தில் இலங்கையில் இரண்டு விகாரைகள் இருந்தது. ஒரு விகாரையில் தமிழில் பௌத்த வழிபாடும் இன்னொரு விகாரையில் பாலி மொழியிலும் நடக்கிறது. எங்குமே சிங்கள மொழி இல்லை. இங்கே பௌத்தத்தை புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாக வைணவம் கட்டமைத்த அதே நேரம் இந்திய எதிர்ப்புணர்வு அங்கே எழுகிறது. அந்த விகாரைகள் கிராமங்கள் முழுக்க பிரித் நூல் ஓதுவதாக இருந்தால் பாலி மொழியில் ஓதுவார்கள். சைவ மதத்தின் கூறுகள் பௌத்தத்திலும் இருந்தது. ஆனால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் தேரவாத பௌத்த மரபு உருவாகிறது.

வினவுஇன்றும் கூட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவுடன் தங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களை தங்களை இந்தியாவோடு இணைத்துப் பார்க்கிறார்களா? அதாவது இந்திய அபிமானம் என்பது இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கிறதா?

நாவலன் – யாழ்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை எப்படி இழிவான பார்வையோடு பார்த்தார்கள் என்பது தெரியும்தானே? இந்தியாவில் உள்ள தமிழகத் தமிழர்களைக் கூட அவர்கள் வடக்கத்தியான் என்றுதான் அழைப்பார்கள். உண்மையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவோடு தங்களை அபிமானாபடுத்திப் பார்த்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் இந்தியா குறித்த கற்பனை தமிழ் தேசிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்தியத் தொடர்புகளும் , வல்வெட்டித்துறை ஊடான தொடர்பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய முற்போக்குப் போராட்ட இயக்கங்களுடனோ போராட்ட இயக்கங்களுடனோ தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவைக் கோபப்படுத்தக் கூடாது என்பதில் புலிகள் உட்பட்ட போராளிக் குழுக்கள் அவதானமாக இருந்தார்கள்.

வினவுவிடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது?

நாவலன் - தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வியடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நடத்த வேண்டிய போராட்டத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய போராட்டத்தை இந்தியா எப்போது தீர்மானிக்கத் துவங்கியதோ எங்கள் குழுக்களுக்கு எப்போது இந்தியா ஆயுதம் கொடுக்கத் துவங்கியதோ அப்போதே நாங்கள் தோற்றுப் போனோம். விடுதலைப்புலிகள் எதிர்ப்பியக்கம் என்பது மாறி அரசாங்கத்தின். பிராந்திய அதிகார வர்க்கங்களின் கையாட்களாகவும் அடியாட்களாகவும் மாறிப் போகும் சூழல் உருவானது. இத்தகைய போக்குகளினூடேதான் முப்பதாண்டுகாலம் நீண்டு சென்றிருக்கிறது எமது ஆயுத போராட்ட வரலாறு. இப்போது வன்னிப் போரின் முடிவை தமிழ் மக்களின் அல்லது எதிர்ப்பியங்களின் தோல்வியாக நான் பார்க்கவில்லை. ஒடுக்கப்படும் ஆசிய மக்களின் தோல்வியாக நான் பார்க்கிறேன். உலக மயமாக்கத்தில் மூலமாக எழும் ஆதிக்கத்தை நிலை நிறுத்துக் கொள்வதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக இலங்கையை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் என் கருத்து, இந்த எகாதிபத்தியங்களின் விளையாட்டில் பங்கெடுத்தும் இழுபட்டும் கடந்து வந்த முப்பதாண்டுகால வரலாறுதான் புலிகள் கதை.

வினவுஉலக முதலாளித்துவத்திற்கு உதவக் கூடிய மூலதனங்கள் எதுவும் இலங்கையில் இல்லையே? மத்திய கிழக்கிலோ ஆப்ரிக்கா, செர்பியா, போஸ்னியா போன்ற நாடுகளில் இருக்கும் வளங்கள் போன்று இலங்கையில் இல்லாத போது. உலக முதலாளியம் ஏன் இலங்கையை சூறையாட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நாவலன் – கிரீஸ்சில் ஒரு இனப்படுகொலை நடந்தது. இதே மாதிரியாக மக்களையும் போராளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து உணவைத் தடுத்து கூட்டாக படுகொலை செய்தார்கள்.இந்தோனேஷியாவில் நடந்ததை விட கொடூரமான இனப்படுகொலை அப்போது யுத்தப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளை மட்டும் விடச் சொல்லி கேட்டார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வெளியில் வந்தார்கள். அப்படி வந்தக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுத்தார்கள். அப்படி தத்தெடுத்த எலனி என்றொரு சிறுமி வளர்ந்த பிறகு நூல் ஒன்றை எழுதினார். அது பின்னர் சினிமாவாகக் கூட வந்தது . கிரீஸ்சில் பெட்ரோல் கிடையாது. ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக எந்த நலனும் அங்கு இல்லை. ஆனால் இன ரீதியாகவோ, வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ ஒடுக்கப்படுகிற மக்கள் எதிர்ப்பியங்களை நடத்தும் போது முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்பதுதான் க்ரீஸ் படுகொலைகள் நமக்கு சொல்லும் செய்தி.

அது போன்ற முயற்ச்சிதான் வன்னியில் நடந்தது. வன்னிக் கொலைகள் அதற்கு மேற்குலகின் மௌனமான சம்மதங்கள் என இந்தியாவின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது வன்னிப் போரின் உத்தியைத்தான் இந்தியா லால்கரில் தொடங்கி அதை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவு படுத்துகிறது. அங்கே மட்டும் பெட்ரோல் இருக்கிறதா? என்ன? ஒரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களுடன் வடகிழக்கு தொடர்பாக இந்தியா செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இன்னொரு பக்கம் உலக முதலாளிகளுக்கிடையில் இருக்கும் உள் முரண்பாடுகள் இருக்கின்றன. உலக முதலாளிகளின் ஆதிக்கம் இருந்தாலும் கூட உள் முரண்பாடுகள் என்பதை தேசீய முதலாளியமாக கொள்ள முடியாது என்றாலும் கூட அந்த உள் முரண்பாட்டிற்கு பிராந்திய தன்மை இருக்கிறது . அதை இலங்கைப் போரில் காண முடிகிறது. இலங்கை தீவிரமாக மேற்குலகிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறது. ஐநாவை துச்சமென மதிக்கிறது இலங்கை. ஐநாவின் சட்ட வல்லுநர் ஒருவரிடம் சமீபத்தில் பேசிய போது அவர் சொன்னார். இன்றைக்கு இருக்கிற உலக பொருளாதார சூழலில் இந்தியாவையும், சீனாவையும் எதிர்த்து மேற்குலகம் இலங்கையில் எதையுமே செய்ய முடியாது என்றார். முரண் இந்தியாவுக்கும் சீனாவுக்கிமிடையிலானதாக இருந்தால் மேற்குலகம் ஒரு நிலை எடுத்திருக்கும். இங்கே இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் சார்ந்திருத்தல் என்பது சுயாதீனமானது. பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருக்கும். ரஷ்யா ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அந்த சார்பு நிலையில் சுயாதீனம் இருக்கிறது.சுயநலம் சார்ந்த இந்த சுயாதீனம் இப்போது சீனா சார்ந்தும் அமெரிக்கா சார்ந்தும் இந்தியா இருக்கிறது. ஆசியப் பொருளாதாரம் என்பது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதற்கு அப்பால் ஆசியாவின் பொருளாதார உருவாக்கத்தின் பரிசோதனைக் கூடம்தான் இலங்கை. இந்த பிராந்திய பொருளாதார உருவாக்கத்திற்கு இலங்கையில் பலியானவ்ர்கள்தான் வன்னி மக்களும் புலிகளும். இத்தகைய இனப்படுகொலை இன்னொரு பத்தாண்டுகளுக்கு ஆசியாவில் தொடர வாய்ப்புண்டு.

வினவுநீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களை ஆசியப் பொருளாதாரத்தின் சூழ் நிலைக் கைதிகள் என்கிறீர்கள். இது சிங்கள இனவாதத்தையும் அவர்கள் நடத்திய இனப்படுகொலையின் கோரத்தையும் திசை திருப்புவதாக அமைந்து விடாதா?

நாவலன்: நான் சிங்கள அரசு பயங்கரவாதிகளின் இனகொலைகளையோ, அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் கொன்றொழித்ததையும் இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக சரத்பொன்சேகா என்றாலும் ராஜபட்சே சகோதரர்கள் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஆசியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார உருவாக்கமும் ஏகாதிபத்தியங்களின் பயங்கவராத கதையாடலையும் சிங்கள பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இலங்கையைப் பொறுத்த வரை இனவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இலங்கையின் சிங்கள பௌத்த மேன்மையை கட்டி வைத்திருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை என்னும் போலித் தேசீயவாதம் கட்டமைக்கப்படுகிறதோ அது போலதான் இதுவும். இதை எல்லாம் விட சிங்கள இனவாதத்திற்கு எதிராக சாத்வீக போராட்டங்கள் சாத்தியப்படாது. இனவாதத்திலிருந்து சிறுபான்மை மக்களின் விடுதலை என்பது வன்முறை போரட்டமாகவே இருக்க முடியும். ஆனால் அதிகார பீடங்களோடு இணைந்து செய்ல்படும் புலிகள் மாதிரியான வலதுசாரிக் குழுக்களால் முன்னெடுக்கப்படும் தேசியவாதப் போராட்டங்களால் இனவாதத்தை எப்போதுமே வெற்றிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனவாதம் வெற்றி கொள்ளப்பட்டால் மட்டுமே சிங்கள பௌத்த இனத்திற்குள் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை உணரும் சூழல் உருவாகும்.

வினவுஇப்போது சிங்கள உழைக்கும் மக்களுக்கும் சிங்கள முதலாளிகளுக்குமிடையிலான முரண்பாடு இப்போது இல்லை என்று சொல்கிறீர்களா? அல்லது பலவீனமாக இருக்கிறது என்கிறீர்களா? அல்லது இவர்கள் இரண்டு பேரையுமே சிங்கள இனவாதம் இணைகிறது என்று சொல்கிறீர்களா?

நாவலன் – முப்பதுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியை உலகம் கிரேட் டிப்பிரஷன் என்று பதிவு செய்கிறது. அந்த கிரேட் டிப்பிரஷனின் பாதிப்பு இலங்கையில் தேயிலைத் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. சிங்களத் தொழிலாளிகள் வேலை இழக்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசீயக் கட்சி இந்த வேலை இழப்பிற்கு காரணமாக அப்போது சுட்டிக் காட்டியது மலையாளிகளை கிட்டத்தட்ட முப்பதாயிரம் மலையாளிகளை இலங்கையை விட்டுத் துரத்தினார்கள். இலங்கையில் தொழிற்சங்கம் கட்டும் முயற்ச்சி துவங்கியதும் அந்தக் காலக்கட்டத்தில்தான் அன்றைக்கு ஏகாதிபத்தியங்களின் நலனை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக கட்டமைத்தார்கள். ஆக, சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் வர்க்க முரணைத் தணிக்கும் கருவியாகவே சோவனிசம் பயன்படுகிறது. ஆனால் இன்று உலக முதலாளித்துவம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க நலன் சார்ந்தது மட்டுமல்ல. ஜி 20 மாநாட்டில் ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை சொல்லி நிற்கிறது.மக்களின் இடப்பெயர்வு பிற்போக்கான ஒன்றாக நடக்கிறது. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடு என்பது ரஷ்ய, சீனா நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு எதிரானதாகவும் இருக்கிறது. உருவாகிவரும் இந்த புதிய பொருளாதார கட்டமைப்பு எங்கே தங்களின் சுரண்டல் நலனை பாதித்து விடுமோ என்று அமெரிக்காவும் இந்த நாடுகளை கையாளத் துவங்குகிறது. அதனால்தான் புவி வெப்பமடைதல் தொடர்பாக அமெரிக்கா எழுப்பும் கேள்விகள் நெருக்கடிகள் எல்லாமே இந்த நாடுகளின் வளர்ச்சியைக் குறைவைத்துதான் செய்யப்படுகிறது.

வினவுதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டங்கள், தியாகங்களுக்கு உணர்வு பூர்வமான ஆதரவு இருக்கு. முப்பதாண்டுகாலமாக தனி ஈழக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள் என்கிற அளவில் தனிப்பெரும் அமைப்பாக அவர்கள் இங்கே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். கடைசியாக நடந்த தீக்குளிப்புகள் கூட உதாசீனம் செய்ய முடியாத ஆதரவு நிலையில் வெளிப்படுதான். முத்துக்குமாரின் மரண சாசனம் முற்போக்குக் கூறுகளைக் கொண்டது. இந்த ஆதரவை அவர்கள் எப்படி பயப்படுத்திக் கொண்டார்கள்?

நாவலன் – இதில் இரண்டு விதமான பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதிகாரவர்க்கங்கங்களோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் நெடுமாறன். வைகோ போன்றவர்களிடம் நெருங்கினார்கள். இன்னொரு பக்கம் சரவ்தேச அதிகார வர்க்கங்களின் வலைப்பின்னலை தங்களின் ஆயுத பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் போர் நிறுத்தம் கோரி உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் போராடிய தமிழக மக்களின் உணர்வு என்பது இங்குள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுக்கு எதிராக இருந்தது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் இது வெளிப்பட்டது. அது போல வழக்கறிஞர்கள், மாணவர் போராட்டங்களிலும் இது வெளிப்பட்டது. ஆனால் புலிகள் இந்த மக்கள் எந்த சந்தர்ப்பவாத தலைமைகளிடம் அதிருப்தியுற்றிருந்தார்களோ அவர்களுடனே தொடர்பு வைத்திருந்தார்கள். இந்தியாவிடம் கடைசி வரை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் எழுச்சியை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதிகார வர்க்கங்களை நம்பினார்களே தவிற தமிழக மக்களின் எழுச்சியை நம்பவில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் புலிகளின் அதிகாரவார்க்கத்துடனான சமரசம் அவர்களை அழித்துக்கொள்வதிலேயே முடிந்திருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நான் சொல்ல முடியும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசிய போது ஐந்து நாட்கள் இரண்டு லட்சம் மக்கள் பிரித்தானிய மக்கள் தெருவுக்கு வந்து பாலஸ்தீனியர்களுக்காக போராடினார்கள். ஆனால் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக எந்தப் போராட்டங்களிலும் பிரித்தானியா மக்களோ ஏனைய மக்கள் விடுதலை ஆதரவுக் குழுக்களோ துளி அளவு கூட கலந்து கொள்ள வில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர்கள் அதிகாரவர்க்கமும் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுமே அவர்களோடுதான் இவர்கள் நெருக்கம் பேணினார்களே தவிற அங்குள்ள முற்போக்கு சக்திகளையும் ஏனைய எதிர்ப்பியங்கங்களையும் புலிகள் கண்டு கொள்ளவில்லை. இவர்களோடு நட்பாக இருந்த மேற்குலக நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் கட்சி நலன்களுக்காக, தங்களின் அரசு நலனுக்காக, தங்களின் தேச நலனுக்காகத்தான் இப் போராட்டங்களுக்கு வந்து போஸ் கொடுத்தார்களே தவிற அவர்களுக்கு மக்கள் நலன்களோ, மனிதாபிமான நலன்களோ கூட அவர்களுக்கு இல்லை. இதுவரை ஈழப் போருக்கு எதிராக உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் தமிழக மக்களே. ஆனால் அம்மக்களின் எதிர்ப்புணர்வை புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

வினவுஇனப்படுகொலையே ஈழத்தில் நடக்கவில்லை என்று ஜெர்மன் சுசீந்திரன் புதுவிசை இதழில் சொல்லியிருக்கிறார். இன்னொரு சாரார் இனப்படுகொலை பற்றி பேசாமல் புலிகள் செய்த தவறுகளைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார்களே?

நாவலன் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல்வேறு சக்திகள் இருக்கிறார்கள். போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது பட்ஜெட்டில் மூன்று லட்சம் டாலர்களை புலிகளுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடுகிறது. ராஜதந்திரம் என்பது புலிகளுக்கு நிலவும் ஆதரவைக் குலைப்பதும் அவர்களின் சர்வதேச வலையமைப்பைச் சிதைப்பதும்தான் இலங்கை அரசின் நோக்கம். இன்று இலங்கை அரசின் பண உதவி கிடைக்கிறது. மற்றபடி சுசீந்திரன் ஒரு தன்னார்வக் குழு நிதி உதவிகளைப் பெறும் போது சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் அந்தக் கட்டுப்பாடு என்பது இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதாகக் கூட இருக்கலாம். இன்னுமொரு பகுதியினர் புலிகள் மீதான விமர்சங்களை மட்டுமே முன் வைப்பதன் மூலமும் எதிர்ப்பியங்களின் நோக்கங்களை சிதைப்பதன் மூலமும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் சூழல் வெளிப்படையாகவே தெரிகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு 83 &ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிராக நெடுங்குருதி என்றொரு நிகழ்வை பிரான்சில் நடத்தினார்கள்.

இலங்கை அரசு விழாவாகவே அது நடந்தது. மேற்கில் உள்ள தலித் அமைப்புகளும் கூட இப்போது இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகின்றது. அவர்கள் இப்போது இலங்கை அரசிற்கு எதிராக பேசுவதில்லை. போர் முடிந்ததும் இவர்கள் இலங்கையில் கட்சியாகப் பதிவு செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு மக்களிடம் எவ்விதமான மதிப்பும் கிடையாது. இவர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இலங்கை அரசோடு இணைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் முதலாவது எதிரி யார்? இரண்டாவது எதிரி யார்? என்பதை எல்லாம் நிராகரிக்கிறேன். காரணம் இது ஒரு தத்துவார்த்த பிரச்சனை அல்லாமலும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு காரணம் புலிகள் அல்ல. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கமே இந்த இனவாதத்தின் காரணகர்த்தாக்க்கள். 1958 ஆம் ஆண்டுகளில் தொடங்கி காலம் தோறும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. புலிகளின் ஆயுதப் போராட்டம் சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் ஐம்பதாம் ஆண்டு இருந்த தேவையை விட, எழுபதுகளில், எண்பதுகளில், தொண்ணூறுகளில் இருந்த தேவையை விட இன்று மிக அதிகமான அரசியல் தேவைகள் தமிழ் மக்களுக்கு இப்போது உருவாகியிருக்கிறது. இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு மிகத் தீவீரமான போராட்டத்திற்கான தேவை ஒன்று உருவாகியிருக்கிறது. மனிதர்கள் கொசுக்களைப் போல கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகமே வேடிக்கை பார்க்க மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைகளின் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல அவர்களை பாதுகாக்க எத்தனிக்கிற எவருமே போர்க்குற்றவாளிகள்தான்.

வினவு – 2004 – ஆம் ஆண்டு தென்கிழக்கு கடலோரங்களைத் தாக்கி மாபெரும் மக்கள் பேரழிவையும் இயர்க்கை அனர்த்தனத்தையும் தோற்று வித்த சுனாமிக்குப் பின் புற்றீசல் போல தன்னார்வக்குழுக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்தார்கள். இப்போது துயரமான முறையில் வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னால் தன்னார்வக்குழுக்களுக்கு இது பெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது? இல்லையா? ஒவ்வொரு பேரழிவுமே தன்னார்வக்குழுக்களுக்கு கொண்டாட்டம்தான் இல்லையா?

நாவலன்- தன்னார்வ நிறுவனங்கள் என்பதன் பிரதான நோக்கமே, அவர்களது வார்த்தைகளில் சொல்வதானால் ” சமூகக் கோபத்தைத் “ தணிப்பது என்பதே. இதற்காகக் குடிமைச் சமூகங்கம், அடையாள அரசியல் போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். மனித உரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தலித்தியம் போன்ற சுலோகங்களில் வர்க்க அரசியலை நீக்கிவிட்டு வெறும் சமூகப் பிரச்சனையாக முன்வைக்கின்றனர். இவற்றை நோக்கி ஒருபுறத்தில் அடிமட்ட மக்களையும் இன்னொரு புறத்தில் சமூக உணர்வுள்ள படித்த மத்தியதர வர்க்கத்தையும் இதன் பணியாளர்களாக உள்வாங்கிக் கொள்கின்றனர். இலங்கையில் 80 களில் இறுதியில் மனித உரிமை குறித்துப் பேச பல தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்தன. இருப்பினும் ஜே.வீ.பி போராட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் தெருத் தெருவாகக் கொலைசெய்யப்பட்ட போது யாரும் அங்கில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு கொலையைக் கூட பதிவுசெய்யவில்லை. ஜே.வி.பி இடது சாரிக் கோசங்களுடன் நடத்திய போராட்டம் தெற்காசியாவில் புரட்சியாக மாறக்கூடும் என்ற தன்னார்வ நிறுவனங்களை இயக்கும் வல்லரசு நாடுகளதும் அவற்றின் துணை அமைப்புக்களதும் பயவுணர்வுக்குக் காரணம்.

புலிகளின் பிற்பகுதி தன்னார்வ நிறுவனங்களின் பொற்காலம். அவர்கள் அரசியல் பேசுகிறார்கள். மனித உரிமை பேசுகிறார்கள். கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் ஒழுங்கமைக்கிறார்கள். மனித் உரிமை மீறல் என்று கூக்குரல் போடுகின்ற எதாவது ஒரு தன்னார்வ நிறுவனம் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என அங்கீகரிக்கிறதா? மார்கா என்ற கொழும்பு தன்னார்வ ஆய்வு நிறுவனம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சேரன், ஜெயதேவெ உயாங்கொட, குமாரி ஜெயவர்தன, நுஹ்மான் போன்றோரின் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தேசிய இனப்பிரச்சனை குறித்த நூல்களும் வெளிவந்தன. ஆனால் இனப்படுகொலை நிகழும் போது இவர்கள் மூச்சுக்கூட விடவில்லை. இது மட்டுமல இலங்கை தன்னார்வ நிறுவனங்களின் மைக்ரோ எக்கானமி புரெஜக்டுகளின் பிரதான மையங்களில் ஒன்று. மக்களை இவர்களின் பிச்சைக்காரர்களாக மாற்றுவதே இவர்களின் பணி. பிலிப்பைன்ன்ஸ் போராட்டமே இவர்கள் சீரழிக்கப்பட்டது. பங்களாதேஷ் இன்று இவர்களாலேயே பிரஞ்சைஸ்ட் நாடு என அழிக்கப்படுகிறது. பங்களாதேஷில் உற்பத்தி அழிக்கப்பட்டு, பல்தேசியக் கம்பனிகள் தேசத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டன.

வினவு – ”ஈழம் செத்து விட்டதுஎன்கிறார் இந்து ராம். ”ஈழம் சாத்தியமில்லைஎன்கிறார் ஷோபா சக்தி. பேராசிரியர் .மார்க்ஸ் போன்றவர்கள் எதிர்ப்பியங்களோ மக்கள் இயக்கங்களோ சாத்தியமில்லை என்பதை ஈழம் காட்டுகிறது என்கிறார். உங்கள் கருத்து என்ன?

நாவலன்- கோரிக்கைகள் தொடர்பாக பார்த்தால். அக்கோரிக்கைகள் ஐம்பதாம் ஆண்டு தொடங்கி வைக்கப்படுகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம் என்பதே தமிழ் மக்களுக்கான சம உரிமை கோரும் ஒப்பந்தம்தான் எழுதப்பட்ட நாளிலேயே அது கிழித்தெறியப்பட்டது. ஓரளவுக்கு ஜனநாயகத்தைப் பேணிய அரசாங்கங்கள் இருந்த காலத்திலேயே தமிழர்களுக்கு இதுதான் நடந்தது. ஆனால் இன்று இருப்பவர்களோ இனப்படுகொலை செய்த மோசமான போர்க் குற்றவாளிகள். கிரிமினல்கள், இந்த கிரிமினல்களுக்கு எதிராக அன்றைக்கு போராட்டங்களுக்கு ஆதரவளித்த கோரிக்கைகளை முன்வைத்துப் சமாதான வழியில் ஆயுதப் போராட்டம் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். சிங்களர்களின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழ மக்களுக்கு எதிரான இனவாதம். என்கிற அளவில் இனவாதத்தை வீழ்த்த ஆயுதப் போராட்டமே தீர்வு. ஆனால் இது சரியான திசைகளின் முன்னெடுக்கப்பட்டாக வேண்டும். இன முரண் கூர்மையடைந்து ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்தில் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு இருந்தது. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், விகாரைகளில் பௌத்த அப்பாவிகளைக் கொன்று குவித்தமைதான் தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்ற எண்ணம் தோன்ற காரண்மாகிவிட்டது. சரியான திசை வழிகளின் எமது ஆயுத போராட்டம் பயணித்திருக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களே எங்களோடு இணைந்து போராடியிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனி ஈழம் என்கிற கோரிக்கை கூட அதனூடாக காலாவதியாகும் சூழல் ஏற்பட்டிருக்கும். இன்று இரு தரப்பிடமுமே அந்தச் சூழல் இல்லை. இன அடக்குமுறை பிரிந்து போகும் சுய நிர்ண போராட்டம் எனபது அவசியமானது. ஆனால் தந்திராபாய ரீதியில் தனி ஈழப் போராட்டம் வெற்றியளிகுமா? என்று தெரியவில்லை. எப்போது இலங்கை மக்கள் ஏகாதிபத்தியங்களிடம் இருந்தும் பிராந்திய விஸ்த்ரிப்பு நோக்கங்கள் கொண்ட அரசுகளிடம் இருந்தும் விடுதலை பெறுகிறார்களோ அதுவே உண்மையான விடுதலையின் பாதையாக அமையும். தவிர இன்று எதிர்ப்பரசியல் சாத்தியமில்லை என்ற கருத்துக்களும், ஆயுதப் போராட்டங்கள் பலமான எதிரியின் முன்னால் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதும், மார்க்சியத்திற்கு எதிராக இன்று மேற்கு வழியாகப் பரப்பப்படும் கருத்துக்கள்.

வினவு – குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களையும் போராளிகளையும் குவித்து வைத்து சிங்களப் பேரினவாத இராணுவம் கொன்று குவித்த போது புலத்து மக்களும் தமிழக மக்களும் கூட போருக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் இந்தப் போருக்கு எதிராக ஏன் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் போராட வில்லை?

வட கிழக்கில் இயல்பாகவே உருவாகக் கூடிய எல்லா மக்கள்திரள் அமைப்புக்களும் தமிழ் தேசிய இயக்கங்களால் சிதைக்கப்பட்டிருந்தன. மக்கள் போராட்டங்களின் ஆதார சக்தியே க்கள் திரள் அமைப்புக்கள் தான். மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், கலாச்சார அமைப்புக்கள், கலை அமைப்புக்கள் என்று எல்லாமே 80 களில் ஒவ்வொரு தேசியவிடுதலை அமைப்புக்களின் வால்கள் போல மாற்றப்பட்டிருந்தன. பின்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவை உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 90 களின் பின்னர் புலிகளைச் சாரத அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. சில தந்திரோபாய நடைமுறைகளூடாக புதிய ஜனநாயக் கட்சி புத்தூர், நிச்சாமம், கன்பொல்லை, சங்கானை போன்ற இடங்களில் தமது வறிய கூலிவிவசாய அமைப்புக்களைப் பேணிவந்த சூழல் காணப்பட்டாலும், 90 களின் பின்னர் இவர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், இந்தச் சூழல் இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு மிகவும் துணைபோனது.

இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களும் கிராமங்களில் உருவாகும் சிறிய சங்கங்களைக் கூட புலிகள் என முத்திரையிட்டு அழித்தனர். கிழக்கில் பிள்ளையான் மற்றும் கருணா தலைமையிலும் வடக்கில் டக்ளஸ் குழு தலைமையிலும் தான் வெகுஜன அமைப்புக்கள் உருவாகும் சூழல் காணப்பட்டது. ஆக, வட கிழக்கு என்பது புலிகளுக்கும் அரசிற்கும் உரித்தான திறந்வெளிச் சிறைச்சாலைகளாகவே காணப்பட்டன. இரண்டிற்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடி சமூக விடயங்களைப் பற்றிப் பேசக் கூட முடியாத நிலையே காணப்பட்டது. இன்றும் சோவனிச இலங்கை அரசாங்கம் அப்படி ஒரு அடக்குமுறைக்குள் தான் மக்களை வைத்திருக்கிறது. இன்று அரசின் துணைக்குழுக்களின் அடக்குமுறை அபிவிருத்தி என்ற பெயரில் நியாயம் கற்பிக்கப்படுகிறது.

வினவு- வடக்கு கிழக்கு மக்கள் போராடாமல் போனதற்கு இராணுவக் கண்காணிப்புதான் காரணம் என்கிறீர்கள். இது போன்ற ஒரு சூழலே காஷ்மீரிலும் இருக்கிறது. வீதிக்கு வீதி இராணுவத்தைக் குவித்திருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்த எதிர்ப்புகளையும் மீறி காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். அது போல மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய இராணுவங்களுக்கு எதிராக மக்கள் அஞ்சாமல் போராடும் போது ஈழத்தில் மட்டும் அது சாத்தியமில்லாமல் போனதற்கு தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சி காரணம் என்று சொல்லலாமா?

80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ அரசியல் பயிற்சிகளை வழங்கிய போதே அனைத்து மக்கள் திரள் அமைப்புக்களும் சிதைக்ப்பட ஆரம்பித்துவிட்டன. கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி போன்றவை பெரிய அளவில் அமைப்பாக்கப் பட்ட மக்கள் திரள்களைக் கொண்ட அமைப்பாகும். 83 மூன்றாம் ஆண்டு இந்திய இராணுவப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுகொள்வதற்காக இந்திய அரசு ஈழ அமைப்புக்களின் பலத்தை நிரூபிக்குமாறு கோரியது. இதனால் ஈ.பி.ஆர்.எல் என்ற இயக்கம் மேற்குறித்த அனைத்து அமைப்புக்களையும் தனது அங்கங்களாகப் பிரகடனம் செய்து வடகிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியது. துண்டுப்பிரசுரங்களூடாகவும், வெளியீடுகளூடாகவும் பிரச்சாரம் மேற்கொண்டது. இதனால், இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இலங்கை இராணுவத்தாலும் பொலீசாராலும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். அவையெல்லாம் சட்டவிரோத அமைப்புக்களாக மாற்றமடைந்தன. இந்திய உளவு அமைப்புக்களின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாகவே இது கருதப்படுகிறது.

திடீரென சுனாமிபோல் உள்ளீடு செய்த இந்தியத் தலையீட்டிலிருந்து சுதாகரித்துக் கொள்ள நீண்ட நாட்கள் சென்றன. 85 களின் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, தேசிய மாணவர் மன்றம் போன்ற அமைப்புக்கள் வளர்ச்சிபெற்றன. 1986 இல் தேசிய மாணவர் மன்றம் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு வலையத்திற்கு எதிரான ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதே வேளை புதிய ஜனநாயகக் கட்சி வடபகுதிக் கூலிவிவசாயிகள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தது. 80 களின் இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வடக்கும் கிழக்கும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் வரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் சாரா அனைத்து அமைப்புக்களும் தடைசெய்யப்பட்டன அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது.தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை முதலில் அங்கீகரித்த அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கூட வட கிழக்கிலிருத்து அப்புறப் படுத்தப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்து, மினிபஸ் உரிமையாளர் சங்கம் ஈறாக, கிராமிய சன சமூக நிலையங்கள் வரை புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டுள் மட்டுமே இயங்கின. இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட சர்வதேசத் தன்னார்வ நிறுவனங்கள் சில புலிகளோடு இணந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இன்று தமிழ்ப் பிரதேசங்கள் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு திறந்வெளிச் சிறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. இரண்டு பகுதிகளிலுமே சாதாரண சாமானியனின் கொல்லைப்புறம் வரைக்கும் இரணுவமும் துணைக்குழுக்களும் சென்று வருகின்றன. வன்னி முகாம்கள் வெளிப்படையாக அங்க்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை. இரண்டு போர்க்குற்றவாளிகளில் ஒருவரை, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்களில் ஒருவரை தமது தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரச பாசிசம் வளர்ந்துள்ளது. வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய இலங்கையின் பகுதிகளுக்குள் தமிழ் பேசும் மக்கள் ஒருவகையான பயத்துடனேயே வாழ்கிறார்கள். ஆக, இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட சூழல்.

வினவு : புலியெதிர்ப்பு அரசியல் குறித்து?

இலங்கை அரசின் பேனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இலங்கை அரசின் இனவழிப்பிற்கு எதிராகவும் போராடுவதற்கான உரிமையைக் கோரி புலிகளுக்கு எதிராகப் போராடியவர்களும் போராடி மடிந்தவர்களும் முதலாம் வகையினர். மறுபுறத்தில் புலி எதிர்ப்பு என்பது அரச ஆதரவு என்ற நிலையை எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது வகையினர். புலிகளிற்கு எதிரான போராடும் உரிமையைக் கோரியவர்களுள் பலர் இன்றைய சூழலில் எதிர்ப்பியக்கங்களை ஆரம்ப்பிப்பதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

வினவு: புலம் பெயர்ந்து வாழும்ஈழத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? ஈழப் போராட்டத்தில் புலம் பெயர் மக்களின் நிலை என்ன?

இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் புலம்பெயர்ந்த பெரும்பாலனவர்கள் தமது மத்தியதர வர்க்க வாழ்னிலையை உறுதிப்படுத்திக்கொள்ள பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். சிலவேளைகளில் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் பெரும்பாலும் 16 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் 40 வயதிற்கு உள்ளாகவே முதுமை அடையும் பரிதாபகரமான நிலையே காணப்படுகிறது. தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்கள் இங்குள்ள கலாச்சாரத்துடன் இசைவடைய முடியாத மன அழுத்தங்களுடனேயே வாழ்கிறார்கள். இங்கும் இலங்கையின் சாதி அமைப்பு முறையை அப்படியே பேணுகின்ற ஒரு தொடர்பு நிலையே காணப்படுகிறது. தமிழ் சமூகத்தைத் தவிர ஏனைய சமூகங்களுடன் எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் சந்ததியினர் ஐரோப்பியர்களுடன் இணைந்துகொள்ள முற்படுகின்ற வேளையில் ஒருவகையான கலாச்சாரப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்கான ஆயுதமாக புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அமைகின்றன.

பெற்றோரே தமது பிள்ளைகளை புலிகளின் அமைப்புகளில் இணைந்து செயற்படுவதை ஊக்குவிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் தமிழர்களோடு இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

வன்னிப் படுகொலைகளின் போது புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுற்ற புலியெதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) என்ற புலி ஆதரவு இலைஞர் அணியின் பங்களிப்பே பிரதானமானதாக அமைந்தது. நடந்த ஊர்வலங்களில் ஐரோப்பாவில் பிறந்த இளைஞர்களே அதிக அளவில் பங்காற்றினர்.

தவிர, புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கை அரசின் இன்ப்படுகொலையிலிருந்தும் இன அடக்கு முறையில்லிருந்தும் தப்பிவந்தவர்கள். இவர்களின் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வுகளின் வடிகாலாக அமைந்தது புலிகள் மட்டுமே. இன்று புலிகளற்ற சூழலில் இவர்களின் தலைமைக்கான தேடல் புதிய சூழல். இச்சூழலை இலங்கை அரசும் இந்திய அர்சும் தமக்குச் சாதகமானதாக மாற்ற முற்படுகின்றன என்பது அபாயகரமானது. புலம் பெயர் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் அதிகாரவர்க்கம் சார்பானதாகவே அமைந்துள்ளன. சில சிறிய குழுக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் என்று போராட்டங்களை நடத்துகின்ற போதும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் அற்ற நிலையிலேயே புலிசார் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் புலிகளின் அமைப்புக்களூடாக நம்பியிருந்த எல்லா அதிகார வர்க்கம் சார்ந்த அமைப்புக்களாலும் கைவிடப்பட்டதை அவர்கள் உணரும் இன்றைய சூழலைப் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் பயம்படுத்திக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

thanks:vinavu

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)

மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.

பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.

இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.

பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

thanks:kalaiyakam